Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோபால்தாசனின் நீயும் நானும்- புத்தக விமர்சனம்

Advertiesment
கோபால்தாசனின் நீயும் நானும்- புத்தக விமர்சனம்

மெ. மங்கள மேரி

, புதன், 4 ஜனவரி 2017 (13:37 IST)
காதலை கவிதையில் சொல்லுவர், இவரோ கவிதையில் ஒரு இனிய காதல் கதையை  தருகிறார். இம்முயற்சி பாராட்டுக்குரியதாகும். எளிய தமிழ் நடையில் யதார்த்தமான பின்னணியில் சென்னைக் காதலின் மணம் வீசுகிறது. நடுத்தர குடும்பத்திலிருந்து வேலைக்கு செல்பவர்களின் பின்னணியில் கதை பயணிக்கிறது.


 

நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களையும் சூழலையும் கண்முன்னே கொணர்கிறார் கவிஞர். கோபால்தாசன். எளிய நடையில் வழக்கத்தில் உள்ள சென்னைத் தமிழ் மற்றும் ஆங்காங்கே ஆங்கிலம் கலந்த வழக்கச்சொற்களை  பயன்படுத்தி இருப்பது, இப்புத்தகம் அனைவரும் படித்து இன்புறக்கூடிய ஒன்று என்று அடையாளப் படுத்துகிறது.

லேசாக அதே சமயம் அழுத்தமாக காட்சிகள் நகர்கின்றன. அவை திரைப்பட காட்சிகள்போல் நம் கண்முன்னே விரிகின்றன. கதை முழுவதும் கதாப்பாத்திரங்களின் பெயர்களை எங்கும் குறிப்பிடாமல், 'நான்' அவள்' அன்று கவிஞர் தன்னை முன்னிலைப் படுத்தி கதையை நகர்த்துவது மற்றுமொரு சுவாரஸ்யம்.

"முதல் முறையாக என் கையைப் பிடித்துக்கொண்டு அழுகிறாய்" என்னும் வரிகளில் காதலின் தூய்மையும் கண்ணியமும் ஒளிர்கிறது. தூக்கமில்லாத இரவுகள், தொலைபேசியில் இரவு அரட்டை, பரிசு பொருள் பரிமாற்றம், கொஞ்சல்கள், செல்லக் கொட்டு, சினிமா, பூங்கா சந்திப்பு என்று இயல்பான காதல் காட்சிகள்.

"இந்தியக் குடிகள் இந்தியக் குடிகாரனால் அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது" என்ற வரிகளில் தற்போதைய தமிழ் நாட்டின் நிலையும், "வீட்டில் வைத்துக்கொள்ளக் கூடிய பச்சிளங்குழந்தைகளை குப்பைக் கிடங்குகளில் எறிந்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்" என்ற வரிகளில் சமூகத்தின் மீதான கோபமும் வெளிப்படுகிறது. இச்சமூகச் சூழலுடன் கலந்த நவீன காதல் கதையாகவே இவரின் படைப்பு உள்ளது. பேருந்தில் பாடிக்கொண்டு பைசா கேட்பவர்கள், கோயிலில் கையேந்தும் பிச்சைக்காரன், இரவில் பெண் தோழியை தனியே அனுப்ப மனமில்லாமல் வீடு வரை துணைக்கு வரும் நட்பு, பேருந்து நிலையங்களில் நிற்கும் விலைமாதர்கள் என்று கசப்பான உண்மையின் தூரிகைச் சிதறல்கள்.

 
webdunia

 

பெண்கள் காதல் என்ற பெயரில் தாய் தந்தையை மறந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுதல் தவறு என்றும் குடும்ப நலனுக்காக காதலை மறுத்து குடும்ப பாரத்தை ஏற்கும் பெண்களும் உள்ளனர் என்றும் கதையின் இறுதியில் அழுத்தாமாக பதிவு செய்திருக்கிறார். தான் வேலைக்காக வெளியூர் செல்வதை விரும்பாத காதலனின் மறுப்பை மீறி "எனக்கிது சரியாப்படுது.. இதுரொம்ப யோசிச்சு எடுத்த முடிவு" என்று கூறிச் செல்வதும், கணவன் அடிச்சா பட்டுகிட்டு காலடியிலேயே விழுந்து கிடைக்கணும்னு கட்டயாமில்லையே....தப்பை தட்டிகேட்பேன்" என்று சொல்வதும் இன்றைய பெண்களின் மனநிலையைக் கோடிட்டு காட்டுகிறது.

மொத்தத்தில், கவிஞர். கோபால்தாசனின் "நீயும் நானும்" அனைவர் மனதிலும் இனிக்கக் கூடிய ஒரு புத்தகமாகும்.

-மெ. மங்கள மேரி
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் எடையை குறைப்பதில் கைகொடுக்கும் மருத்துவக் குணம் நிறைந்த முட்டைகோஸ்!