Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூட்டானின் சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்துக்கு சீனா ஏன் உரிமை கோருகிறது?

பூட்டானின் சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்துக்கு சீனா ஏன் உரிமை கோருகிறது?
, வியாழன், 26 நவம்பர் 2020 (15:16 IST)
இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையே இருக்கிற, பனிமலைகளால் சூழப்பட்ட நாடு பூட்டான். இந்த இரு பெரிய அண்டை நாடுகளும் பலப்பரீட்சையில் ஈடுபட்டிருப்பதால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது இந்தச் சிறிய நாடு.

இந்தியாவின் நட்பு நாடாக இருக்கிற பூட்டானின் கிழக்குப் பகுதியில் ஒரு வனவிலங்கு சரணாலயம் உள்ளது. சரணாலயம் அமைந்திருக்கிற இடம் பிரச்சனைகளுக்கு உட்படாத நிலப்பகுதியாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தக் கோடையில் சீனா திடீரென்று அந்த சரணாலயத்தின்மீது உரிமை கொண்டாடத் தொடங்கியிருக்கிறது என்பதால் பூட்டான் அதிர்ச்சியடைந்திருக்கிறது.
 
பூட்டானைச் சேர்ந்த பல விமர்சகர்கள் இதைப் பற்றி விரிவாகப் பேச விரும்புவதில்லை என்றாலும், இந்தியாவுடனான எல்லைப் பிரதேசப் பிரச்சனையில், பெய்ஜிங்  பூட்டானைத் தன் கட்டுப்பாட்டுக்குள் இழுத்துக்கொள்ள நினைக்கிறது என்று பலரும் நம்புகிறார்கள். புத்தமதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கிற, ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள்தொகையைக் கொண்ட நாடு பூட்டான்.
 
ஏப்ரல் மாதத்திலிருந்தே உலகின் மிக அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளான இந்தியாவும் சீனாவும் பல்லாயிரக்கணக்கான படைவீரர்களைத்  தங்களது மேற்கு எல்லைப்பகுதியில் குவித்துக்கொண்டேயிருக்கின்றன. இரண்டு நாடுகளுமே அத்துமீறிப் பிரவேசம் செய்வதாக ஒன்றை ஒன்று குற்றம்  சாட்டுகின்றன.
 
சீனாவின் நிலப்பகுதியை சுற்றி 14 நாடுகளின் எல்லைகள் உண்டு. இதில் பெரும்பாலான நாடுகளோடு எல்லைப் பிரச்சனைகளை சுமுகமாக முடித்துவிட்டதாக  சொல்கிறது சீனா. இதில் இந்தியாவும் பூட்டானும் விதிவிலக்கு, பல வருடங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் இந்த எல்லைப் பிரச்சனைகள் தீரவில்லை.
 
சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் ஒரு பன்முக சூழலியலைக் கொண்டது. அத்துடன் அரிய காட்டுயிர்களும் இங்கே உள்ளன.
 
1950களில் பெய்ஜிங் திபெத்தின் மீது படையெடுத்து அந்த நாட்டைக் கைப்பற்றியது. இப்போது பூட்டான் மற்றும் இந்தியாவுடன் பிரச்சனைக்குரிய பகுதிகளாகத் தான்  கருதும் நிலப்பகுதிகள் எல்லாமே திபெத்தைச் சேர்ந்தவை என்பதாகவே சீனா பார்க்கிறது.
 
"பூட்டானை எரிச்சலூட்டுவதற்கு சீனா முயற்சிக்கிறது"
 
ஜுன் மாதம் நடந்த ஒரு இணையவழி உரையாடலில்தான் சீனா இந்தப் பேச்சை முதலில் தொடங்கியிருக்கிறது. கிழக்கு பூட்டானில் கிட்டத்தட்ட 740 சதுர  கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் ஒரு காட்டுப்பகுதி சாக்டெங் வனவிலங்கு சரணாலயம். அது தனக்கு சேரவேண்டும் என்று சீனா சொல்லியிருந்தது.
 
இயற்கையைப் பாதுகாப்பதற்கான நிதியுதவிகளைத் தொடர்ந்து செய்துவரும் அமெரிக்க இயக்கமான உலகளாவிய சுற்றுச்சூழல் நிறுவனத்திடம் இந்த சரணாலயத்துக்கான நலத்திட்டங்களுக்கான நிதியுதவியை பூட்டான் அரசு கோரியிருந்தது. அந்த நிலப்பரப்பின் உரிமை பிரச்சனைக்குரியது என்று சொல்லி, நிதியுதவி தரக்கூடாது என்று சீனப் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
 
இதை மறுத்த பூட்டான், இதுவரை நடந்த 24 பேச்சுவார்த்தை சுற்றுகளிலும் இந்த இடத்தின் பெயர் ஒரு முறை கூட சொல்லப்படவில்லை என்று குறிப்பிட்டது.  இருபத்தி ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை கோவிட்-19 பிரச்சனை காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
 
ஜூலையில் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார். "சீனாவுக்கும்  பூட்டானுக்கும் இன்னும் எல்லைப் பேச்சுவார்த்தைகள் முடியவில்லை. மத்திய, கிழக்கு, மற்றும் மேற்கு எல்லைகள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை" என்றார். இதில் "கிழக்கு" என்று அவர் குறிப்பிட்டது சாக்டெங் நிலப்பரப்பை.
 
பூட்டானைச் சேர்ந்த வரலாற்றாளர் கர்மா ஃபுன்ட்ஸோ பேசும்போது, "சாக்டெங் நிலப்பகுதி எப்போதுமே பிரச்சனைக்குள்ளானதாக இருக்கவில்லை. அது பூட்டானின்  கட்டுப்பாடிலேயே தான் எப்போதும் இருந்திருக்கிறது. அந்தப் பகுதி சீனாவைச் சேர்ந்தது, சீனாவுக்கும் அதற்கு தொடர்பு உண்டு என்பதுபோன்ற விஷயங்களுக்கு எந்த  ஆதாரமும் கிடையாது" என்கிறார்.
 
மேலும் பேசிய அவர், "உலகளாவிய சுற்றுச்சூழல் நிறுவனத்தில் சீன பிரதிநிதி பேசியிருப்பது பூட்டானை எரிச்சலபடுத்துவதற்கான முயற்சி. மற்ற இடங்களில் உள்ள  எல்லைப் பிரச்சனைகள் இன்னும் தீராமல் இருப்பதால் அப்படி செய்திருக்கிறார்" என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிஜ குஜராத் மாடல்' இவர்தான்: கமல்ஹாசன் டுவீட்!