Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தியோப்பியா டீக்ரே சிக்கல்: பிபிசி செய்தியாளர் கிர்மே கெப்ரு தடுத்து வைப்பு

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (10:45 IST)
எத்தியோப்பியாவில் உள்நாட்டுச் சண்டை நடந்துகொண்டிருக்கிற டீக்ரே வட்டாரத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவரை ராணுவம் தடுத்து வைத்துள்ளது.

பிபிசி டீக்ரின்யா சேவையில் பணியாற்றும் அவரது பெயர் கிர்மே கெப்ரு. சண்டை நடந்துகொண்டிருக்கும் வட்டாரத் தலைநகர் மெகல்லேவில் உள்ள ஒரு  காபிக்கடையில் இருந்து கெப்ரு உள்ளிட்ட 5 பேர் அழைத்துச் செல்லப்பட்டதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
 
மெகல்லேவில் உள்ள ராணுவ முகாமுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த கைதுக்கான காரணத்தை பிபிசியால் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், இது தொடர்பான தங்கள் கவலையை எத்தியோப்பிய அதிகாரிகளிடம்  பகிரந்துகொண்டுள்ளது பிபிசி.
 
ஃபினான்சியல் டைம்ஸ் மற்றும் ஏ.எஃப்.பி. செய்தி முகமை ஆகியவற்றுக்குப் பணியாற்றும் உள்ளூர் பத்திரிகையாளர் தமீரத் யெமானே மற்றும் மொழி  பெயர்ப்பாளர்கள் அலுலா அகாலு, ஃபிட்சம் பெர்ஹானே ஆகியோரும் கடந்த சில நாள்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
 
டீக்ரே கிளர்ச்சியாளர்களுடன் கடந்த நவம்பர் மாதம் முதல் எத்தியோப்பிய அரசுப் படைகள் மோதி வருகின்றன. இந்த சண்டை தொடங்கியதில் இருந்து  ஊடகங்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம்தான் சில பன்னாட்டு ஊடக நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்தது.
 
ஃபினான்சியல் டைம்ஸ், ஏ.எஃப்.பி. இரண்டுமே இந்த சண்டை குறித்து செய்தி சேகரிக்க அனுமதி பெற்றிருந்தன.
 
ராணுவ சீருடையில் இருந்த படையினரே கிர்மேவை கைது செய்யும் நடவடிக்கையை செயல்படுத்தியதாக கண்ணால் கண்ட சாட்சிகள் பிபிசிக்கு தெரிவித்தன.
 
"எங்களுடைய கவலையை எத்தியோப்பிய அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு அவர்களுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்" என்று பிபிசி செய்தித்  தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
டீக்ரே மக்கள் விடுதலை முன்னணியை வீழ்த்திவிட்டதாக அரசு தெரிவித்திருந்தாலும், சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது.
 
இந்த சண்டையில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
 
சண்டையின் அனைத்துத் தரப்பாலும் கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாகவும், மனிதாபிமானச் சிக்கல் மோசமடைவதாகவும் வெளியாகும் செய்திகளை அடுத்து இது  தொடர்பான சர்வதேசக் கவலைகள் உருவாகியிருப்பதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
 
"சர்வதேச ஊடகங்களுக்குத் தவறான தகவல்களைத் தருகிறவர்கள்" மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எத்தியோப்பிய ஆளும் கட்சி நிர்வாகி ஒருவர் சமீபத்தில்  எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 
டீக்ரே சிக்கலின் பின்னணி
 
2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் முன்புவரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும், ராணுவத்திலும் பெரிய ஆதிக்கம்  இருந்தது.
 
அபிய் அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
 
2019ம் ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருந்த பல்வேறு இனக்குழுக்களின் கட்சிகளை இணைத்து ஒரே தேசியக் கட்சியை அமைத்தார் அவர். ஆனால், இந்தக் கட்சியில் இணைய டிபிஎல்எஃப் எனப்படும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது.
 
கடந்த செப்டம்பர் மாதம் டீக்ரேவில் பிராந்தியத் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு விதித்திருந்த நாடு  தழுவிய தடையை மீறி இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்று அறிவித்தார் பிரதமர் அபிய் அகமது.
 
அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று டீக்ரே நிர்வாகம் கருதுகிறது.
 
டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு ஒரு எல்லையைக் கடந்துவிட்டது என்றும் கூறி  அதன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அபிய் அகமது. ஆனால், அந்த ராணுவ முகாம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்கிறது டீக்ரே மக்கள்  விடுதலை முன்னணி.
 
இதனிடையே டீக்ரே மக்கள் விடுதலை முன்னணியை வீழ்த்திவிட்டதாக எத்தியோப்பியா அறிவித்தது. ஆனால், சண்டை தொடர்ந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments