ஆவி பிடித்து ஆட்டிய கிராமம்!
ஆவி தங்களின் உடலிற்குள் புகுந்து ஆட்டியதாக கூறப்பட்ட நிகழ்வுகள் பலவற்றை நாம் பார்த்தோம். ஆனால் ஒரு கிராமத்தில் வாழும் அனைவரையும் ஆவி பிடித்து ஆட்டியதாக கேள்வி்ப்பட்டுள்ளீர்களா?மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனிற்கு அருகே உள்ளது பாய்டா என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் எந்த வியாதியால் பாதிக்கப்பட்டனர் என்று தெரியாமலேயே மரணமடைந்தனர். இதனால் அச்சமுற்ற கிராமத்தினர், அவர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிய ஒரு தாந்திரியை பார்த்தனர். மந்திர தந்திர வித்தைகளில் தேர்ந்தவர்களை இப்பகுதியில் தாந்திரி என்று அழைக்கின்றனர்.உங்களுடைய கிராமத்தில் உலவிவரும் ஒரு ஆவியின் தாக்குதலால்தான் அந்த 5 பேர் உயிரிழந்தனர் என்றும், அதனை விரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மற்றவர்களையும் அது பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
அதனை விரட்ட அந்த தாந்திரியை தங்களுடைய கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளனர். கிராமத்தில் தங்கியிருந்த அயலூர்காரர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டு, அந்த கிராமத்தினரை வைத்து அந்த ஊர் கோயிலில் சில பூசைகளைச் செய்த அந்த தாந்திரி, வினோதமான உடையணிந்து சில மந்திர தந்திர வேலைகளைச் செய்துள்ளார். அப்பொழுது அந்த கிராமத்தில் ஒரு பயங்கர சூழல் நிலவியதாக கிராம மக்கள் அச்சத்துடன் கூறினர்.தனது மந்திர, தந்திர வேலைகளை முடித்த பின்னர், கிராமத்தின் எல்லையைச் சுற்றி பாலைத் தெளித்த அந்த தாந்திரி, அந்த ஆவி கிராமத்தை விட்டு போய்விட்டதாகக் கூறியுள்ளார். கிராமத்து மக்களும் தாந்திரியை வெகுவாக பாராட்டி அனுப்பி வைத்துள்ளனர்.தங்களுக்கு எதுவெல்லாம் புரியவில்லையோ அல்லது எதுவெல்லாம் வினோதமாக தெரிகின்றதோ அதனையெல்லாம் ஒரு அதீத சக்தியென்று நமது நாட்டு மக்கள் நம்பி விடுகின்றனர்.
நமது மக்களின் இந்த அறியாமையை பயன்படுத்திக் கொண்டு சிலர் நன்கு சம்பாதிக்கின்றனர், ஏன் சாமியாராகவே ஆகி அவர்களின் வழிகாட்டியாகவும் ஆகிவிடுகின்றனர்.
இப்படிப்பட்ட நம்பிக்கைகள், பேய், பிசாசு ஆகியவற்றைப் பற்றி நீங்கள் என்னதான் நினைக்கின்றீர்கள், உங்களின் அனுபவம் என்ன? இதெல்லாம் அஞ்ஞானமா அல்லது நாம் அறியாத சக்திகளா? ஆவி என்றால் என்ன? உங்களுக்குத் தெரிந்தால் எங்களுக்கு எழுதுங்கள்.