Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக உணவு தினம்: 69 கோடி பேர் பட்டினியில் வாழும் உலகில் நாம் எதிர்கொள்ளும் அபாயம் என்ன?

Advertiesment
Poverty
, சனி, 15 அக்டோபர் 2022 (22:21 IST)
முன்னெப்போதும் நிகழ்ந்திராத அளவுக்கு உணவுப் பாதுகாப்பு சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரிக்கும் என்ற ஐ.நா எச்சரிக்கைக்கு நடுவே உலக உணவு தினம் (அக்டோபர் 16) கடைபிடிக்கப்படுகிறது.

 
"எத்தியோப்பியா, மடகாஸ்கர், தெற்கு சூடான், ஏமன் ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் பஞ்சம் போன்ற பிரச்னைகளை அனுபவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில், புர்கினோ ஃபாசோ, நைஜீரியாவில் சமூகரீதியாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்களும் இதே பிரச்னைகளுக்கு உட்பட்டுள்ளனர்," என்கிறது ஐ.நா சபை.

 
கடும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயத்திலுள்ள நாடுகளில் வாழும் 4.1 கோடி மக்களுக்கு ஆதரவளிக்க உடனடியாக நிதியுதவி செய்யுமாறு ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது.
 
 
பிரிட்டனை தளமாகக் கொண்ட தன்னார்வ நிறுவனமான தி ஹங்கர் ப்ராஜெக்ட்டின் தரவுகளின்படி, உலகளவில் 690 மில்லியன் மக்கள் நாள்பட்ட பட்டினியோடு வாழ்கின்றனர். அந்த 690 மில்லியனில் (69 கோடி) 60% பேர் பெண்கள். 850 மில்லியன் பேர் கோவிட்-19 பேரிடர் காரணமாக வறுமைக்குள் தள்ளப்படும் அபாய நிலையில் உள்ளனர்.

 
உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நடைமுறையில் அதிகரித்துள்ள உணவு விலைகள் எதைக் குறிக்கின்றன, உணவு வறுமையைச் சரிக்கட்ட மாற்று வழிகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம். ஆனால், முதலில் உணவுப் பொருட்களின் விலை ஏன் உயர்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.
 
 
 
சர்வதேச உணவு நிறுவனமான கிராஃப்ட் ஹெய்ன்ஸ், தொற்றுநோய்க்குப் பிந்தைய "பணவீக்கத்தின்" விளைவாக மக்கள் "உணவு விலைகள் அதிகமாவதற்குப் பழகிக் கொள்ள வேண்டியிருக்கும்" என்று எச்சரித்துள்ளது.

 
மும்பையிலுள்ள ரா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் டாக்டர் சரிகா குல்கர்னி, கிராஃப்ட் ஹெய்ன்ஸின் தலைவரான மிகுவல் பட்ரிசியோவின் கருத்துடன், உணவு விலைகள் அதிகமாக இருக்கும் என்று ஒப்புக் கொள்கிறார். ரா அறக்கட்டளை இந்தியாவிலுள்ள பழங்குடி சமூகங்களுக்கு சிறந்த, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்குவதற்காக உழைத்து வருகிறது.

 
பெருந்தொற்றுப் பேரிடரின்போது, பல நாடுகளில் பயிர்கள் முதல் தாவர எண்ணெய் வரையிலான மூலப்பொருட்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், நோய்ப் பரவல் ஆகியவை, உற்பத்தி மற்றும் விநியோகத்தைப் பாதித்தது.

 
உற்பத்தி மற்றும் விநியோகத்தை மீண்டும் தொடங்கியபோது, பலரால் மீண்டும் ஏற்பட்டுக் கொண்டிருந்த தேவையின் அளவுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இது அதிக விலைக்கு வழிவகுக்கிறது. எரிசக்தி விலை மற்றும் ஊதியம் அதிகமானதும் உற்பத்தியாளர்களுக்கு சுமையைச் சேர்த்துள்ளன.

 
"விலைகள், தேவை மற்றும் விநியோகத்தோடு நேர்மறை தொடர்பைக் கொண்டுள்ளன. மக்கள் தொகை அதிகரித்து, உணவுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீர் தேவை, மண்ணின் தரம் கெடுதல், காலநிலை மாறுபாடுகளால் அதிகரிக்கும் நிகழ்வுகள், புதிய தலைமுறையினர் வேளாண்மை மீது ஆர்வம் காட்டாதது போன்ற பல்வேறு காரணங்களால் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவு குறைந்து கொண்டிருக்கிறது.

 
விவசாயிகள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் உணவு விலையிலும் பிரதிபலிக்கிறது," என்கிறார் வறுமை ஒழிப்பு நிபுணர் டாக்டர் குல்கர்னி.
 
 
 
மனிதாபிமான விவாகரஙகளுக்கான ஐ.நாவின் துணைச் செயலாளர் ஜெனரல் மார்ட்டின் க்ரிஃபித்ஸ், "பஞ்சம் இறுதியாக கதவைத் திறந்துகொண்டு வரும்போது, மற்ற அச்சுறுத்தல்கள் சிறியதாகிவிடுகின்றன," என்கிறார்.

 
அதிகரித்து வரும் வறுமை, உணவுப் பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்படும் நிலையில் பெண் குழந்தைகளும் பெண்களும் தான் இருக்கின்றனர்.
 
 
"சமீபத்தில் சிரியாவில் இருந்தபோது நான் கேள்விப்பட்டதைப் போல, உணவுக்காக பாலுறவு கொள்ளுதல், விரைவிலேயே திருமணம் செய்துகொள்வது, குழந்தைத் திருமணங்களை நாடுவது உட்பட, தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க அவர்கள் மேற்கொள்ள வேண்டிய அவநம்பிக்கையான நடவடிக்கைகளைப் பற்றி பெண்கள் எங்களிடம் கூறினார்கள்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.
 
 
உலக அளவில் உணவுப் பாதுகாப்பற்ற மக்களில் சிறு-குறு விவசாயிகளும் உள்ளனர் என்கிறார் ஃபார்ம் ரேடியோ இன்டர்நேஷனல் அமைப்பின் திட்ட மேம்பாட்டுப் பிரிவின் மூத்த மேலாளர் கேரென் ஹாம்ப்சன்.

 
"தற்போதைய உணவுப் பொருட்களின் விலையேற்றம் இருமுனை கத்தியைப் போன்றது. வேளாண் குடும்பங்கள் தங்களால் சாகுபடி செய்ய முடியாத உணவுப் பொருட்களை வாங்க வேண்டும். எனவே அவர்களுடைய செலவுகள் உயரும் அல்லது உணவுப் பொருட்களுக்கான அணுகல் குறைகிறது. இதன் விளைவாக பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகின்றன," என்று ஹாம்ப்சன் பிபிசியிடம் கூறினார்.
 
 
மேலும், "மறுபுறம், கோட்பாட்டளவில் பார்க்கும்போது, உயரும் உணவுப் பொருட்களின் விலை, விற்கும் பொருட்களின் மூலம் அவர்கள் சிறந்த வருமானம் ஈட்டுவதைக் குறிக்கிறது. ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உணவுப் பொருட்கள் விலையேற்றம், குறிப்பாக சிறு, குறு விவசாயிகளுக்கு, அதிக வருமானத்தைக் கொடுப்பதில்லை."

 
டாக்டர் குல்கர்னி குறிப்பிடுவதைப் போல், வறுமையும் விலைகளும் நேர் விகிதாசாரம் கொண்டுள்ளன. வறுமை அதிகரித்து வருவதால், துரதிர்ஷ்டவசமாக விலைகளும் அதிகரித்து, அவர்கள் வைத்திருக்கும் சிறிய வரவு செலவுகளையும் அழிக்கின்றது.

 
"உணவுப் பொருட்களின் விலை ஏறுவது, ஏழை சமூகங்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு, பட்டினி, பல உடல்நலம் தொடர்பான சவால்களை ஏற்படுத்துகின்றது. உணவுப் பொருட்களின் விலை அதிகமாவது, மக்களை பசி, உடல்நலக் குறைவு மற்றும் வறுமையின் தீய சுழற்சியில் சிக்க வைக்கின்றன."

 
டெவலப்மென்ட் இனிஷியேட்டிவ்ஸ் என்ற ஓர் உலகளாவிய அமைப்பு, வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும் எதிர்திறனை அதிகரிப்பதற்கும், தரவுகள் மற்றும் ஆதாரங்களின் வலிமையைப் பயன்படுத்துகிறது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஹர்பிந்தர் கொலாகோட் டாக்டர் குல்கர்னி கூறுவதோடு உடன்படுகிறார்.

 
"குறிப்பாக தீவிர வறுமை அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவைப்படும் வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதில் உணவு குறிப்பிடத்தக்க விகிதம் இடம் பெறுகிறது.

 
அந்த உணவின் விலை உயர்ந்தால், அதிகமான மக்களால் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. அதாவது, அவர்கள் தீவிர வறுமைக்கு, தீவிர வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.
 
 
 
தான்சானியாவில் ஃபார்ம் ரேடியோ நிகழ்ச்சிகள், மக்கள் தங்கள் நிலம் மற்றும் இயற்கை வளங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்து விவசாயிகளுக்குக் கற்பிக்க உதவுகின்றன
 
 
வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதைக் குறைத்துக் கொள்வது, வெளிநாடுகளில் விடுமுறையைக் கழிக்கும் நாட்களைக் குறைப்பது அல்லது தங்கள் வரவுசெலவை கவனமாக நிர்வகிப்பதைச் செய்வார்கள். ஆனால், வளர்ச்சியடையாத நாடுகளில் உள்ள சிலருக்கு நிலைமை அவ்வளவு எளிதானதில்லை. மேலே குறிப்பிட்டுள்ளபடி, அவர்கள் உணவுக்காக உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்குக் கட்டாயத்தில் இருக்கின்றனர்.

 
ஐ.நா., பிராந்திய அமைப்புகள் மற்றும் அந்தந்த அரசுகள் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பின் சவாலை எதிர்கொள்ள வழக்கமான அணுகுமுறைகளைப் பின்பற்றலாம். உலகெங்கும் உள்ள பல தன்னார்வ நிறுவனங்கள் புதுமையான முறைகளில் கவனம் செலுத்துகின்றன.

 
"உணவு மற்றும் வாழ்வாதார உதவிகள் இணைந்து வழங்கப்பட வேண்டும்," என்கிறார் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் இயக்குநர் ஜெனரல், கு டோங்யு.
 
 
"வேளாண் உணவு முறைகளை ஆதரிப்பது, நீண்ட கால உதவிகளை வழங்குவது, உயிர் பிழைத்திருப்பதையும் தாண்டிய மீட்சிக்கான பாதையை அமைப்பதோடு எதிர்திறனையும் அதிகரிக்கின்றன. இதில் வீணடிக்க நேரமே இல்லை," என்று அவர் கூறினார்.
 
 
முட்டை தினம்: நாட்டுக் கோழி முட்டையில் சத்து அதிகமா?
 
ஆனால், அதிக பணத்தால் மட்டும் உணவு வறுமை தீர்க்கப்படாது என்று கொலாகோ பிபிசியிடம் கூறினார். "மக்களை வறுமையில் வைத்திருக்கும் அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகளில் தீவிர சீர்திருத்தம் தேவை," என்கிறார்.

 
"ஒவ்வோர் அரசாங்கம், நிறுவனம், வணிக, தன்னார்வ நிறுவனம் என்று பரந்த அளவில் அனைத்திலுமே உலகளாவிய முயற்சியை மேற்கொள்வது நமக்குத் தேவையாக உள்ளது. அந்த முயற்சி, தற்போதைய நிலையை மாற்றுவதற்கான அணுகுமுறையின் மையத்தில் ஏழை மக்களை வைக்க வேண்டும். அதோடு, மக்களை விட்டுவிட்டு முன்னேறுவதை நிறுத்தக்கூடிய உலகளாவிய அமைப்பை உருவாக்க வேண்டும்," என்றார்.
 
 
டாக்டர் குல்கர்னியின் கூற்றுப்படி, காலநிலைக்கு ஏற்ற வேளாண் முறையை அறிமுகப்படுத்துவது, மழைநீர் சேகரிப்பு திறன்களை மேம்படுத்துதல், விதைகள் மற்றும் பிற வேளாண்மை தொடர்பான மூலப் பொருட்களின் விலை குறைத்தல், சுய நுகர்வுக்குப் போதுமான அளவை வைத்துக்கொண்டு மீதியை விற்று வருமானம் ஈட்டுவதற்கு விவசாயிகளை ஊக்குவித்தல் போன்று காலநிலை மாற்றத்திற்குத் தகவமைக்கும் வகையில் மேம்படுத்த வேண்டியது அவசியம்.
 
 
 
"தேவையான ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலமும் நல்ல சாகுபடி மற்றும் வருமானம் கிடைக்கும் வகையிலான வழிகளை உருவாக்குவதன் மூலமும் விவசாயத்தை முழு நேரத் தொழிலாக மேற்கொள்ள இளைஞர்களை ஊக்குவித்து வருகிறோம்," என்கிறார் டாக்டர் குல்கர்னி.

 
ஹாம்ப்சனின் கூற்றுப்படி, உணவு வறுமைக்கான காரணங்களில் ஒன்று வளரும் நாடுகளிலுள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு வெவ்வேறு சந்தைகளில் உள்ள விலைகள், மேம்படுத்தப்பட்ட நடைமுறைகள் அல்லது உள்ளூர் வானிலையைப் பற்றிய நல்ல தகவல்களைப் பெறுவதற்குப் போதுமான வசதி இல்லை. அதனால் அவர்கள் விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்களுடன் சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.
 
கெட்டுப்போன உணவு விஷமாகுமா? திருப்பூரில் குழந்தைகள் மர்ம சாவுக்கு பிறகு எழும் கேள்வி
ஃபார்ம் ரேடியோ இன்டர்நேஷனல், ஒரு கனடிய அரசு சாரா நிறுவனம். சஹாராவுக்கு கீழே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறிய அளவிலான விவசாயிகளின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தேவைகளுக்குப் பதிலளிக்கக்கூடிய ஊடாடும் வானொலியைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு தகவல்களை பயிற்றுநர் விளக்கிக் கூறுவார். அதில் அவர்கள் விளக்கிக் கூறும் விஷயங்களில் சந்தேகம் இருந்தால் அல்லது கூடுதல் தகவல் தேவைப்படின் அதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் வசதியும் அந்த ரேடியோக்களில் இருக்கும்.
 
 
"ஃபார்ம் ரேடியோவின் நிகழ்ச்சிகள், உற்பத்திகளுக்கு சிறந்த விலையை எவ்வாறு பெறுவது போன்ற தகவல்கள் மற்றும் இதர துல்லியமான தகவல்களைச் சரியான நேரத்தில் வழங்குவதன் மூலம் நிலைமையை மாற்றலாம். சான்றாக, தான்சானியாவில் காலநிலை சேவைகள் குறித்த சமீபத்திய திட்டத்தில் 58% நேயர்கள் வானிலை குறித்த தகவல்களை விவசாயத்தைச் சிறந்த முறையில் மேம்படுத்த எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த அறிவைப் பெற்றுள்ளதாக வானொலி நிகழ்ச்சிகளைப் பற்றிய மதிப்பீட்டில் தெரிவித்துள்ளனர். மேலும் 73% பேர், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்ட பிறகு தங்கள் களையெடுக்கும் நடைமுறைகளை மேம்படுத்தியதாகத் தெரிவித்தனர்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

 
"நாங்கள் பெண்கள், ஆண்கள் மற்றும் இளம் விவசாயிகளின் பேச்சைக் கேட்கிறோம். அவர்களை வழிநடத்தச் செய்கிறோம். அவர்களின் கவலைகளைக் கேட்கிறோம். கொள்கை உரையாடல்களில் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறோம்," என்கிறார் ஹாம்ப்சன்.
 
உலகெங்கிலும் உள்ள மக்கள், வளர்ந்த, வளரும் நாடுகளில், அதிகரித்து வரும் உணவுப்பொருட்களின் விலைகளுக்கு எவ்வாறு செயலாற்றுவது எனச் சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உலகத் தலைவர்கள் விரைவான நடவடிக்கையை எடுத்தால் நெருக்கடியைத் தவிர்க்க முடியும் என்று ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
 
"தனிப்பட்ட முறையில், எப்போதும் நம்பிக்கை இருப்பதாக நான் கூறுவேன்," என்கிறார் ஹாம்ப்சன்.
 
மேலும், "நாங்கள் பெண்கள், ஆண்கள் மற்றும் இளம் விவசாயிகளின் பேச்சைக் கேட்கிறோம். அவர்களை வழிநடத்தச் செய்கிறோம். அவர்களின் கவலைகளைக் கேட்கிறோம். கொள்கை உரையாடல்களில் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறோம். கூட்டுறவு, விவசாயிகள், பெண்கள் குழுக்கள், கண்டுபிடிப்புகள் மூலம் அவர்களின் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். காலநிலை மறுமொழியில் கவனம் செலுத்துதல், விளிம்புநிலை குழுக்களை ஆதரித்தல், அவர்களின் தேவைகளுக்கு பதிலளித்தல் ஆகியவற்றோடு, சந்தைகளுக்கான அணுகல், தகவல் அணுகல் ஆகியவற்றின் சமத்துவத்திற்காக அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்பச் செயல்படுகிறோம்," என்று கூறினார்.
 
டாக்டர் குல்கர்னியும் இதே கருத்தை வெளிப்படுத்துகிறார். "நன்கு தெரிந்த, அடையாளம் காணப்பட்ட இடைவெளிகளை நிவர்த்தி செய்ய இன்னும் நேரம் இருப்பதால் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது," என அவர் எச்சரிக்கவும் செய்கிறார். "நாம் அவர்களைத் தொடர்ந்து புறக்கணித்தால், நமக்குப் பிரச்னை ஏற்படலாம். நம்பிக்கையின் ஒளி இருண்டு போகலாம்."
 
Edited by Sinoj
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்தில் ரிஷி சுனக்கை புதிய பிரதமராக்க கன்சர்வேட்டிவ் கட்சி திட்டம்!