அதிரடி சரவெடி போலீஸ் சூர்யவன்ஷி! – காப் யூனிவர்ஸ் ட்ரெய்லர்!

திங்கள், 2 மார்ச் 2020 (14:01 IST)
அக்‌ஷய் குமார் போலீஸாக நடிக்கும் ‘சூர்யவன்ஷி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

சிங்கம், சிம்பா படங்களை தொடர்ந்து சூர்யவன்ஷி படத்தின் மூலம் தனது அனைத்து போலீஸ் கதாப்பாத்திரங்களையும் ஒரே படத்தில் இணைக்கிறார் ரோகித் ஷெட்டி.

ஹரி இயக்கத்தில் தமிழில் வெளிவந்து ஹிட் அடித்த படம் ‘சிங்கம்’. சூர்யா நடித்த இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. இந்த கதையை இந்தியில் சிங்கம் என்ற பெயரிலேயே அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் செய்தார் இந்தி இயக்குனர் ரோகித் ஷெட்டி.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தானே சொந்த கதையை எழுதி ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தை இயக்கினார். அதிலும் அஜய் தேவ்கனே நடித்திருந்தார். இந்நிலையில் போலீஸ் கதாப்பாத்திரங்கள் இணைந்த ஒரு ஆக்‌ஷன் பட தொடரை இயக்க ரோகித் ஷெட்டி திட்டமிட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த வருடம் வெளியானது சிம்பா. ரன்வீர் சிங் போலீஸாக நடித்த இந்த படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் அஜய் தேவ்கன் ஸ்பெஷல் விசாரணை அதிகாரியாக வருவார். அதிலேயே சூர்யவன்ஷி என்ற போலீஸ் கதாப்பாத்திரத்தில் அக்‌ஷய் குமார் போஸ்ட் கிரெடிட்டில் வருவார்.

தற்போது அக்‌ஷய் குமாரின் ‘சூர்யவன்ஷி’ கதாப்பாத்திரத்தை மையப்படுத்திய படம் வெளியாக இருக்கிறது. கத்ரீனா கைஃப், ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் மார்ச் 24ம் தேதி வெளியாக இருக்கிறது.

அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் மற்றும் ரன்வீர் சிங் ஆகிய பாலிவுட்டின் மூன்று முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ள படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் யாரு அம்மன் வேடம் போடனும்கிற வெவஸ்தை இல்ல - கிண்டலடித்தவருக்கு ஆர். ஜே பாலாஜி பதிலடி!