குரங்குகளை ஹனுமானின் அவதாரமாக பார்ப்பவர்கள் நமது நாட்டு மக்கள். அதற்கு தேங்காய், பழம் என்று கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்ளும் நம்பிக்கையும் நமது நாட்டில் உண்டு. ஆனால், இறந்துவிட்ட குரங்கு ஒன்று கனவில் வந்து, “தனக்கும் சம்பிரதாயப்படி செய்ய வேண்டிய உத்தரகிரியை செய்தால் உங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீரும்” என்று கூறியதாக எங்காவது நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?இது மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லம் மாவட்டத்திலுள்ள பார்சி கிராமம். இங்கு கடந்த ஆண்டு தீபாவளி அன்று நாய் ஒன்று கடித்ததில் ஒரு குரங்கு செத்துவிட்டது. ஹனுமானின் அவதாரமாக குரங்கை கருதுவதால் இக்கிராமத்து மக்கள் இறந்துபோன அந்தக் குரங்கை முறைப்படி தகனம் செய்துவிட்டனர்.ஓராண்டு கழித்து, அக்கிராமத்திலுள்ள பூசாரி ஒருவரின் கனவில் வந்த அந்தக் குரங்கு, தனக்கும் முறைப்படி எல்லா சம்பிரதாய ரீதியான சடங்குகளையும் செய்து உத்தரகிரியை செய்தால், உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் தீ்ர்ந்துவிடும் என்றும், நல்ல மழை பெய்து வளம் கொழிக்கும் என்றும் கூறியதாம். தான் கண்ட கனவு குறித்து அக்கிராமத்து மக்களிடம் கூறியுள்ளார் பூசாரி சங்கர் சிங். இதனைக் கேட்ட கிராமத்து மக்கள் பூசாரி சொன்னதை உறுதிப்படுத்திக்கொள்ள பக்கத்து கிராமத்திற்குச் சென்று, அங்கு நாக தேவதை புகுந்து குறிகூறும் ஒரு கிராமத்தவரிடம் சென்று முறையிட, அவரும் அதை உறுதி செய்துள்ளார்.குரங்கின் கோரிக்கையை நிறைவேற்ற முடிவு செய்த கிராமத்து மக்கள் அக்கம் பக்கத்திலுள்ள 15 கிராமத்தினருக்கு செய்து அனுப்பி ஒரு பெரிய உத்தரகிரியை ஏற்பாடு செய்தனர். இறந்தவருக்கு காரியம் செய்வதுபோல, இரவெல்லாம் கண்விழித்து, இராமாயணத்தின் ஒரு பகுதியை சித்திரிக்கும் கதை நாடகம் நடத்தி, உஜ்ஜைனில் சிப்ரா நதிக்கரையில் உத்தரகிரியை நடத்தி நடத்தினராம்.
இது நடந்து முடிந்த இரண்டு நாட்களில் அக்கிராமத்தில் பெரும் மழை பெய்து, பயிர்கள் செழித்தனவாம். இந்நிகழ்வு அப்பகுதியில் பரவலாகப் பேசப்படுகிறது. அம்மக்களைப் பொறுத்தவரை நடந்து அனைத்தும் அனுபவப் பூர்வமாக நிஜம்.
ஆனால் உங்களால் இதையெல்லாம் நம்ப முடிகிறதா? எங்களுக்கு எழுதுங்கள்.