Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்ஸியின் மெர்சல் ஆட்டம் இறுதிப்போட்டியை வெல்லக் கைகொடுக்குமா?

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (15:28 IST)
இப்போ, அப்போ என இந்த ஆண்டு முழுக்கக் காத்துக் கொண்டிருந்தோம். பிறகு இப்போதுதான் தொடங்கியதைப் போலிருந்தது.

ஆனால், ஆட்டம் எப்படி 90 நிமிடங்களுக்குள் விறுவிறுப்பாகச் செல்லுமோ அதேபோல் உலகக்கோப்பை போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்து, 32 அணிகளில் அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதப்போகும் இறுதிப்போட்டியும் வந்துவிட்டது.

கத்தாரில் நடைபெறும் இந்த ஆண்டின் கால்பந்து உலகக்கோப்பை ஏராளமான தோல்விகளைச் சந்தித்தது, வெற்றிகளை ருசித்தது. அதிலிருந்து இறுதிப் போட்டிக்கு, கால்பந்து உலகில் பாரம்பரியமாக முன்னணியில் இருந்து வரும் இரண்டு பெரிய அணிகள் மோதவிருக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடக்கவுள்ள இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான பிரான்ஸ், தொடர் வெற்றியோடு சாதனை படைக்க வேண்டுமென்று, கிட்டத்தட்ட ஒரு டன் அளவுக்குக் கனமான அழுத்தம் அவர்கள் தலையில் உள்ளது. அதைவிட அதிகமான அழுத்தம் அர்ஜென்டினாவுக்கு உள்ளது. ஆம், 36 ஆண்டுகால கனவாயிற்றே!

ஆக, இந்தப் போட்டி, மறுக்க முடியாத ஒன்றாக, கவர்ச்சிகரமானதாக இருக்கப் போகிறது.
பிரான்ஸ் தரப்பில் கிலியன் எம்பாப்பே சிறந்த வீரராக, இந்தத் தொடரில் ஐந்து கோல்களுடன் இருக்கிறார். அர்ஜென்டினா தரப்பில், கால்பந்து வரலாற்றிலேயே சிறந்த வீரராகக் கூறப்படும் லியோனெல் மெஸ்ஸியும் இந்தத் தொடரில் ஐந்து கோல்களுடன் இருக்கிறார்.

மெஸ்ஸி உலகக்கோப்பைக்கு முன்பாக பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்புக்காக விளையாடியபோது, இருவரும் ஒன்றாக விளையாடினார்கள்.

கால்பந்து இறுதிப்போட்டி எங்கு நடக்கிறது?

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி கத்தாரின் லுசைல் மைதானத்தில் நடக்கவுள்ளது. உள்ளூர் நேரப்படி, டிசம்பர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு நடைபெறும்.

இரண்டு அணிகளும் இந்தத் தொடரில் இதுவரை எப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன, எவ்வளவு கோல்களை அடித்துள்ளன என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.

அர்ஜென்டினா அணியைப் பொறுத்தவரை, இந்தப் போட்டிகளில் மெக்சிகோ(2-0), போலாந்து(2-0), ஆஸ்திரேலியா(2-1), காலிறுதியில் நெதர்லாந்து(2-2, 4-3 பெனால்டிகள்), அரையிறுதியில் குரோஷியா(3-0) ஆகிய அணிகளைத் தோற்கடித்துள்ளது. குரூப் சுற்றில் ஆடிய முதல் போட்டியில் மட்டும் சௌதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இந்தத் தொடரில் இதுவரை அர்ஜென்டினா அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 12. அர்ஜென்டினாவுக்கு எதிராக இதுவரை அடிக்கப்பட்ட கோல்களின் எண்ணிக்கை, 5.

பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியா(4-1), டென்மார்க்(2-1), போலாந்து(3-1), காலிறுதியில் இங்கிலாந்து(2-1), அரையிறுதியில் மொராக்கோ(2-0) ஆகிய அணிகளைத் தோற்கடித்துள்ளனர். குரூப் சுற்றின் மூன்றாவது போட்டியில், துனிசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

உலகக்கோப்பை தொடர் முழுவதும் பிரான்ஸ் இதுவரை 13 கோல்களை அடித்துள்ளது. அதற்கு எதிராக இதுவரை 5 கோல்கள் அடிக்கப்பட்டன.

மெஸ்ஸியை எதிர்கொள்ளப் போகும் எம்பாப்பே

கால்பந்து உலகின் இந்த இரண்டு முக்கியமான சக்திகள் மோதும் போட்டி ஒரு காவியமாக இருக்கலாம். கடந்த உலகக்கோப்பையில் பிரான்சும் அர்ஜென்டினாவும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதியது ஒரு மறக்கமுடியாத போட்டியாக அமைந்தது.

பிரான்ஸ் அணி, எதிரணியிடம் அதிக நேரம் பந்தை இருக்க விட்டாலும்கூடஅந்த முறையும் எதிரணியைத் தாக்குவதற்குச் சரியான தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்து, கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளையும் துல்லியமாகப் பயன்படுத்தும். அவர்களுடைய இந்த யுக்தியை வைத்து தான், கடந்த உலகக் கோப்பையில் வெற்றியடைந்தார்கள், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினாவையும் வீழ்த்தினார்கள்.

அப்போது, ஆட்டம் முழுவதும் 39% தான் பந்து பிரான்ஸ் வசமிருந்தது, மீதி 61% நேரத்திற்கு அர்ஜென்டினாவின் கால்களில் தான் பந்து இருந்தது. இரண்டு அணிகளுமே கோல் போஸ்டை நோக்கி துல்லியமான 4 ஷாட்களை அடித்தன. அதில், அர்ஜென்டினாவால் மூன்று முறை கோலாக்க முடிந்தது. ஆனால், பிரான்ஸ் இலக்கைக் குறி வைத்து அடித்த நான்கு ஷாட்களையுமே கோலாக்கியது.

2018ஆம் ஆண்டில் தன்னை வீழ்த்திய குரோஷியாவை அதேபோல 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியது. இப்போது இறுதிப்போட்டியிலும் அதேபோல், 2018ஆம் ஆண்டில் தங்களைத் தோற்கடித்து, நாக் அவுட் செய்த பிரான்ஸ் அணியையும் வீழ்த்துவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது. அது சாத்தியமா?

இரண்டு பக்கமும் பெரும் நட்சத்திரங்கள் உள்ளன. எம்பாப்பேவால் சுயமாக கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றாலும், பிரான்ஸ் சமநிலையான தாக்குதல் யுக்தியைக் கொண்டுள்ளது.

அர்ஜென்டினா அணி முற்றிலும் மெஸ்ஸியை சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணமும் உண்டு. அவர் இந்தத் தொடரில் நிறைய பங்களிப்புகளைக் கொடுத்துள்ளார்.

அணிகளாக மட்டுமின்றி, மெஸ்ஸியும் எம்பாப்பேவும் இந்தத் தொடரின் அதிக கோல் ஸ்கோரர் ஆவதற்காகவும் மோதுகின்றனர். அவர்கள் இருவருமே ஐந்து கோல்களுடன், இந்தத் தொடரின் முன்னிலையைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களைப் போலவே, பிரான்ஸ் அணியின் ஒலிவியே கிரூடும் அர்ஜென்டினாவின் ஹூலியன் ஆல்வாரெஸும் நான்கு கோல்களுடன் இருக்கின்றனர்.

அர்ஜென்டினாவின் 36 ஆண்டுகால கனவு

1934, 1938 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு முறை இத்தாலி உலகக்கோப்பையை வென்றது. அதற்குப் பிறகு 1958, 1962 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை பிரேசில் உலகக்கோப்பையை வென்றது. இப்போது மூன்றாவது முறையாக பிரான்சுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த முறையும் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றினால், பிரான்ஸ் மூன்றாவது முறையாக கோப்பையை உயர்த்தும். கடந்த ஏழு உலகக்கோப்பை தொடர்களில், 1998, 2018 ஆகியவற்றில் பிரெஞ்சு அணி வென்றுள்ளது. 2006ஆம் ஆண்டு இறுதிச்சுற்று வரை வந்து தோல்வியடைந்தது.

அர்ஜென்டினா, 1978, 1986 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. 1930, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்று வரை வந்துள்ளது. இறுதிச்சுற்றுக்குள் அர்ஜென்டினா ஆறாவது முறையாக வருகிறது.

அர்ஜென்டினாவில் ஒட்டமெண்டி, டி பால், ஸ்டிரைக்கர் ஆல்வாரெஸ், கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ், பரேடெஸ், மெக் ஆலிஸ்டர் என்று குறிப்பிடத்தக்க வீரர்கள் உள்ளனர். அவர்கள் கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற துடிப்போடும் இருக்கின்றனர்.

பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரை தியோ ஹெர்னாண்டெஸ், கிரேஸ்மேன், கிரூட், கொனாடே, வரானே, சூயிமென்னி என்று குறிப்பிடத்தக்க வீரர்கள் உள்ளனர். இவர்களும் இரண்டாவது முறை சாம்பியனாகவும் வேண்டுமென்ற வெறியோடு ஆடி வருகின்றனர்.

அர்ஜென்டினாவை பொறுத்தவரை, தாக்குதல் ஆட்டம் நன்றாக இருக்கும் என்றாலும் தற்காப்பு ஆட்டம் பிரான்சிடம் சிறப்பாக உள்ளது. அர்ஜென்டினாவின் தற்காப்பு ஆட்டக்காரர்களான மொலினா, ஒட்டமெண்டி, ரொமேரோ போன்றோர் அதற்கு ஈடுகொடுக்க கூடுதலாக மெனக்கெட வேண்டியிருக்கும்.

அதேவேளையில், பிரான்சின் எதிர்த்தாக்குதல் நன்றாக இருந்தாலும், அர்ஜென்டினாவின் தாக்குதல் ஆட்டம் அபாரமானது. ஆட்டத்தின் எந்த நேரத்திலும் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றும் மேஜிக்கை மெஸ்ஸி, ஆல்வாரெஸ் நிகழ்த்தி வருகின்றனர். ஆகவே பிரான்சுக்கும் சவால்களில் குறை ஏதுமில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments