கேரளாவே மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் நடிகர் மம்மூட்டி டிவிட்டர் பக்கத்தில் தனது பட டிரெய்லரை வெளியிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆசியாவின் மிகபெரிய அணையாக திகழும் இடுக்கி அணை, வரலாறு காணாத அளவு நிரம்பியது. 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் நீர் திறந்திவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து முகாம்களில் தங்கி வருகின்றனர். கேரள மக்களுக்கு உதவும் வகையில், நாடெங்கும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
கேரளாவில் பெய்த மழையில் இதுவரை 58 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ராணுவமும், பேரிடர் மீட்பு படையினரும் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் நடிகர் மம்முட்டி மலையாளத்தில் நடித்து வரும் தன்னுடையை ‘குட்ட நாடன் பிளாக்' என்ற படத்தின் டிரெய்லரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கேரளாவே தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், இப்படி பொறுப்பற்று செயல்படலாமா? என மம்முட்டியை கண்டித்து கேரள ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.