Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை புத்தகக் கண்காட்சியில் பலருக்கு கடைகள் ஒதுக்கப்படாதது ஏன்?

Advertiesment
சென்னை புத்தகக் கண்காட்சியில் பலருக்கு கடைகள் ஒதுக்கப்படாதது ஏன்?
, வெள்ளி, 17 ஜனவரி 2020 (16:09 IST)
சென்னையில் தற்போது நடந்துவரும் புத்தகக் கண்காட்சியில் பல பதிப்பாளர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லையென குற்றம்சாட்டப்படுகிறது. கருத்து சுதந்திரம் இல்லையென கூறப்படுகிறது. உண்மையில் புத்தகக் கண்காட்சி எப்படி, எதற்காக நடத்தப்படுகிறது?

சென்னை புத்தகக் கண்காட்சி தொடர்பாக இந்த ஆண்டு பல கேள்விகளும் சர்ச்சைகளும் எழுப்பப்படும் நிலையில், அவை குறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார் புத்தகக் கண்காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் அமைப்பின் (பபாசி) செயலர் ஒளிவண்ணன். அவர் பேசியதிலிருந்து:

கே. சென்னை புத்தகக் கண்காட்சி எப்படி துவங்கியது?

ப. 1970களில் சிறிய அளவில் நவம்பர் மாதத்தில் குழந்தைகள் தினத்தை ஒட்டி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் சிறிய அளவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டுவந்தது. 1976ல் காயிதே மில்லத் கல்லூரிக்கு அருகில் உள்ள மாதர் ஷா பள்ளிக்கூடத்தில் சில பதிப்பாளர்கள் எஸ். சந்த் அண்ட் கம்பனியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், ஆக்ஸ்பர்ட் யுனிவர்சிடி பிரசைச் சேர்ந்த பார்த்தசாரதி, ஹிக்கின்பாதம்ஸைச் சேர்ந்த பலராமன் உள்ளிட்டோர் சேர்ந்து நாம் ஒரு முறையான புத்தகக் கண்காட்சியை நடத்த வேண்டுமென முடிவுசெய்கிறார்கள். முதலில் பத்து, பன்னிரெண்டு பேர்தான் அந்தக் கண்காட்சியில் பங்கேற்றார்கள். பிறகு, படிப்படியாக பெரிதாகி, அருகில் உள்ள காயிதே - மில்லத் கல்லூரியில் நடக்க ஆரம்பித்தது.

ஆனால், ஒரு கட்டத்தில் கடைகளின் எண்ணிக்கை 200 தாண்டிச் செல்லவும், கண்காட்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடக்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகு, ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்திவருகிறோம். இப்போது சுமார் 750 கடைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 100 பேர்வரை கடைகளைக் கேட்டுவருகிறார்கள். ஆனால், சென்னையில் அதற்கேற்றபடி இடமில்லை என்பதுதான் உண்மை.

கே. பொதுவாக புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க எவ்வளவு பேர் விண்ணப்பிக்கிறார்கள்? எவ்வளவு பேருக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன, இதன் பின்னணியில் இருக்கும் வர்த்தகம் என்ன?

ப. நிறையப் பேருக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதாவது, புத்தகக் கடை வைக்க விண்ணப்பிப்பவர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை; ஆனால், ஊறுகாய் கடை போடுபவர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதை எங்கள் பபாசி குழுவிலேயே சிலர் கேட்கிறார்கள். பபாசியில் சுமார் 400 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களில் மிகப் பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். அதிக பட்சம் 5 சதவீதம் இருப்பார்கள். நடுத்தர மட்டத்தில் ஒரு 15 சதவீத நிறுவனங்கள் இருக்கும். மீதமிருப்பவர்கள் எல்லோருமே மிகச் சிறிய பதிப்பாளர்கள்தான். பெரும்பாலும் தங்களுக்கென உரிமையுள்ள சிறிய அளவிலான புத்தகங்களை வைத்துக்கொண்டு வியாபாரத்தை நடத்துபவர்கள். இவர்கள் சம்பாதிக்கக்கூடிய ஒரே பருவம் இதுதான். அடுத்த 3-4 மாதங்கள் இதை வைத்துத்தான் காலத்தை ஓட்ட வேண்டும்.
webdunia

பபாசி என்ற அமைப்பு 80களில் பதிவுசெய்யப்பட்டது. துவக்கத்தில் பெரிய அளவில் உறுப்பினர்கள் இல்லை. ஆங்கிலப் பதிப்பாளர்கள்தான் 90 சதவீதம் பேர் இருந்தார்கள். தமிழில் ஆட்கள் மிகக் குறைவாக இருந்தார்கள். கண்காட்சியில் தமிழ்ப் பதிப்பாளர்கள் மிகக் குறைந்த அளவில்தான் பங்கேற்பார்கள். அதனால்தான் தமிழ் பதிப்பகங்களுக்கு மிகக் குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், இப்போதும் அது தொடர்வதுதான். ஆங்கிலப் பதிப்பகங்களுக்கு இப்போதும் வாடகைக் கட்டணம் அதிகம். தமிழ் பதிப்பகங்களுக்கு கட்டணம் குறைவு.

உறுப்பினர்களாக இருப்பவர்களில் பலர், வாடகையாகக் கட்டவேண்டிய பத்து - பதினைந்தாயிரத்தையே கடனாக வாங்கிவந்துதான் பங்கேற்கிறார்கள். இங்கே 750 கடைகளை அமைக்க முடியும். இந்த மைதானத்திற்கான வாடகை, அரங்க நிர்மானம், மின்சாரம், எல்லாம் சேர்ந்து கிட்டத்தட்ட இரண்டிலிருந்து இரண்டேகால் கோடி அளவுக்கு செலவாகிறது. ஒரு கடைக்கு சராசரியாக 30-35 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

ஆனால், உறுப்பினர்களிடம் 13-15 ஆயிரம் வரைதான் வாடகையாக வாங்குகிறோம். மீதமுள்ள 20 ஆயிரம் ரூபாயை எங்கிருந்து எடுப்பது? அதனால்தான் ஸ்பான்ஸர்களைத் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆர்ச் அமைத்துக்கொள்ள, விளம்பரங்களை வைத்துக்கொள்ள பணம் வாங்க வேண்டியிருக்கிறது. அப்படி ஸ்பான்சர் கேட்பவர்களும் கடை கேட்பார்கள். அவர்களில் சிலர் புத்தகங்களோடு தொடர்பில்லாதவர்களாக இருப்பார்கள்.

ஒருபக்கம் 750க்கு மேல் கடை கொடுக்க முடியாது. இன்னொரு பக்கம் ஸ்பான்சர்களுக்கு கடை கொடுத்தாக வேண்டும். இதனால், பதிப்பாளர்கள் கோபமடைவார்கள். "நான் புத்தகம் வெளியிட்டிருக்கிறேன். எனக்கு கடை இல்லை. ஊறுகாய், அப்பளம் விற்பவர்களுக்கு கடை கொடுக்கிறார்கள்" என்ற புகார் வருவது இதனால்தான். இந்த ஸ்பான்சர்கள் இருந்தால்தான் கண்காட்சியே நடத்த முடியும்.

கே. எல்லோரிடமும் 35 ஆயிரம் ரூபாய் வாங்க முடியாதா?

ப. வாங்கலாம். ஆனால், அப்படிச் செய்தால், உறுப்பினர்களாக இருக்கக்கூடிய மிகச் சிறிய பதிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அதோடு, அழிந்தே போகக்கூடும்.

கே. பபாசியில் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பதில்லை என்ற புகார் இருக்கிறது..

ப. இந்தக் கேள்வியை எல்லோரும் கேட்கிறார்கள். அதாவது பபாசியைப் பொறுத்தவரை, உறுப்பினராக உள்ளவர்கள் எல்லோருக்கும் கடை கொடுத்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களே, கூடுதல் கடைகள் கேட்கிறார்கள். புதிதாக வருபவர்களும் கடைகளை கூடுதலாகக் கேட்பார்கள். அப்படியான சூழலில், புதிய உறுப்பினர்களை சேர்க்க முடியாத நிலை இருக்கிறது.

பபாசியின் நோக்கமே புத்தகக் கண்காட்சியை ஒழுங்காக நடத்துவது, வாசகர்களை வரவைப்பது, பிரச்சனைகள் வந்தால் அதை சரிசெய்து முழுமையாக கண்காட்சியை நடத்தி முடிப்பது என்பதுதான். அதுதான் பபாசியின் ஒட்டுமொத்த அடிப்படை.
webdunia

உலகிலேயே இவ்வளவு பெரிய அளவில் பதிப்பாளர்களும் வாசகர்களும் சந்திக்கும் இடம் இதுதான். மற்ற இடங்களில் எல்லாம் Business to Business என்ற அடிப்படையில்தான் கண்காட்சி நடக்கும். இங்கு மட்டும்தான், ஒரு சந்தையைப் போல கண்காட்சி நடக்கிறது. இங்கு நடக்கும் விற்பனை பதிப்பாளர்களுக்கு பல மாதங்களுக்கு உதவுகிறது.

கே. இந்தப் புத்தகக் கண்காட்சியிலும் business to business தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான ஏற்பாடுகளை ஏன் செய்யக்கூடாது?

ப. அம்மாதிரி தேவை இருப்பவர்கள் 10-15 சதவீதம் பேர்தான். இங்கே அதற்கு இடம் இருக்காது. வெளிநாட்டிலிருந்து பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வந்தால், அரங்கை ஏசி செய்ய வேண்டியிருக்கும். அப்படியானால், கண்காட்சியை சென்னை டிரேட் சென்டர் போன்ற இடத்தில் நடத்த வேண்டியிருக்கும். ஆனால், வாடகை அதிகமாகிவிடும். 45 ஆயிரம் ரூபாய் கொடுத்து எவ்வளவு பேரால் வர முடியும்?

வாய்ப்பிருந்தால், இதற்கு இணையாக வர்த்தக சந்திப்புகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். ஆனால், பெரிய அளவில் அதற்கான தேவை இருக்க வேண்டும். இப்போது சில ஆண்டுகளாக சார்ஜாவில் பங்கேற்கிறோம். ஃப்ராங்க்பர்ட்டில் பங்கேற்பது குறித்து ஆராய்கிறோம். நாம் வெளிநாட்டு கண்காட்சிகளுக்கு செல்லும்போதுதான் அங்கிருந்தும் வர ஆரம்பிப்பார்கள்.
 
கே. புத்தகக் கண்காட்சியைப் பொறுத்தவரை பெரும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன; விரும்பிய புத்தகத்தை விற்க முடியவில்லை; கூட்டங்களில் விரும்பியதைப் பேச முடியவில்லை என்பது போன்ற விமர்சனங்கள் இருக்கின்றன.

ப. உண்மைதான். ஆனால், இந்த புத்தகக் கண்காட்சியைப் பிரசார களமாக்க முடியாது. இங்கே எல்லாத் தரப்பினரும் புத்தகங்களை விற்கிறார்கள். ஒருவரைப் பிரசாரம் செய்ய அனுமதித்தாலோ, பேச அனுமதித்தாலோ எதிர்த் தரப்பினரும் கேட்பார்கள். பிரச்சனைகள் வரக்கூடும். ஆகவே, எங்கள் அனுபவத்தின் அடிப்படையில் புத்தக விற்பனையை மட்டும் பார்க்கலாமென நினைக்கிறோம்.

எங்களுடைய பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர், "எதற்காக இம்மாதிரியான பிரச்சனையை உருவாக்கக்கூடிய விஷயங்களைக் கையில் எடுக்கிறீர்கள்? இது புத்தகங்களை விற்கக்கூடிய தளமாக மட்டும் இருக்கட்டுமே" என்கிறார்கள். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

கே. புத்தகக் கண்காட்சியை ஒட்டி நடத்தப்படும் கூட்டங்கள் குறித்து விமர்சனங்கள் இருக்கின்றன. கூட்டங்களை இன்னும் சிறப்பானவர்களை வைத்து நடத்தலாம் என்ற கோரிக்கைகள் ஒருபுறம் இருக்கின்றன. மற்றொரு பக்கம், கூட்டமே நடத்தாமல் அங்கும் கடைகளை அமைக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது.

ப. இதற்கு மேல் கடைகளை அமைத்தால் மக்கள் நடப்பதற்கு கஷ்டப்படுவார்கள். அதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. சீரியஸ் எழுத்தாளர்களை வைத்து கூட்டம் நடத்துவதைப் பற்றிக் கேட்டீர்கள். இந்த ஆண்டு எழுத்தாளர் முற்றம் என்ற ஒன்றை நடத்துகிறோம்.
webdunia

வெளி அரங்கைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் கூட்டத்தை ஈர்ப்பதற்காக நடத்தினோம். சிறந்த பேச்சாளர்கள் பேசினால், அதற்காக கூட்டம் வரும் என நினைத்தோம். ஆனால், இப்போது எல்லோருடைய பேச்சும் யூ டியூபிலேயே கிடைப்பதால் அதற்காக யாரும் வருவதில்லை என்று சொல்கிறார்கள். ஏன் இதைச் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் இருக்கிறது. பேலன்ஸ் செய்துதான் நடத்த வேண்டியிருக்கிறது.

கே. வழக்கமாக பங்கேற்கக்கூடிய சிலருக்கு கடைகள் மறுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களை கவனித்து கடைகளை ஒதுக்கீடு செய்திருக்கலாமே?

ப. இந்த முறை 60 கடைகளைக் குறைத்துவிட்டோம். கடைசி நேரத்தில் சிலரை சேர்க்க முடிந்தது. சிலருக்கு வழங்க முடியவில்லை. எதிர்காலத்தில் இந்த சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள முடியுமென நினைக்கிறோம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”எனது கொம்பன் காளைகள் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது”.. விஜயபாஸ்கர் பெருமிதம்