ரயில்வே பட்ஜெட் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ரயில்வே பட்ஜெட் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
நாளை பிப்ரவரி 25ஆம் தேதி மக்களவையில் ரயில்வே பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ரயில்வே பட்ஜெட் என்றாலே கட்டண உயர்வு, புதிய ரயில்கள், ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய பொதுவான எதிர்பார்ப்பையே நாம் பார்ப்பது வழக்கம்.
ரயில்வே பட்ஜெட்டை முழுமையாக பார்க்க வேண்டும். ரயில்வே பட்ஜெட்டில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளடங்கி இருக்கும். ஒன்று அதன் அன்றாட வரவு, செலவு, மிச்சம் பற்றியது. இன்னொன்று ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலீடு செய்வது பற்றியது.
இப்போது நடப்பாண்டு 2015-16ம் ஆண்டாகும். இதற்கான பட்ஜெட் 2015 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில் 2013-14ம் ஆண்டின் சரி செய்யப்பட்ட வரவு-செலவு-மிச்சம் பற்றிய இறுதிக் கணக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
2013-14ல் ரயில்வேயின் பயணக் கட்டணம் சரக்குக் கட்டணம் வசூலித்த வகையில் கிடைத்த மொத்த போக்குவரத்து வரவு ரூ.1.39 லட்சம் கோடியாகும். இத்துடன் பல்வகை வரவு ரூ.3,655 கோடி சேர்ந்து ரூ.1.43 லட்சம் கோடியாகும்.
இதில் அன்றாட நடை முறை செலவு ரூ.97,570 கோடியாகும். இத்துடன் தேய்மான நிதிக்கு ஒதுக்கியது ரூ.7,900 கோடி. ஓய்வூதிய நிதிக்கு ஒதுக்கியது ரூ.24,850 கோடி. வேறு வகை செலவு ரூ.1,144 கோடியாகும். ஆக மொத்த செலவு ரூ.1.41 லட்சம் கோடியாகும்.
நிகர வருமானம் ரூ. 11,749 கோடியாகும். இதிலிருந்து மத்திய அரசுக்கு ரயில்வே ரூ.8,008 கோடி லாப பங்கீடாக கொடுத்தது போக நிகர லாபம் ரூ.3,740 கோடியாகும். மொத்த வரவு ரூ.100 என்றால் மொத்த செலவு ரூ.93.5 ஆகும். இதை 93.5 செலவு சதவீதம் (ஆபரேட்டிங் ரேசியோ) என்கிறோம்.
2014-15 ஆம் ஆண்டுக்கான இறுதிக் கணக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில்தான் தெரிய வரும். ஆனால் அதன் பட்ஜெட் மறுமதிப்பீடு என்னவென்று 2015-16 பட்ஜெட்டிலேயே சொல்லப்பட்டுள்ளது. அதன்படி மொத்த வரவு ரூ.1.64 லட்சம் கோடியாகும். மொத்த செலவு ரூ.1.49 லட்சம் கோடியாகும். செலவு சதவீதம் 92.5 ஆகும். நிகர வருமானம் ரூ.15,198 கோடியாகும்.
இதிலிருந்து மத்திய அரசுக்கு ரூ.9,135 கோடி லாப பங்கீடாக கொடுக்கப்பட்டுள்ளது. நிகர லாபம் ரூ .6,053 கோடியாகும். நடப்பு நிதி ஆண்டு 2015-16 ஆகும். இதற்கான பட்ஜெட் மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி எதிர்பார்க்கப்பட்ட மொத்த வரவு ரூ.1.88 லட்சம் கோடியாகும். மொத்த செலவு ரூ .1.63 லட்சம் கோடியாகும்.
செலவு சதவீதம் 88.5 என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட நிகர வருமானம் ரூ.25,076 கோடியாகும். இதில் லாபப் பங்கீடாக மத்திய அரசுக்கு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது ரூ.10,810 கோடியாகும். எனவே நிகர லாபம் ரூ.14,265 கோடியாகும். இந்த நிகரலாபம்தான் ரயில்வே திரட்டும் நிதியாகும். இதனை அகநிதியாக்கம் எனலாம் (இன்டெர்னல் ரிசோர்ஸ் ஜெனரேசன்).
நடப்பு நிதியாண்டான 2015-16ல் சரக்கு போக்குவரத்தும் பயணிப் போக்குவரத்தும், சென்ற ஆண்டைவிட கூடுதலாக எவ்வளவு வரும் என்று எதிர்பார்த்தோமானால், அந்தளவு கூடுதல் வருமானம் வரவில்லை. எதிர்பார்த்த வரவில் ரூ.5,000 கோடி குறையும் என்று ரயில்வேத் துறை எதிர்பார்க்கிறது.
எனவே அந்தளவு அன்றாடச் செலவை (4.2 சதம்) வெட்டுவதற்கு நவம்பரிலேயே நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே நிர்வாகங்களுக்கும், ரயில்வே வாரியம் அறிவுரை வழங்கி விட்டது!
காலிப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஆணைக்குக் காத்திருப்பவர்களை அந்த இடங்களில் நியமிப்பதைக் கூட தள்ளி வைக்கச் சொல்லியுள்ளது வாரியம்!