Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காம்பியா குழந்தைகள் மரணம்: இந்தியாவில் இருந்து இருமல் மருந்துகள் சென்றது ஏன்?

Advertiesment
காம்பியா குழந்தைகள் மரணம்: இந்தியாவில் இருந்து இருமல் மருந்துகள் சென்றது ஏன்?
, வியாழன், 13 அக்டோபர் 2022 (14:06 IST)
காம்பியாவில் கிட்டத்தட்ட 70 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் காரணமாக நடந்ததா என்று விசாரணை நடந்து வருகிறது.


இந்தியாவில் மருந்துகளின் தயாரிப்பு மற்றும் வணிகத்தை திறம்பட கட்டுப்படுத்துவது குறித்த சில சந்தேகங்கள் நிலவும் நிலையில் இந்த விசாரணை நடக்கிறது.

காம்பியாவில் எது தவறாக போனது?
கடந்த வாரம், உலக சுகாதார நிறுவனம் நான்கு இந்திய இருமல் மருந்துகள் குறித்து உலகளாவிய எச்சரிக்கை வெளியிட்டது. காம்பியாவில் குழந்தைகளுக்கு கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக வெளிவந்த செய்திகளையடுத்து, இந்த மருந்துகள் கடுமையான சிறுநீரக பாதிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.

இந்த மருந்துகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான மாசுத்தன்மை, டைஎதிலீன் கிளைகோல் (diethylene glycol) மற்றும் எத்திலீன் கிளைகோல் (ethylene glycol) ஆகிய இரண்டும் உள்ளன என்று ஆய்வக பகுப்பாய்வு உறுதிப்படுத்துகிறது. இந்திய அதிகாரிகளும் இருமல் மருந்து உற்பத்தியாளர் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனமும் இந்த மருந்துகள் காம்பியாவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

உற்பத்தியாளர் பற்றி கண்டறிந்த தகவல்கள்
தங்கள் நிறுவனம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டு தரநிலையை கடைப்பிடிப்பதாக மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் கூறுகிறது. ஆனால் அதன் சில தயாரிப்புகள் இந்தியாவில் தேசிய அல்லது மாநில அளவிலான தரக் கட்டுப்பாட்டு தரநிலையை மீறியுள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றிய அதிகாரபூர்வ தரவுகள் பின்வருமாறு:
  • 2011 ஆம் ஆண்டில், உள்ளூர் தரத்தை பூர்த்தி செய்யத் தவறிய ஒரு மருந்தை விற்றதற்காக பீகார் மாநிலம் இந்த நிறுவனத்தை கரும்பட்டியலில் சேர்ந்தது.
  • இந்த நிறுவனம் தரக் கட்டுப்பாட்டில் செய்த விதிமீறலுக்காக, 2018ஆம் ஆண்டு, இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்த நிறுவனம் தரக்கட்டுப்பாட்டு சோதனையில் தோல்வியடைந்தது.
  • 2022ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தில் நான்கு முறை தரக்கட்டுப்பாட்டு சோதனையில் தோல்வியடைந்துள்ளது.
  • தரமற்ற தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததற்காக வியட்நாம் கரும்பட்டியலில் உள்ள 40 இந்திய மருந்து நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், காம்பியாவில் நடந்த உயிரிழப்புகள் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், ஹரியாணா மாநில மருந்து ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் இந்தியாவின் மருந்து தர கட்டுப்பாடு ஜெனரல் ஆஃப் இந்தியா உட்பட சுகாதார அதிகாரிகளின் நெறிமுறைகளை விடாமுயற்சியுடன் பின்பற்றுவதாகவும் கூறியுள்ளது.

மருந்து ஒழுங்குமுறை அதிகாரிகள் இன்னும் இந்த மருத்துகளைச் சோதனை செய்யும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேலும் எந்த கருத்துகளும் கூற விரும்பவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மருத்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் ஏதேனும் தவறு இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹரியாணா சுகாதார அமைச்சர் அணில் விஜ் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.

இந்தியாவின் தரக் கட்டுப்பாடு எந்தஅளவுக்கு உள்ளது?
இந்தியா பெரும்பாலும் பொதுவாக வழங்கப்படும் மருந்துகள் என்ற அடிப்படையில், உலகில் உள்ள மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் இந்தியா உற்பத்தி செய்கிறது. ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள நாடுகளும், ஆசியாவின் பிற பகுதிகளிலும் சப்ளையராகவும் இந்தியா உள்ளது.

அதன் உற்பத்தி ஆலைகள் கடுமையான தரக் கட்டுப்பாட்டு தரநிலைகள் மற்றும் உற்பத்தி நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஆனால் இந்திய நிறுவனங்களின் சில ஆலைகளில் தரக் கட்டுப்பாட்டு பிரச்னைகளுக்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) போன்ற வெளிநாட்டு ஒழுங்குமுறை ஆணையங்களின் விமர்சனங்களையும் தடைகளையும் சந்தித்துள்ளன.

இந்தியாவின் மருந்துத் தொழில்துறை பற்றிய ஒரு பகுப்பாய்வு, கண்காணிப்பு அமைப்புகளுக்கு குறைவான நிதியுதவி, ஒழுங்குமுறைகளின் தளர்வான விளக்கம் ஆகியவற்றை முக்கியப் பிரச்னைகளாகச் சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவில் தரக்கட்டுப்பாடுகளை மீறுவதற்கு அளிக்கப்படும் தண்டனை ஒப்பீட்டளவில் குறைவே என்று பொது சுகாதார ஆர்வலர் தினேஷ் தாகூர் சுட்டிக்காட்டுகிறார். அதாவது 242 டாலர் அபராதம் மற்றும் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை. "ஒரு தரமற்ற மருந்துக்கும் ஒரு உயிரிழப்புக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்த முடியாத வரை, இதுதான் தண்டனையின் விதிமுறை," என்று அவர் கூறுகிறார்.

மேலும், தடுப்பூசிகள் தவிர, உலக சுகாதார அமைப்பின் தரநிலையில் மருந்துகளை ஒழுங்குமுறையைப்படுத்தும் தேசிய அமைப்புகளில் இந்தியா சேர்க்கப்படவில்லை. "இது மருந்து உற்பத்தி நடவடிக்கைகளில் சீரற்ற கட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம்," என்று எம்.எஸ்.எஃப்பின் (Médecins Sans Frontières (MSF) Access Campaign South Asia) தலைவர் லீனா மென்கானே கூறுகிறார்.

காம்பியா சோதனை செய்திருக்க வேண்டுமா?
டெல்லியில் உள்ள சுகாதார அமைச்சகம் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஆனால் "தரத்தை பொருத்தவரையில், இந்த மருந்துகளை இறக்குமதி செய்யும் நாடு, இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை தமது நாட்டின் தரத்தின் அடிப்படையில் சோதனை செய்வதே நடைமுறை வழக்கம்," என்று கூறுகிறது.

ஆனால் காம்பியாவின் மருத்துவக் கட்டுப்பாட்டு முகமையின் நிர்வாக இயக்குநர் மார்கியு ஜன்னே கைரா (Markieu Janneh Kaira), இருமல் மருந்தை காட்டிலும் மலேரியா எதிர்ப்பு மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் வலிநிவாரணிகள் ஆகியவற்றின் சோதனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று கூறுகிறார்.

இது குறித்து, தெளிவான தகவலைப் பெற அந்த முகமையை பிபிசி நியூஸ் தொடர்பு கொண்டது. ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. காம்பியாவின் அதிபர் அடாமா பாரோ, இந்த பெரும் துயரத்திற்காக காரணங்களின் ஆணிவேர் கண்டறியப்படும் என்றார். மேலும், அந்நாட்டில் மருந்துகள் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான தரக் கட்டுப்பாட்டு தேசிய ஆய்வகத்தை உருவாக்குவதாக அறிவித்தார்.

காம்பியா தரமற்ற மருந்துகளின் இறக்குமதியை தடுக்க பாதுகாப்பு விதிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். காம்பியா போன்ற குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு, போதுமான சோதனை வசதிகள் கொண்ட நாடுகள் உதவ வேண்டும் என்று எம்.எஸ்.எஃப் விரும்புகிறது.

"இது இறக்குமதி செய்யும் நாடுகளின் பொறுப்பு மட்டும் அல்ல," மென்கானே கூறுகிறார். நைஜீரியாவில், உணவு, மருந்து நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய முகமை, இந்தியாவை விட்டு வெளியேறும் முன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்து பொருட்களையும் சரி பார்த்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக கூட்டங்களுக்கு பிரச்சினை செய்யும் திமுகவினர்? – பிடிஆர் வேதனை!