இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டால் அரசுக்கு எதிராக ஒரு மாத காலமாக நடந்த போராட்டம் மே 9ஆம் தேதி உச்சத்தை எட்டியது.
அது தற்கால இலங்கை அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்கவராகப் பார்க்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது. ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டன.
வன்முறையாளர்கள் மற்றும் சொத்துகளை சேதப்படுத்துவோரை கண்டதும் சுட பாதுகாப்பு படைகளுக்கும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அமைதியாகத் தொடங்கிய போராட்டம் இந்நிலையை நோக்கி எப்படி நகர்ந்தது என்ற கேள்விகளுக்கு விரிவான பதில்கள் இங்கே.
மே 9 அன்று வன்முறை எப்படித் தொடங்கியது?
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திங்களன்று (மே 9) மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
காலி முகத் திடலில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள், செஞ்சிலுவை சங்க மருத்துவமனை மற்றும் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. ஆளும் கட்சி எம்.பிக்கள், அமைச்சர்களின் வீடுகளில் தாக்குதல் நடத்தப்பட்டன.
காணொளிக் குறிப்பு,
இலங்கை வன்முறை: முன்னாள் அமைச்சர்களின் கார்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு தீ வைப்பு
இந்நிலையில், புதன் கிழமை வரை பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் தற்போது வரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 231 பேர் காயமடைந்தனர்.
பொலன்னறுவை தேர்தல் மாவட்டத்தை மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மேற்கு மாகாணத்தில் உள்ள கம்பஹா மாவட்டத்தில் அமைந்திருக்கும் நிட்டம்புவ பகுதியில் மே 9ஆம் தேதி பிற்பகல், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அமரகீர்த்தி அத்துகோரலவின் வாகனத்தையும் அவரையும் ஒரு கும்பல் தாக்க முயன்றதாகவும், அவர்களிடம் இருந்து தப்ப அருகே உள்ள கட்டடத்துக்குள் அவர் ஓடியதாகவும் அப்போது அவரை வன்முறை கும்பல் சூழ்ந்து கொண்டதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.
ராஜபக்ஷவின் வீடுகள், பொலன்னறுவையில் உள்ள அமரகீர்த்தி அத்துகோரலவின் வீடு மட்டுமல்லாது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், நாமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினரின் சொத்துகளும் தீக்கிரைக்கு உள்ளானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இப்போது ஏற்பட்டிருக்கும் பதற்றத்துக்கான தொடக்கப்புள்ளி திங்கள்கிழமை காலையிலேயே வைக்கப்பட்டு விட்டது.
.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகப் போகிறார் என்ற தகவல் நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே உலவி வந்தாலும், திங்கள்கிழமையன்று அது அதிகாரப்பூர்வமான வட்டாரங்களில் இருந்து கசியத் தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமரின் அதிகாரப்பூர்வமான ஊடகத் தொடர்பாளர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் புகழைக்கூறும் வகையிலான பல்வேறு காணொளிகளை வெளியிட்டிருந்தார்கள்.
திங்கள்கிழமையன்று காலையில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகையில் அவரது ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி அவருக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினார்கள்.
பின்னர் அலரி மாளிகைக்கு வெளியே வந்து அரசுக்கு எதிரான போராட்டம் நடக்கும் காலி முகத்திடல் பகுதிக்கு தாங்கள் செல்லப் போவதாக அறிவித்து அதை நோக்கிச் சென்றனர். இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட தொலைவு சுமார் ஒரு கிலோ மீட்டர்.
வழியிலேயே அவர்களைத் தடுப்பதற்கு காவல்துறையினர் முயன்றாலும், தடுப்புகளையும் தாண்டி அவர்கள் போராட்டம் நடக்கும் காலி முகத்திடல் பகுதிக்கு வந்து அங்கு போராட்டக்காரர்கள் அமைத்திருக்கும் கூடாரங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
மே 9 அன்று நடந்த வன்முறை குறித்த பிபிசி தமிழ் களச் செய்திகளை இங்கே படிக்கலாம்.
மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டதாகக் கூறும் வர்த்தமானி அறிவித்தல்
மே 9ஆம் தேதி காலை மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களால் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர்.
இதற்கிடையே பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரரும் அதிபருமான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் அனுப்பினார். அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் வர்த்தமானி அறிவிப்பு மே 10ஆம் தேதி வெளியானது.
ஜனாதிபதி உடனடியாக ஒரு புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவையை நியமிக்க வேண்டும். ஆனால் மக்களிடையே நிலவும் குழப்பத்தினால் யாரும் பதவியேற்க விரும்ப மாட்டார்கள்.
அமைச்சரவை நியமிக்கப்படாவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
ஜனாதிபதி பதவி விலகினால், பிரதமர் ஜனாதிபதி பதவியை ஏற்கவேண்டும். ஆனால் இப்போது பிரதமரும் இல்லை.
இத்தகைய சூழ்நிலையில், நாடாளுமன்ற சபாநாயகர் ஜனாதிபதி பதவியை ஏற்க வேண்டும்.
அதுவும் சாத்தியப்படவில்லையெனில் நாடாளுமன்றம் ஒன்றுகூடி ஒருவரை ஏகமனதாக ஜனாதிபதியாக பதவி ஏற்கவேண்டும்.
இவை எதுவும் நடக்கவில்லையெனில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ இப்போது எங்கே?
அவசரநிலை அறிவிக்கப்பட்டபின் கொழும்பு நகரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம்
படக்குறிப்பு,
அவசரநிலை அறிவிக்கப்பட்டபின் கொழும்பு நகரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம்
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் "இயல்புநிலை திரும்பிய பிறகு அவர் விரும்பிய இடத்துக்கு அனுப்பி வைப்போம்," என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புமா?
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டின் ராணுவமும் நாட்டிற்கு வரவழைக்கப்பட மாட்டாது என்றும்பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கையின் மூத்த சகோதரன் போன்ற நாடு என்றும், இந்த சிக்கலைக் கடப்பதற்கு இந்தியாதான் உதவி வருவதாகவும் குறிப்பிட்ட அவர், ஆனால் இந்தியாவின் ராணுவத்தை அழைக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்.
அத்துடன் எந்த சூழ்நிலையிலும் நாட்டில் ராணுவ ஆட்சி வராது என்றும் அதற்கான அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவது தொடர்பாக வரும் செய்திகளுக்கு இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் மே 11ஆம் தேதி மறுப்பு தெரிவித்தது.