இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கானப் பிரிவில் பீரியடு என்ற ஆவணப்படம் விருதை வென்றுள்ளது.
உலகளவில் வழங்கப்படும் திரை விருதுகளில் ஆஸ்கார் விருதும் மிக முக்கியமான விருது. ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவுட் படங்களுக்கு பலப் பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டுப் படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியப் பலப் பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதில் இந்தாண்டு தமிழர் ஒருவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று சிறந்த ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ’பீரியட். என்ட் ஆஃப் செண்ட்டன்ஸ்’ என்ற ஆவணப்படம் இந்தியாவில் மாதவிடாயின் போது சுத்தமான நாப்கின்களை பயன்படுத்தாமல் இருக்கும் பெண்களுக்கு அதுப் பற்றிய விழிப்புணர்வையும், அவர்களுக்கு நாப்கின் பயன்படுத்துவது மற்றும் அதைத் தயாரித்து சந்தைப் படுத்துதல் ஆகியவற்றைக் கற்றுத்தரும் விழிப்புணர்வுப் படமாக உருவாகியிருந்தது. இந்தக் குறைந்த விலை நாப்கின்கள் உற்பத்தி செய்யும் எந்திரங்களை வடிவமைத்தவர் கோவையைச் சேர்ந்த முருகானந்தம் அருணாச்சலம் ஆகும். அவரைப் பற்றியும் இந்த ஆவணப்படம் பேசுகிறது.
இந்தப் படத்திற்கு ஆஸ்கர் கிடைத்திருப்பதின் மூலம் ஏ ஆர் ரஹ்மானுக்கு பிறகு தமிழர் ஒருவர் ஆஸ்கர் விருதுப் பெற்ற படத்தின் பங்காற்றியவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் அருணாச்சலம் முருகேசன். ஏற்கனவே பாலிவுட் இயக்குனர் பால்கி இவரது கதையை மையப்படுத்தி பேட்மேன் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.