Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது ஏன்?

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (14:46 IST)
வன்னியர் சாதிக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. "அரசுத் தரப்பு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை" எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க அணியில் பா.ம.க இணைவதற்காக நடந்த பேச்சுவார்த்தையிலும், வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 
இதையடுத்து, தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி.
 
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வாசித்தார். அந்த அறிக்கையில், "கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில், அரசின் நியமனங்களில் வன்னிய குல சத்ரியர்களுக்கு தனிப்பட்ட ஒதுக்கீடு வழங்கக்கோரி அவர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்காக உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆய்வுசெய்தோம்.
 
இதில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரின் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (வன்னியர்) 10.5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்துள்ளனர். ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள அதற்கேற்ப இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற அரசு முடிவுசெய்துள்ளது" என்றார்.
வன்னியர்களுக்கு மட்டும் தனியாக 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்திவந்த பாட்டாளி மக்கள் கட்சி, இந்த ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டதுடன், அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தது.
 
அதே நேரம், இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டை பொதுவில் பெற்றுவந்த பிற சாதிகள் மத்தியில் இந்த சட்டத்தால் அதிருப்தி ஏற்பட்டது. குறிப்பாக தென்மாவட்டத்தில் உள்ள சீர் மரபினர் மத்தியில் இந்த சட்டம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
இந்த இடஒதுக்கீட்டால் தென்மாவட்டங்களில் அ.தி.மு.கவின் வாக்குவங்கி பாதிக்கப்படலாம் என்பதை அறிந்து, `இது தற்காலிகமானதுதான்' என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரது பேச்சுக்களும் விவாதப் பொருளாக மாறியது.
 
இதன்பின்னர், தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஒரு கட்டத்தில், வன்னியர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தி.மு.க அரசு அரசாரணையை வெளியிட்டது. வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
 
இதுதொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
 
இன்று இந்த வழக்கில் உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், ` சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்?, `அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?' எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
 
மேலும், `சாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டினை வழங்க முடியுமா? இதுதொடர்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா என்பன உள்பட ஆறு கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது' எனத் தீர்ப்பளித்துள்ளனர்.
 
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி உட்பட வன்னியர் அமைப்புகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பிக்பாக்கெட்.. பணத்தை இழந்த திமுக நிர்வாகிகள்..!

எங்கும் கொலை; எதிலும் கொலை: நெல்லை நீதிமன்ற கொலை குறித்து ஈபிஎஸ் அறிக்கை..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார்? திமுக, அதிமுக தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments