Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பிரதமர் மோதியை அழைத்தது ஏன்? தலைமை நீதிபதி சந்திரசூட் பதில்

Justice Chandrachud

Prasanth Karthick

, புதன், 6 நவம்பர் 2024 (09:41 IST)

தனது வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டது குறித்து இந்தியாவின் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதிலளித்துள்ளார்.

 

 

இது தொடர்பாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழ் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "தனது வீட்டில் நடந்த ஒரு தனிபட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவே பிரதமர் வருகை தந்திருந்தார், அது ஒரு பொது நிகழ்ச்சி அல்ல" என்று தெரிவித்தார்.

 

மேலும், “இந்தச் சந்திப்பில் தவறு எதுவும் இல்லை என்று தான் நம்புவதாகவும், இது சமூக நிகழ்வாக இருந்தாலும் இது நீதித் துறையினருக்கும் மற்றும் நிர்வாகத்தினருக்கும் இடையே நடைபெறும் ஒரு சாதாரண சந்திப்புதான்” என்றார் அவர்.

 

இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியான சந்திரசூட் நவம்பர் 10ஆம் தேதியன்று ஓய்வு பெறுகிறார். இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்கவுள்ளார்.

 

கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி, தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

 

ஆனால் இதைப் பல பிரபல வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

 

நீதிபதி சந்திரசூட் அளித்த பதில் என்ன?
 

பிரதமரை அவரது வீட்டில் சந்தித்தது குறித்த கேள்விக்கு சந்திரசூட், "நீதித் துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான தொடர்பு என்பது ஒரு நீதிமன்றத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு முக்கியம்" என்றார்.

 

“ஒரு ஒப்பந்தம் இது போல கை எழுத்தாவதில்லை என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தயவுசெய்து எங்களை நம்புங்கள். நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய அங்கு கூடவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

 

அந்த நிகழ்வில் பிரதமர் மோதியுடன் இருக்கும் புகைப்படங்களில் மற்ற நீதிபதிகளோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர்களோ இருப்பதை விரும்புவீர்களா என்ற கேள்விக்கு, “அப்படி இருந்திருந்தால், அது தேர்வுக் குழுவினர் உள்ள புகைப்படம் போலத் தோன்றியிருக்கும்” என்றார்.

 

“இது ஊழல் கண்காணிப்பு ஆணையம் அல்லது சிபிஐ இயக்குநர் நியமனத்திற்கான தேர்வுக் குழுவின் கூட்டம் அல்ல என்பதால் எதிர்க் கட்சித் தலைவரை நான் அழைக்கவில்லை” என்று அவர் இலகுவாக பதில் அளித்தார்.

 

'அனைவருக்கும் பிணை வழங்கியுள்ளேன்'

 

பல வழக்குகளில் நீதிமன்றம் பிணை வழங்காதது குறித்த கேள்விக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், “இது மிகவும் கவலைக்குரிய விஷயம். பிணை என்பது ஒரு விதிவிலக்கல்ல, அது ஒரு விதி. ஆனால் கீழ் நீதிமன்றங்களுக்கு இந்தச் செய்தி சென்றடையவில்லை. ஆகையால், இந்த நீதிமன்றங்கள் பிணை வழங்கத் தயங்குகின்றன,” என்றார்.

 

“என்னைப் பொறுத்தவரை, யாராக இருந்தாலும், அதாவது அர்னாப் முதல் ஜுபைர் வரை அனைவருக்கும் நான் பிணை வழங்கியுள்ளேன்” என்று நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.

 

தான் தலைமை நீதிபதியாக இருந்த இரண்டு வருட காலத்தில் உச்சநீதிமன்றத்தில் 21 ஆயிரம் பிணை வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், 21,358 பிணை வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

'சுயாதீனமான நீதித்துறை'

 

பொது நீதிமன்றங்கள் எதிர்க்கட்சியைப் போல் இருக்க வேண்டும் என்ற அழுத்தம் உள்ளதா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

 

அதற்குப் பதிலளித்த அவர், “தன்னார்வ குழுக்கள் மற்றும் பல்வேறு குழுக்கள் சில முயற்சிகளை எட்டுவதற்காக மின்னணு ஊடகங்களைப் பயன்படுத்தி நீதிமன்றத்திற்கு அத்தகைய அழுத்தம் கொடுக்க முயற்சிகள் செய்து வருகின்றன” என்று கூறினார்.

 

ஆனால், "சுயாதீனமான நீதித்துறை என்பது நீதிமன்றங்கள் எப்போதும் அரசுக்கு எதிராகத் தீர்ப்புகளை வழங்க வேண்டும் எனப் பொருளல்ல" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.

 

“பொதுவாக நீதித்துறையின் சுதந்திரம் என்பது நாட்டின் நிர்வாகத் துறையிடம் இருந்து சுதந்திரமாகத் தனித்துச் செயல்படுவதாகும். இப்போது நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசாங்கத்தின் செல்வாக்கில் இருந்தும் விலகித் தனித்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த விஷயங்கள் மட்டுமே நீதித்துறையின் சுதந்திரத்தை வரையறுக்காது” என்று அவர் தெரிவித்தார்.

 

“இதுபோன்ற குழுக்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்கினால், நீங்கள் சுயாதீனமானவர், அவர்களுக்கு எதிராகத் தீரப்பளித்தால், நீங்கள் சுயாதீனமானவர் அல்ல என்று பார்க்கப்படுவதாக” அவர் கூறினார்.

 

நீதிபதிகள் நியமனம், கொலிஜியம்-அரசு மோதல் பற்றி சந்திரசூட் கூறியது என்ன?

 

நீதித்துறையில் நீதிபதிகள் நியமனம் குறித்த கேள்விக்கு, கொலீஜியம் தனது பங்கைச் செய்துள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். இப்போது கொலீஜியத்தின் பரிந்துரைகளுக்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

 

ஆனால், “கொலிஜியத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட சில நபர்கள் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை” என்றார்.

 

“அவர்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் செயல்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அரசியலமைப்புச் செயல்பாட்டின் எங்கள் பங்கை நாங்கள் செய்து முடித்துள்ளோம். நாங்கள் சில நபர்களை மதிப்பீடு செய்து அதை அரசுக்குப் பரிந்துரைக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

 

நீதிபதிகள் நியமனத்தைத் தாமதப்படுத்தினால், அரசுக்கு வீட்டோ அதிகாரம் கிடைத்துவிட்டதாகப் பொருளா என்ற கேள்விக்கு அவர், “கொலீஜியமும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது” என்று பதில் அளித்தார்.

 

“வீட்டோ அதிகாரத்தை அரசு மட்டும் பயன்படுத்துவதில்லை. வீட்டோ அதிகாரம் என்பது கொலீஜியமும் பயன்படுத்தும் ஒன்று. நாங்கள் ஒப்புதல் அளிக்கும் வரை எந்த நியமனமும் செய்ய முடியாது.”

 

கொலிஜியத்திற்கு வழக்கறிஞர்களைப் பரிந்துரைப்பதில் அரசின் பங்கு என்ன?

 

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், "குறிப்பிட்ட ஒரு நபர் இந்த நியமனத்திற்குத் தகுதியற்றவர் என்பதை நாங்கள் கண்டறிந்தால், நாங்கள் அவரை வீட்டோ செய்கிறோம். அந்த நபரை இந்திய அரசு நியமிக்க முடியாது. தகுதி இல்லாத ஒருவரை நீதிபதியாக நியமிக்க முடியாது என்று நாங்கள் கருதுகிறோம்” என்றார்.

 

அவர் தலைமை வகித்த கொலீஜியம் செய்தவை குறித்துக் கேட்டபோது, “உச்சநீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட 18 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்; 40 பேரில் 42 பேர் தலைமை நீதிபதிகளாகப் பரிந்துரைக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்; உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்திற்கு 164 பரிந்துரைகளில் 137 பேர் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர், 27 பேர் அரசாங்கத்திடம் நிலுவையில் உள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

 

சந்திரசூட் பற்றி மூத்த வழக்கறிஞர்கள் கூறுவது என்ன?

 

செப்டம்பர் 11ஆம் தேதி பிரதமர் மோதி தலைமை நீதிபதி வீட்டிற்குச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதியான நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறையின் தனித்துவம் மற்றும் சுதந்திரம் குறித்து வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல பிரபலங்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்திருந்தனர்.

 

அப்போது, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான துஷ்யந்த் தவே, பிரதமர் மற்றும் நீதிபதி சந்திரசூட் இருவரையும் விமர்சித்தார்.

 

தலைமை நீதிபதி சந்திரசூட் தனது வீட்டில் பிரதமரை பூஜைக்காக அழைத்ததன் மூலமும், அயோத்தி தீர்ப்பை எழுத கடவுளின் அருள் வேண்டும் என்று குறிப்பிட்டதன் மூலமும் தன்னைப் பற்றி உண்மையாக அவர் வெளிக்காட்டியுள்ளார்," என்று 'தி வயர்' என்ற செய்தித் தளத்திற்கு அளித்த பேட்டியில் துஷ்யந்த் தவே குற்றம் சாட்டியுள்ளார்.

 

பிரபல பத்திரிக்கையாளர் கரண் தாப்பர், 'தலைமை நீதிபதி சந்திரசூட் வரலாற்றில் எப்படிப் பார்க்கப்படுவார்?' என்று துஷ்யந்த் தவேயிடம் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த துஷ்யந்த் தவே, "தலைமை நீதிபதி சந்திரசூட்டை வரலாறு நினைவில் வைத்திருக்காது என்று நம்புகிறேன். தலைமை நீதிபதி சந்திரசூட்டை பற்றி மக்கள் விரைவில் மறந்துவிடுவார்கள்” என்றார்.

 

அரசியல் ரீதியாக முக்கியமான விஷயங்களில் தலைமை நீதிபதி சந்திரசூட் எந்தத் தீர்ப்பையும் வழங்கவில்லை என்றும் அவர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், 'லவ் ஜிகாத்' மற்றும் 'ஹிஜாப் தடை' போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் துஷ்யந்த் தவே கூறினார்.

 

தலைமை நீதிபதி சந்திரசூட் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்

 

தலைமை நீதிபதி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தனது சட்ட வாழ்க்கையைத் தொடங்கினார்.

 

கடந்த 1998 முதல் 2000 வரை, இந்தியாவின் கூடுதல் அரசுத் தலைமை வழக்கறிஞராக இருந்தார். 2000ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி முதல் 2013ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி வரை பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார்.

 

அதே ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியன்று, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார். 2016ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தார், பின்னர் 2022ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதியில் இருந்து தற்போது வரை இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருக்கிறார்.

 

அவர் வழங்கிய முக்கியத் தீர்ப்புகள் பின்வருமாறு

 
  • தனி நபர் உரிமை
  • சுரங்க வரி வசூல் வழக்கு
  • சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட வழக்கு
  • ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரை வழக்கு
  • கருக்கலைப்பு உரிமை வழக்கு
  • ஆதார் சட்டம்
     

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்தியில் இருந்து வந்தாலும்.. லோக்கல்ல இருந்து வந்தாலும்.. வெற்றி எங்களுக்குதான்! - யாரை சொல்கிறார் உதயநிதி?