Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாலிபன்களின் சவுக்கடிகளுக்கு அஞ்சாத பெண்கள் - 'கொல்லும் வரை போராட்டம் நடத்துவோம்'

தாலிபன்களின் சவுக்கடிகளுக்கு அஞ்சாத பெண்கள் - 'கொல்லும் வரை போராட்டம் நடத்துவோம்'
, வியாழன், 9 செப்டம்பர் 2021 (11:06 IST)
சம உரிமை வேண்டும், பெண்களுக்கு அரசில் இடம் வழங்க வேண்டும் என்று கோரி் ஏராளமான பெண்கள் புதன்கிழமையன்று காபூல் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வீதியில் அணிவகுத்துச் சென்றனர்.

ஒரு நாள் முன்னதாக, தாலிபன்கள் தங்கள் இடைக்கால அமைச்சரவையை அறிவித்தனர். அதில் ஒரு பெண்கூட இல்லை. பெண்கள் விவகாரத்துக்கான அமைச்சரவையையும் ஒழித்துவிட்டனர்.
 
"நாங்கள் இதை ஏற்க முடியாது, அதனால்தான் நாங்கள் வீதிக்கு வந்தோம்" என்று பிபிசியிடம் கூறினார் சாரா (பெயர் மாற்றப்பட்டது). ஒரு வாரத்துக்குள்ளாக அவர் பங்கேற்ற இரண்டாவது போராட்டம் இது.
 
"நாங்கள் அமைதியாக அணிவகுத்து வந்தோம். பிறகு ஒவ்வொரு வாகனத்திலும் சுமார் 10 தாலிபன்களுடம் நான்கைந்து வாகனங்கள் எங்களைப் பின்தொடர்வதை நான் பார்த்தேன்" என்று போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொருவரான ஜியா (பெயர் மாற்றப்பட்டது) கூறினார்.
 
தங்களைத் தடுத்து நிறுத்தியதாகவும், சவுக்கால் அடித்ததாகவும், மின்சாரத்தை உமிழும் தடிகளால் தாக்கியதாகவும் அந்தப் பெண்கள் கூறுகின்றனர்.
 
"அவர்கள் இரண்டு முறை என் தோளில் தாக்கினர். என் உடல் முழுவதும் வலியெடுத்தது. இப்போதும்கூட அது வலிக்கிறது, என்னால் கையைக்கூட அசைக்க முடியவில்லை" என்று கூறினார் ஜியா .
 
"அவர்கள் நிறைய கெட்ட வார்த்தைகளைக் கூறி திட்டினார்கள், எங்களைக் கேவலப்படுத்தினார்கள். அவர்கள் எங்களை நோக்கி அழைத்த பெயர்களை மீண்டும் சொல்வதற்கு எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது."
 
"நாங்கள் அனைவரும் அடிபட்டோம். நானும் அடிபட்டேன். வீடுதான் உங்களின் இடம், அங்கே செல்லுங்கள் என்று எங்களிடம் கூறினார்கள்" என்றார் சாரா. போராட்டம் தடுக்கப்படுவதை படமாக்க முயன்றபோது அவரது செல்போனை தாலிபன்கள் தட்டி விட்டனர்.
 
பெண்களின் உரிமைகளுக்கு உறுதியளிப்பதாக தாலிபன்கள் கூறியுள்ளனர், பெண்கள் படிப்பதற்கோ வேலைக்குச் செல்வதற்கோ தாங்கள் எதிராக இருக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.
 
ஆனால் ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று காபூலுக்குள் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து பொது சுகாதாரத் துறையில் உள்ளவர்களைத் தவிர, மற்ற அனைத்து பெண்களும், பாதுகாப்பு நிலைமை மேம்படும் வரை வேலைக்குச் செல்லக்கூடாது என உத்தரவிட்டனர்.
 
1990-களில் தாலிபன்கள் அதிகாரத்தில் இருந்தபோது பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்ததற்கு பாதுகாப்பே முதன்மையான காரணம். இப்போதும் அந்த நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என சாராவைப் போன்ற பல பெண்கள் கருதுகிறார்கள்.
 
அரசுத் துறை ஒன்றில் அவர் ஆலோசகராகப் பணிபுரிந்தார், தனது சொந்த வணிகத்தையும் நடத்தினார். இப்போது தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று தனது குடும்பம் அஞ்சுவதாக அவர் கூறுகிறார்.
 
"போராட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள். அவர்கள் உங்களை கொன்றுவிடுவார்கள். புதன்கிழமை நடந்த பேரணியில் கலந்து கொள்ளவதற்காக நான் என் சகோதரனுடன் சண்டையிட வேண்டியிருந்தது. நாங்கள் குரல் எழுப்புவது முக்கியம். நான் அஞ்சவில்லை. நான் மீண்டும் மீண்டும் போராட்டத்துக்குச் செல்வேன். சென்று கொண்டே இருப்பேன். அவர்கள் எங்களைக் கொல்லும் வரை. படிப்படியாக இறப்பதை விட ஒரு முறை இறப்பதே மேல்"
 
ஜியாவுக்கு திருமணமாகி, அண்மையில் பிறந்த குழந்தை உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். தனது குடும்பத்தினர் தாலிபன்களுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்க தனது குடும்பம் ஊக்குவிப்பதாக அவர் கூறுகிறார். "தாலிபன்கள் இப்போது வந்தவர்கள் இல்லை. அவர்கள் நீண்ட காலமாக இங்குதான் இருக்கிறார்கள். எங்களுக்காக மட்டுமல்ல, அடுத்த தலைமுறையினருக்கும், எங்கள் குழந்தைகளுக்கும் சேர்த்து நாங்கள்தான் உரிமைகளைக் கோர வேண்டும்" என்று அவர் கூறினார்.
 
"தாலிபான்கள் எங்களைக் கண்டுபிடித்து குறிவைக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் போராட்டங்களைத் தொடர வேண்டும்."
 
இந்த வார தொடக்கத்தில் ஹெராட்டில் நடந்த போராட்டத்தின் போது, ​​மூன்று பேர் கொல்லப்பட்டனர். கூட்டத்தை கலைக்க தாலிபன்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தாலிபன்கள் போராட்டக்காரர்களை சாட்டையால் அடிக்கும் பல வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
 
ஆர்ப்பாட்டங்களின்போது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். கடந்த சில நாட்களில் தாலிபன்கள் மிகவும் கொடூரமானவர்களாகத் தோன்றுகிறார்கள்.
 
தங்களது ஐந்து செய்தியாளர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக நாளிதழை வெளியிடும் ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனமான எடிலாட்ரோஸ் கூறியிருக்கிறது.. அவர்களில் இருவர் கேபிள்களால் மோசமாக தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது.
 
போராட்டத்தை படமாக்க முயன்றபோது தனது சகாவை தாலிபன்கள் மூன்று மணி நேரத்துக்கு மேலாக தடுத்துக் காவலில் வைத்ததாக யூரோ நியூஸ் செய்தியாளர் அனலிஸே போர்ஜெஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"அவரது முகத்தில் பல முறை அறைந்தார்கள். அதில் அவர் அதிர்ச்சியடைந்தார். அவருடைய செல்போனையும் பர்ஸையும் பறித்தார்கள்" என்று அவர் கூறினார்.
 
செவ்வாய்க்கிழமை காபூலில் நடந்த போராட்டத்தை படமாக்கும்போது தடுத்துக் காவலில் வைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் செய்தியாளரிடமும் பிபிசி பேசியது.
 
"தாலிபன்கள் பல போராட்டக்காரர்களையும் செய்தியாளர்களையும் கைது செய்தனர். எனது செல்போன், மைக் மற்றும் பிற உபகரணங்களை பறித்துச் சென்றனர். அவர்கள் என்னைக் கைகளாலும் புத்தகங்களாலும் பல முறை அடித்தனர். நான் ஒரு செய்தியாளர் என்று சொன்னேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் மற்றவர்களை துப்பாக்கிகளைக் கொண்டு அடிப்பதையும் நான் பார்த்தேன். அவர்கள் எனது எல்லா வீடியோக்களையும் அழித்துவிட்டனர் " என்று அவர் கூறினார்.
 
"எனது செல்போன் முகப்பில் ஒரு ஆணும் பெண்ணும் தழுவிக் கொள்வது போன்ற படம் இருந்தது. அதனால் கோபமடைந்த தாலிபன் தளபதி என் முகத்தில் கடுமையாக தாக்கினார்."
 
போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களைக் கவனத்தில் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடு அவையின் அலுவலகம், ""ஆப்கானிஸ்தானின் அனைத்து உரிமைகளையும் வன்முறையின்றிப் பாதுகாக்க வேண்டிய கடமை அதிகாரிகளுக்கு உள்ளது" என்று கூறியிருக்கிறது.
 
ஆனால் போராட்டங்கள் தொடர்பாக தாலிபன்கள் வேறு விதமாகப் பதில் அளித்துள்ளனர். போராட்டம் நடத்துவதற்கு நீதித்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற வெண்டும், பிறகு இடம், நேரம், ஆகியவற்றை பாதுகாப்புத் துறையிடம் அளிக்கவேண்டும். என்னென்ன பதாகைகள், முழக்கங்கள் பயன்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும் என தாலிபன்கள் கூறியுள்ளனர்.
 
இப்போது, ஜியா மற்றும் சாராவுக்கு, அவர்களின் உரிமைகளை கோருவது மேலும் கடினமாகிவிட்டது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு கல்லூரிகளை தொடர்ந்து தனியாரிலும் சேர்க்கை உயர்வு! – அமைச்சர் பொன்முடி தகவல்!