கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு!
நமது நாட்டில் புனித தலங்கள் என்று இல்லாத இடமே இல்லை என்று கூறலாம். எங்கு நோக்கினும் கோயில்களும், தர்காக்களும், மசூதிகளும், தேவாலயங்களும், புத்த, ஜைன ஆலயங்களும், பல்வேறு மதத்தினரின் புனிதத் தலங்களும், வழிபாட்டுத் தலங்களும், ஜீவ சமாதிகளுமாய் நமது நாடு திகழ்கிறது. அதனால்தான் நமது இந்திய நாட்டை புனித நாடாகக் கருதுகின்றனர்.இந்தியாவில் புனிதம் என்றதும் முதலில் நமது நினைவுக்கு வருவது கங்கை நதிதான். கங்கையில் நீராடி தங்களது பாவங்களில் இருந்து விடுபடவேண்டும் என்பதும், இறந்த பின் தங்களது அஸ்தி கங்கயில் கரைக்கப்பட வேண்டும் என்றும் கூறுவதில் இருந்து அதன் புனிதத் தன்மை உணரப்படுகிறது.அதுமட்டுமின்றி, கங்கையில் தங்களது உயிரை விடுபவர்கள் நேரே இறைவனை அடைவார்கள் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
ஆனால், இந்த கங்கைக்கு இருக்கும் அதே முக்கியத்துவம், காவிரியில் இருந்து பிரிந்து வரும் ஒரு கிளை ஆறுக்கும் இருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், வரலாற்றுப் பெருமைமிக்க தஞ்சாவூர் நகரில் வாழும் மக்கள், அங்குள்ள ராஜாகோரி என்ற சுடுகாட்டை கங்கை கரைக்கு இணையான புனித இடமாகவும், அதனை ஒட்டி ஓடும் காவிரியின் கிளை ஆறான வடவாறை புனித நதியாகவும் கருதுகின்றனர். கங்கைக்கு ஈடாக அல்ல அதையும் விட ஒரு மடங்கு அதிகமாகவே அதனை புனிதமாகக் கருதுகின்றனர். பல வயதானவர்கள், தங்களது பிள்ளைகளிடம், தாங்கள் இறந்தால் அந்த ராஜா கோரி சுடுகாட்டில்தான் தமது உடல் எரிக்கப்பட வேண்டும் என்றும், தனது அஸ்தி அங்கு ஓடும் வடவாற்றில்தான் கரைக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளோம். நமது எதிர்ப்பார்பிற்கு மாறாக, நாம் பார்த்த சுடுகாடுகளிலேயே மிகப் பெரிய சுடுகாடாகத்தான் இராஜா கோரி காணப்பட்டது. அங்கு ஒரே நேரத்தில் 25 பிணங்களைக் கூட எரிக்க முடியும் என்று அங்கு வெட்டியானாக இருந்து வருபவர் கூறினார். இந்த சுடுகாட்டில் தஞ்சை இராஜ பரம்பரையினர் எரிப்பதற்கும், புதைப்பதற்கும் தனி இடம் இருந்தது. பிராமணர்களுக்கு தனி சுடுகாடு, மற்றொரு இராஜ பரம்பரையினரான நாயக்கர்களுக்கு தனி சுடுகாடு என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சாதிய அமைப்பு கட்டியம் கூறி காப்பாற்றிக் கொண்டிருந்தது இந்தச் சுடுகாடு.
சுடுகாட்டை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கிறது வடவாறு. இந்த நதியினை மணிமுத்தாறு என்றும் அழைக்கின்றனர். இது காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்று. இந்த ஆற்றைத்தான் கங்கைக்கு இணையாக இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இந்த ஆற்றில் ஒருவரது அஸ்தி கரைக்கப்பட்டால், அவர் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி அவரது ஆத்மா நேரே சொர்கத்திற்குச் செல்லும் என்பதும் அங்கு வாழ்பவர்களின் நம்பிக்கை.
இந்த விடயங்களை எல்லாம் தற்போதைய சந்ததியினர் நம்ப மாட்டார்கள். ஆனால் வயதானவர்கள் இந்த சுடுகாடு பற்றிய விஷயங்களை நம்புகின்றனர். தங்களது மரணத்திற்குப் பிறகு தங்களது விருப்பம் நிறைவேற வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
இதுபோன்ற அதிசயமான இடம் பற்றி நீங்கள் எங்கேனும் அறிந்திருக்கின்றீர்களா? இருந்தால் எங்களுக்கு எழுதுங்கள்.