Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவு ஏன் முக்கியம் வாய்ந்தது?

Advertiesment
வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவு ஏன் முக்கியம் வாய்ந்தது?
, ஞாயிறு, 7 மார்ச் 2021 (18:11 IST)
கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, பிரதமர் நரேந்திர மோதி இதுவரை எந்த வெளிநாட்டுக்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர் இப்போது வங்கதேசம் செல்ல இருக்கிறார்.
 
சுதந்திரம் பெற்ற ஐம்பது ஆண்டுகளைக்கொண்டாடும் வகையில் வங்கதேசம் இந்த ஆண்டு பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதில் மிக முக்கியமான நிகழ்வு 'முஜிப் திவஸ்' அதாவது 'முஜிப் தினம்'. இது வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிப் உர் ரஹ்மானின் நினைவாக கொண்டாடப்படுகிறது.
 
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி அங்கு செல்கிறார். பிரதமரின் இந்த இரண்டு நாள் பயணம் மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
 
முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி, இந்திய குடியரசு தின அணிவகுப்பில் வங்கதேச ராணுவத்தின் ஒரு குழுவும் பங்கேற்றது.
 
வங்கதேசம் 1971 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. இதில் இந்திய ராணுவத்திற்கு முக்கிய பங்கு இருந்தது. அந்த நேரத்தில், பாகிஸ்தானின் ராணுவம் இந்திய ராணுவத்தின் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோரா முன்னிலையில் சரணடைந்தது. அதன் பின்னர் தான் சுதந்திர வங்கதேசம் உருவானது.
 
ஜனவரி 26 அன்று, புதுடெல்லியின் ராஜ்பத்தில் வங்கதேச ராணுவக் குழு அணிவகுத்துச்சென்றபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் புதிய தொடக்கமாக அந்த தருணத்தை ராஜரீக வட்டாரங்கள் பார்த்தன.
 
இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பல பிரச்னைகள் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலத்தில் தீர்க்கப்பட்டன. இவற்றில் மிக முக்கியமானது இரு நாடுகளுக்கும் இடையிலான 'என்க்ளேவ்'(நிலப்பகுதிகள்) பிரச்னை.
 
ஆனால் 2019 ஆம் ஆண்டில் மத்திய அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியபோது, வங்கதேசத்திற்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகளில் பின்னடைவை பார்க்கமுடிந்தது.
 
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தச் சட்டத்தை 'தேவையற்றது' என்று குறிப்பிட்டார். அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்ட பல இருதரப்பு பயணங்கள் மற்றும் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
 
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பல மாதங்களுக்கு அங்குள்ள இந்திய தூதரை சந்திக்க மறுத்துவிட்டார். புதிய சட்டத்தின் மூலம், "வங்கதேசத்தில் வாழும் 9 சதவிகித இந்து சிறுபான்மையினர் பாதுகாப்பற்றவர்கள்" என்ற செய்தியை அளிக்க இந்தியா முயற்சிக்கிறது என்று அந்த நாடு கூறியது.
 
இதுதவிர கொரோனா தொற்றுகாலத்திலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் ஏற்படும் பல சூழல்கள் உருவாயின.
 
கடும் நெருக்கடியில் வங்கதேச ஆடை தயாரிப்புத்துறை - 20 லட்சம் பேருக்கு வேலை இழப்பா?
இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்குள் நுழையும் மக்கள் - பிபிசி கள ஆய்வு
கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியா வெங்காய ஏற்றுமதி மீது கட்டுப்பாடுகளை விதித்தது. வங்கதேசம் ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து சுமார் 3.5 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது.
 
கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தியாவில் அனைவருக்கும் போடப்படும்வரை அதை ஏற்றுமதி செய்ய முடியாது என்று இந்தியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் நிறுவனத்திடம் கூறியது.
 
இது வங்கதேசத்தை கோபப்படுத்தியது. ஏனெனில் கடந்த ஆண்டு, மூன்று கோடி தடுப்பூசிகளுக்கு இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் அந்தநாடு கையெழுத்திட்டிருந்தது. ஒப்பந்தத்தின் படி வங்கதேசத்திற்கு தடுப்பூசி தருவதாக பின்னர் சீரம் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
 
கொரோனா காலத்தில்தான் வங்கதேசத்துடனான ராஜதந்திர உறவுகளை திரைக்கு பின்னால் இருந்து மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா தொடங்கியது என்று வெளியுறவு மற்றும் கேந்திர விவகார நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
ஜெ
இதன் விளைவாகத்தான் வங்கதேசம் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான உறவுகள் கேந்திர கண்ணோட்டத்தில் மட்டுமே வலுப்பெறவில்லை, அதையும் தாண்டி சென்றுவிட்டதாக கூறினார் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
தெற்காசியாவில் மட்டுமல்ல, முழு இந்திய-பசிபிக் பிராந்தியத்திலும் வங்கதேசம், இந்தியாவின் முக்கியமான நட்பு நாடாக மாறியுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
 
"இரு நாடுகளும் மிகப்பெரிய எல்லையை பகிர்ந்துகொள்வதால் ,வங்கதேசம் இந்தியாவுக்கு மிக நெருக்கமானது," என்று கேந்திர மற்றும் வெளியுறவு நிபுணர் மனோஜ் ஜோஷி தெரிவித்தார். "வங்கதேசத்திற்கும் இந்தியாவுக்கும் இடையில் 4,096 கி.மீ எல்லை இருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன."என்று அவர் குறிப்பிட்டார்.
 
"உறவுகளில் ஏற்ற இறக்கம் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் இந்தியாவும் வங்கதேசமும் ஒன்றுக்கொன்று முக்கியமானதாக இருக்கின்றன. வங்கதேசம் உருவானதிலிருந்து இந்தியாவுடனான உறவுகள் ஒருபோதும் கவலைப்படும்படியான பதற்றமாக ஆனதில்லை," என்று ஜோஷி குறிப்பிடுகிறார்.
 
"வங்கதேசமும் இந்தியாவும் பரஸ்பரம் தங்கள் தலைவர்களை சிறப்பாக வரவேற்று வந்துள்ளன. இந்த முறை பிரதமர் நரேந்திர மோதி அங்கு செல்லும் போதும், இந்தப்பாரம்பரியம் தொடரும்," என்று கோஷி கருதுகிறார்.
 
"இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத பல பிரச்னைகள் உள்ளன. இவற்றில், டீஸ்டா நதிநீர் பகிர்வு மிக முக்கியமானது" என்கிறார் அவர்.
 
ஷேக் ஹசினா , மோடி, மம்தா
பட மூலாதாரம்,GETTY IMAGES
"ஆனால் டீஸ்டா நதி நீர் பகிர்வு பிரச்னையை விரைவில் தீர்க்கமுடியாது. ஏனெனில் இந்த விவகாரத்தில் மூன்று பங்குதாரர்கள் உள்ளனர் - மத்திய அரசு, மேற்கு வங்க அரசு மற்றும் வங்கதேசம். மத்திய அரசுக்கும், வங்கதேசத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படக்கூடிய பல பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது. உதாரணமாக என்க்ளேவ் பிரச்சனை. இப்போது இரு நாடுகளும் நான்கு பருவங்களிலும் பயிர்களை நடவு செய்கின்றன, அதற்காக நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. ஆகவே டீஸ்டா பிரச்னை நீண்டகாலம் நிலுவையில் தொடரக்கூடும்," என்கிறார் ஜோஷி.
 
கடந்த ஆண்டு டிசம்பரில், இரு நாடுகளுக்கிடையில் ஒரு 'மெய்நிகர் சந்திப்பு' நடைபெற்றது. அதில் வர்த்தகம், போக்குவரத்து மற்றும் முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் டீஸ்டா பிரச்னையில் இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையில் எந்த பேச்சும் நடைபெறவில்லை. டீஸ்டா நீரை வங்கதேசத்துடன் பகிர்ந்து கொண்டால், மேற்கு வங்கத்தில் வறட்சி நிலைமை ஏற்படும் என்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கூறுகிறது.
 
"இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார விநியோகத்தை எவ்வாறு வலுவாகவும், விரிவாகவும் ஆக்க முடியும் என்பது தற்போதைய சூழலில் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் மிகவும் முக்கியமானது," என்று இந்திய - வங்கதேச உறவுகளை கண்காணிக்கும் லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் வெளியுறவு மற்றும் கேந்திர உறவுகள் விவகார பேராசிரியர் ஹர்ஷ் வி பந்த் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
வங்கதேசத்தை பொருத்தவரையில், ராஜரீக சிக்கல்களில் மாட்டிக்கொள்ளக்கூடிய பல விஷயங்கள் தொடர்பாக இந்தியா பொறுமையாக செயல்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். "அதனால்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஒருபோதும் மோசமடையவில்லை,"என்று அவர் கூறுகிறார்.
 
 
வங்கதேசத்தின் கடலோர எல்லையின் பிரச்னையை அவர் மேற்கோள் காட்டினார். அதில் சர்வதேச நீதிமன்றம் வங்கதேசத்திற்கு இணக்கமாக தீர்ப்பளித்தது. இந்த முடிவை இந்தியா மதித்தது.
 
"தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பயங்கரவாத அமைப்புகள் பரவுவது இந்தியாவுக்கு மிகவும் கவலை அளிக்கும் பிரச்னை. இந்தியாவை அச்சுறுத்தும்வகையிலான நடவடிக்கைகளை இந்த அமைப்புகள் வங்கதேசத்தில் மேற்கொள்வதை இந்தியா விரும்பவில்லை. குறிப்பாக இரு நாடுகளின் எல்லையில் உள்ள பகுதிகளில் இதற்கான அறிகுறிகள் உள்ளன. ஆனால் ஷேக் ஹசீனா அரசு அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது," என்று பேராசிரியர் பந்த் குறிப்பிட்டார்.
 
வங்கதேசத்துடனான சிறந்த மற்றும் வலுவான உறவு, இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானது. இதனால் இரு நாடுகளும் வலுவடையும் என்று பந்த் மற்றும் பிற வெளி விவகார வல்லுநர்கள் நம்புகின்றனர். பிரதமர் நரேந்திர மோதியின் பயணம் உறவுகளை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
 
"எந்தவொரு பிரச்னை தொடர்பாகவும் இரு நாடுகளும் பகிரங்கமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு கட்டத்தை இந்திய வங்கதேச உறவுகள் எட்டிவிட்டன," என்று முன்னாள் இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா கூறினார்.
 
"வங்கதேசம் ஒருபோதும் இந்தியாவுடனான உறவை மோசமாக்கவில்லை. அதன் விடுதலையில் இந்தியாவுக்கு முக்கிய பங்களிப்பு இருப்பதாக அந்த நாடு எப்போதுமே கருதுகிறது,"என்கிறார் சர்னா.
 
"இது இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான ராஜரீக மற்றும் கேந்திர உறவுகளின் 50 வது ஆண்டு விழா. பிரதமர் நரேந்திர மோதி அங்கு செல்வது அவசியம். அவரது பயணம் எல்லா கோணத்திலிருந்தும் முக்கியமானது. ஏனெனில் ஒரு வருட இடைவெளிக்குப்பிறகு அவர் மற்றொரு நாட்டிற்குச் செல்கிறார். வங்கதேசமும் இந்தியாவும் ஒன்று மற்றதன் முக்கியமான நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றன. அந்த நாட்டின் சுதந்திர பொன்விழா கொண்டாட்டம், இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் முக்கியமானது,"என்று அவர் குறிப்பிட்டார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குமரி பேரணியில் அமித்ஷா: புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகர்!