Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா-பாகிஸ்தான் சமரசத்துக்கு செளதி அதிக அக்கறை காட்டுது ஏன்?

Advertiesment
இந்தியா-பாகிஸ்தான் சமரசத்துக்கு செளதி அதிக அக்கறை காட்டுது ஏன்?
, திங்கள், 22 மார்ச் 2021 (07:56 IST)
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்க செளதி அரேபியா முயற்சிப்பதாக அந்நாட்டின் வெளியுறவு துணை அமைச்சர் ஆடில் அல்-ஜூபேர் ஒப்புக் கொண்டுள்ளார். அரப் நியூஸ் ஊடகத்திற்கு ஜூபேர் அளித்த பேட்டியில், பிராந்தியம் முழுவதிலும் அமைதியை செளதி அரேபியா விரும்புகிறது. அதற்காக பல மட்டங்களில் முயற்சிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 
ஆடில் அல்-ஜூபேர், "நாங்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்குத் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். அது இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான அமைதியானாலும் சரி, லெபனான், சிரியா, இராக், இரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் அமைதியானாலும் சரி, அதற்காக நாங்கள் முழுமையாக முயற்சி செய்கிறோம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம். சூடானில் ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதானாலும் லிபியாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதானாலும் நாங்கள் எல்லா விவகாரங்களிலும் நேர்மறைப் பங்களிப்பை ஆற்றி வருகிறோம்" என்று ஜூபேர் கூறினார்.
 
விங் கமாண்டர் அபிநந்தனை விடுவிப்பதில் கூட, செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின்-சல்மானுக்குப் பங்கு உண்டு என்று முன்பு கூறப்பட்டது. இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டவுடனேயே, செளதி பட்டத்து இளவரசர் சல்மான், முதலில் பாகிஸ்தானுக்கும் பின்னர் இந்தியாவுக்கும் சுற்றுப்பயணம் செய்து இரு நாட்டு தலைவர்களுடனும் பேசினார்.
 
ராஜீய ரீதியிலான கட்டாயத்துக்குட்பட்டு, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் தியாகத்தைப் பாராட்டிய அதே செளதி இளவரசர், பயங்கரவாதம் எந்த நிலையிலும் பொறுத்துக்கொள்ளப்படாது என்ற இந்தியப் பிரதமர் மோதியின் கருத்துக்கும் ஆதரவு தெரிவித்தார். இதை வெளியுறவுத் துறை வல்லுநர்கள் கவனிக்கத் தவறவில்லை.
 
இது மட்டுமல்லாமல், செளதி அரேபியாவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஆடில் அல்-ஜூபேர் இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டின் போது, அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
செளதிக்கு ஏன் அதீத அக்கறை?
செளதி அரேபியாவுக்கான இந்திய தூதராக இருந்த டால்மிஸ் அகமது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிபிசி நிருபர் ரெஹான் ஃபசலிடம் 'இரான் எதிர்ப்பு கூட்டணிகளில் பாகிஸ்தானை தக்க வைத்துக் கொள்ள செளதி அரேபியா விரும்புகிறது. அதேசமயம், இரானுடனான இந்தியாவின் நெருக்கத்தைக் குறைப்பதிலும் முனைப்பு காட்டி வருகிறது.' என்று கூறினார்.
 
இந்த நிலையில்தான் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், செளதி மற்றும் அமெரிக்கா இடையிலான இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படாது என்று ஆடில் அல்-ஜூபேர் அரப் நியூஸ் ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவானவை, பன்முகத்தன்மை கொண்டவை என்றும் அவர் கூறினார்.
 
"செளதி அரேபியாவுடான சுமூக உறவை பராமரிப்பதில் தமது அரசு உறுதியாக இருப்பதாக பைடன் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது" என்றும் தமது நேர்காணலின்போது ஜூபேர் சுட்டிக்காட்டுகிறார். வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்கா இன்னும் நம்மை காக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், பைடனின் வருகையால் எங்கள் உறவு பாதிக்கப்படும் என்பதை நான் ஏற்கவில்லை,'' என்று ஜூபேர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
"அமெரிக்காவிற்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான உறவு 80 ஆண்டுகள் பழமையானது. உலகளாவிய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்த உறவு முக்கியமானது. அமெரிக்காவுடனான எங்கள் உறவு உத்தி ரீதியானது. எங்கள் பொருளாதார நலன்கள் பரஸ்பரமானவை. நாங்கள் ஒன்றாக பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறோம்,'' என்று ஜூபேர் கூறினார்.
 
கடந்த சில வாரங்களில் செளதி அரேபியா மீது தாக்குதல்கள் நடந்துள்ளன, அவற்றுக்கு இரானின் நேரடித் தொடர்பு உண்டு என்றும் செளதி வெளியுறவு துணை அமைச்சர் கூறினார். "தாக்குதலில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் இரானில் தயாரிக்கப்படுகின்றன அல்லது அங்கிருந்து வழங்கப்படுகின்றன. அனைத்து ஏவுகணைகளும் ட்ரோன்களும் இரானால் தயாரிக்கப்படுபவை அல்லது அங்கிருந்து தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன." என்று ஜூபேர் மேலும் தெரிவித்தார்.
 
சமீபத்திய வாரங்களில், செளதி அரேபிய எண்ணெய் தளங்கள் மீது பல தாக்குதல்கள் நடந்ததாகச் செய்திகள் வந்துள்ளன. அந்த தாக்குதல்களுக்கு யேமனில் செயல்பட்டு வரும் ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் தான் காரணம் என்பது செளதி அரேபியாவின் நிலைப்பாடு. இரான் ஹுத்தி கிளர்ச்சியாளர்களை ஆதரிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
 
யேமன் அரசியல் தீர்வுக்கு யோசனை
 
இரான் ஆதரவுடைய பிரிவினைவாதிகள் யேமெனில் இருப்பதால் அங்கு அமைதி சாத்தியமில்லை என அர்த்தமல்ல என்று அல்-ஜூபேர் கூறினார்.
 
"இதற்கு ஒரு அரசியல் தீர்வு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அந்த அரசியல் தீர்வை அடைய முயற்சிக்கிறோம், பல ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை சீரழியத் தொடங்கியதிலிருந்தே அவ்வாறு செய்ய முயற்சிக்கிறோம்" என்று அவர் கூறினார்.
 
"ஐ.நா. சிறப்புத் தூதர்களின் ஒவ்வொரு முயற்சியையும், நாங்கள் ஆதரித்து வந்துள்ளோம். யேமன் அரசாங்கத்தை ஒன்றிணைக்கவும், வடக்கோடு தெற்கை இணைக்கவும் நாங்கள் பணியாற்றியுள்ளோம். மனிதாபிமான உதவிக்காக 17 பில்லியன் டாலர்களைத் திரட்டியுள்ளோம். ஜி.சி.சி முன்முயற்சியின் கீழ் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதே யேமன் பிரச்னைக்கு ஒரே தீர்வ என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். யேமன் தேசிய பேச்சுவார்த்தை மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2216 இன் விளைவாக ஜி.சி.சி முயற்சி உருவாக்கப்பட்டது," என்று அவர் நினைவு கூர்ந்தார்.
 
உலகின் சில பகுதிகளில் தாக்குதலுக்குட்பட்ட மனித உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும் அல்-ஜூபேர் பேசினார்.
 
அவர், "செளதி அரேபியா மனித உரிமைகள் விஷயத்தில் நிறைய வளர்ச்சி கண்டுள்ளது என்று நாங்கள் நினைக்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்பு எங்களிடம் பெண்களுக்குப் பள்ளி இல்லை; இன்று 55 சதவீத கல்லூரி மாணவர்கள் பெண்கள் தான். 70 ஆண்டுகளுக்கு முன்பு, நமது கல்வியறிவு விகிதம் 90 சதவீதம், இன்று எல்லோரும் படிக்கலாம், எழுதலாம், பள்ளிக்குச் செல்லலாம். " என்று பெருமையோடு கூறுகிறார்.
 
"70 அல்லது 80 ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தை இறப்பு விகிதம் மிக அதிகமாக இருந்தது. அநேகமாக மூன்று குழந்தைகளில் இருவர் இரண்டு வயதிற்குள் இறந்துவந்த நிலை இருந்தது. இன்று இந்த விகிதம் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவுக்கும் சமமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு தலைமுறைக்குள் ஆயுட்காலம் விகிதம் கிட்டத்தட்ட இரு மடங்காகும். எங்கள் மக்களுக்குப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் நாங்கள் அவர்களின் நலனைப் பாதுகாக்கிறோம். " என்கிறார்.
 
மேலும், "செளதி அரேபியாவின் விமர்சகர்கள் குறிப்பிடும் அதே மனித உரிமைகளில் நாங்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம், பெண்களுக்கு சுதந்தரம் கொடுக்கும் விஷயத்தில், இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் விஷயத்தில், நீதித்துறைச் சீர்திருத்தங்கள் விஷயத்தில், சமுதாயத்தில் வெளிப்படைத் தன்மை கொண்டு வரும் விஷயத்தில், இளைஞர்கள் தங்கள் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் அவர்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்வதிலும் முன்னேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவை தான் மனித உரிமைகளின் முக்கிய அம்சமாகும். " என்று அவர் விளக்குகிறார்.
 
இஸ்ரேல் குறித்த கருத்து
 
சில அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு "இயல்பானது" என்றாலும், செளதி அரேபியாவின் நிலை மாறாது என்று ஆடில் அல்-ஜூபேர் வலியுறுத்தினார்.
 
"அரபு சமாதான முயற்சிகள் மற்றும் தொடர்புடைய ஐ.நா. தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்ட இரு அரசுத் தீர்வை நாங்கள் விரும்புகிறோம். ஒரு பாலத்தீன அரசு உருவாக வேண்டும். கூடவே, அமைதி மற்றும் பாதுகாப்போடு ஒன்றாக வாழ வேண்டும். அதுதான் எங்கள் நிலைப்பாடு." என்று தெளிவுபடுத்துகிறார்.
 
"நாங்கள் அரபு உலகத்தை, மூன்று 'இல்லை'களிலிருந்து காக்க உதவ முயற்சிக்கிறோம். கார்த்தூமில் 1967 இல் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பு, 'உரையாடல் இல்லை, அங்கீகாரம் இல்லை, அமைதியும் இல்லை' என்று கூறுகிறது. 80 களில் ஃபெஸில் நடந்த அரபு மாநாட்டில் மறைந்த சுல்தான் ஃபஹத்தின் எட்டு அம்ச திட்டத்தை முன்வைத்து முயற்சிக்கிறோம். "
 
"அரபு உலகம் அதை ஏற்றுக்கொண்டது, முதலில் இரு அரசுத் தீர்வைக் கோரியது. பின்னர் 2002 இல் பெய்ரூட்டில் நடந்த (அரபு லீக்) உச்சிமாநாட்டில், அரபு சமாதான முயற்சியை நாங்கள் முன்வைத்தோம். அதில் நான் கூறியது போல இரு அரசுகள், அங்கீகாரம், உறவுகள் ஆகியவற்றை இயல்பாக்குதல் மற்றும் அண்டை நாடுகளுடனான நல்லுறவுகளுக்குத் தேவையான அனைத்தும் கோரப்பட்டன. இது உலகளாவிய சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இப்போதும் அது தான் எங்கள் நிலைப்பாடு," என்று ஆடில் அல் ஜூபேர் தெளிவுபடுத்துகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் நடிக்க வேண்டும் என்றால் டிக்கெட் வாங்க வேண்டும்: பிரச்சார மேடையில் கமல் பேச்சு!