நாடாளுமன்றத்தில் இன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்யவிருக்கும் ரயில்வே பட்ஜெட்டில் தென் தமிழக மாக்களின் எதிர்பார்ப்புகளும், நீண்ட நாள் கோரிக்கைகளும் கவனிக்கப்படுமா என தென் தமிழக மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வழக்கமாக ரயில்வே பட்ஜெட்டில் வட மாநிலங்களுக்கும், வட தமிழகத்துக்கும் அளிக்கும் முக்கியத்துவம், தென் தமிழகத்துக்கு அளிக்கப்படுவதில்லை. சென்ற முறை பட்ஜெட்டில், புதிய ரயில்கள் மற்றும் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. எனவே, இன்றைய பட்ஜெட்டில், கடந்த முறை விடுபட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தென் தமிழக திட்டங்களான, மதுரை-கன்னியாக்குமரி இரட்டை ரயில் பாதைக்கான திட்டத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியில் பெரும்பான்மையான நிதி இன்னமும் ஒதுக்கீடு செய்யவில்லை இந்த முறை பட்ஜெட்டில் அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் ரயில் எஞ்ஜின் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. கன்னியாக்குமரி, நாகர்கோவில் ரயில் நிலையங்களை ரயில்வே முனையங்களாக மாற்றும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என எதிர்பார்ப்பு உள்ளது.
கிடப்பில் போடப்பட்டுள்ள தென் மாவட்ட திட்டங்களான, சபரிமலை ரயில் பாதை திட்டம், கேரளா-வேளாங்கண்ணி வாரந்திர ரயில், நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வார இறுதி சிறப்பு ரயில், கன்னியாக்குமரி-டெல்லி இடையே இயக்கப்பட்டுவரும் திருக்குறள் ரயிலை வாரம் இரு முறையில் இருந்து, தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை. என பல திட்டங்களில் தென் மாவட்டங்கள் கவனிக்கப்படாமல் இருப்பதால், இந்த முறையாவது அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.