Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆணுறை என்று இவர்களைச் சொல்லவைக்க இந்தியா இந்தப்பாடு பட்டது ஏன்?

Advertiesment
ஆணுறை என்று இவர்களைச் சொல்லவைக்க இந்தியா இந்தப்பாடு பட்டது ஏன்?
, செவ்வாய், 23 மே 2023 (11:45 IST)
‘ஆணுறை’ என்ற வார்த்தையை திரும்ப திரும்ப சொல்ல வைப்பதன் மூலம், அதனை பயன்படுத்துவதில் ஆண்களுக்கு உள்ள தயக்கம் அல்லது குற்றஉணர்வை உடைத்தெறிய முடியும். இந்த உத்தியை தான் விளம்பர எழுத்தாளரான ஆனந்த் சுஸ்பி 18 ஆண்டுகளுக்கு முன் கையாண்டு, ஆணுறை குறித்த விழிப்புணர்வை இந்தியாவில் ஏற்படுத்தினார்.
 
நாட்டின் மொத்த ஆணுறை விற்பனையில் சுமார் 50 சதவீதம் அளவுக்கு பங்களித்து வந்த வட இந்தியாவின் எட்டு மாநிலங்களில் இதன் விற்பனை திடீரென சரிந்தது.
 
குறிப்பிட்ட இந்த மாநிலங்களில் ஆணுறை விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், ஆனந்த சுஸ்பியின் குழு அங்கம் வகித்த லோவ் லிண்டாஸ் விளம்பர நிறுவனம், இந்திய அரசுடன் இணைந்து 2006 இல் ஆணுறை விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டது.
 
“ஆணுறை என்று தயக்கமின்றி சொல்லுங்கள்” (The Condom Bindass Bol) என்ற அந்த பிரசார முழக்கம் இந்தியா எங்கும் ஒலித்தது.
 
கூச்ச சுபாவம் உள்ள ஒரு காவலரிடம் அவரது சகாக்கள், “ஆணுறை என்று சுதந்திரமாக சொல்லுங்கள்” (Bol, bindass bol) என்று வற்புறுத்துவது போன்றும், நீதிமன்றத்துக்கு வெளியே மக்கள் புடைசூழ வரும் வழக்கறிஞர் ஒருவரிடம் அவரது சகாக்கள், ஆணுறை என்று சப்தமாகவும், தெளிவாகவும் சொல்லுங்கள் என்று வலியுறுத்துவது போலவும் நகைச்சுவையுடன் கூடிய காட்சிகள் அந்த விளம்பரத்தி்ல் இடம்பெற்றிருந்தன.
 
பெரிய அளவில் வைரலான இந்த விளம்பரம் ஐ.நா.வின் விருதையும் வென்றது. குடும்பக் கட்டுப்பாடு குறித்த நகைச்சுவையுடன்கூடிய இதுபோன்ற தொடர் பிரசாரங்கள், மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் பிரச்னைகளையும், பாதுகாப்பான உடலுறவையும் பொதுமக்கள் மத்தியில் வுலுவாக எடுத்துரைத்தன.
 
குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் 1950 களிலேயே இந்தியாவில் தொடங்கிவிட்டன. அத்துடன் உலகிலேயே முதன்முறையாக இதற்கென தனித் துறையும் ஏற்படுத்தப்பட்டது.
 
அதன் மூலம், பெருகிவரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதற்கு கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக எடுத்துரைக்கப்பட்டது.
 
விழிப்புணர்வு பிரசாரத்தில் யானைகள்
webdunia
குறைவான குழந்தைகளை பெற பொதுமக்களை அறிவுறுத்தும் “நாம் இருவர்; நமக்கு இருவர்” ( Hum Do Humare Do), “சிறு குடும்பம்; சிங்கார குடும்பம்” (Chota Parivar, Sukhi Parivaar) போன்ற ரத்தின சுருக்கமான வரிகள் தொலைக்காட்சி, வானொலி, தெருமுனை போஸ்டர்கள் என பல்வேறு ஊடகங்களின் வழியே விளம்பரப்படுத்தப்பட்டன. ஊடக வெளிச்சம்படாத தொலைதூர பகுதிகளில் யானைகளின் மூலமும் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
 
கருத்தடை மற்றும் பிறப்பு விகித கட்டுப்பாடு போன்ற முக்கியமான விஷயங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள், இவைகுறித்த புதிய சொற்களஞ்சியங்களை உருவாக்க வழிவகுத்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
ஆண்களின் கூச்ச சுபாவம்
பொது இடங்களில் மோசமான நகைச்சுவையை சொல்லி மகிழும் ஆண்கள், ஆணுறை என்று சொல்ல சொன்னால் மட்டும், அந்த கணத்தில் வெட்கப்படுகின்றனர் என்று கூறுகிறார் விளம்பர எழுத்தாளர் சுஸ்பி. பாதுகாப்பான உடலுறவு குறித்து இந்திய ஆண்கள் பேச தயங்குவதற்கு அவர்களின் கூச்ச சுபாவமே காரணம் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.
 
‘ஆணுறை என்று சொல்லுங்கள்’ என்ற பிரசாரத்துக்கு பின் உள்ள திட்டம் மிகவும் எளிமையானது. ஆண்களை தயக்கமின்றி ஆணுறையை கேட்டு வாங்க வைப்பதே இந்த பிரசார திட்டத்தின் ஒற்றை நோக்கம்.
 
அத்துடன் இது ஒன்றும் நுட்பமான வார்த்தையோ, கெட்ட வார்த்தையோ அல்ல. சப்தமாக இல்லாமல் சன்னமான குரலில் கேட்டுப் பெற வேண்டிய விஷயம். ஆணுறையை அனைவரும் பயன்படுத்தும் நிலை ஏற்பட வேண்டும்” என்கிறார் குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு பிரசாரங்களில் பணியாற்றியுள்ள பொது சுகாதார நிபுணரான சஷ்வதி பானர்ஜி.
 
40 ஆயிரம் விற்பனையாளர்கள்
இந்த நிலையை எட்ட, ஆணுறையின் சில்லறை விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், சுமார் 40 ஆயிரம் ஆணுறை விற்பனையாளர்கள் மற்றும் நிபுணர்கள் குழு கைகோர்த்தது. இந்த முயற்சிக்கு இறுதியில் ஓரளவு பலனும் கிடைத்தது என்கிறார் சுஸ்பி.
 
பெண்களை மையமாக கொண்ட பிரசாரம்
குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு பிரசாரங்களுக்கு அரசும், தனியார் நிறுவனங்களும் அதிக நேரம் மற்றும் பணத்தை செலவழித்தாலும், அவை அனைத்தும் வெற்றியடையவில்லை. சிலவற்றில் பின்னடைவுகளும் இருந்தன.
 
இவற்றில் பெரும்பாலான விழிப்புணர்வு பிரசார திட்டங்கள் கிட்டதட்ட முழுக்க முழுக்க பெண்களை மையமாக கொண்டே இருந்தன. இதன் காரணமாக அவை பயனற்றவையாக இருந்தன என்பது விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
 
“ஒரு காலத்தில் கருத்தடை சாதனங்களை தேர்வு செய்ய விரும்பிய பெண்களுக்கு அவற்றை வழங்குவதற்கு எந்த நிறுவனமும் இல்லாத நிலை இருந்தது” என்கிறார் பிபிசி மீடியா ஆக்ஷனின் நேஷனல் கிரியேட்டிவ் இயக்குநரும், நிர்வாக தயாரிப்பாளருமான ராதாராணி மித்ரா.
 
எனவே,கருத்தடை எனும் பெரும்சுமையை இறுதியில் பெண்கள்தான் சுமக்க வேண்டி இருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டிய ஆண்களில் பெரும்பாலோர், குடும்பக் கட்டுப்பாடு குறித்து பெரிதாக அறியாதவர்களாகவும், இதனை எதிர்ப்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS) 2019 -2021க்கு இடையே எடுக்கப்பட்டது. அதில் தேசிய அளவில் 38% பெண்கள் கருத்தடை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர் என்றும், வெறும் 0.3% ஆண்கள் மட்டுமே இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிய வந்தது.
 
இந்த விஷயத்தில் பாரம்பரிய ஆலோசனைகள் மற்றும் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கான பெரிய தேவைகளை பிரசார முழக்கங்களால் மாற்ற முடியாது. ஆனால் அவை சமூக விதிமுறைகளை மாற்றுவதற்கும், நேர்மறையான வேகத்தை உருவாக்கவும் உதவின என்கிறார் பொது சுகாதார நிபுணர் ஆனந்த சின்ஹா.
 
பிரசாரத்துக்கு பின்னடைவு
1975 இல், நாட்டில் அவசர நிலை நடைமுறையில் இருந்தபோது, பல லட்சக்கணக்காண பெண்கள், ஆண்கள், ஏன் குழந்தைகளை கூட அரசு கருத்தடை செய்துக் கொள்ள வற்புறுத்தியது. இதன் விளைவாக குடும்பக் கட்டுப்பாடு பிரசாரங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையால் இந்த பிரசாரங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டதுடன், கருத்தடை என்றாலே மக்கள் அச்சம் கொள்ளும் நிலையும் உண்டானது.
 
அதன் பின்னர், இந்த நிலையை மாற்றி, கருத்தடை குறித்த அச்சத்தை போக்கி, அதனை மக்களை ஏற்றுக்கொள்ள செய்தது பெரும் சவாலான பணியாக இருந்தது என்கிறார் சின்ஹா.
webdunia
அந்த நேரத்தில், ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களை இளம் தம்பதிகளிடம் விற்பது போன்ற தனியார் நிறுவனங்களின் உத்தி, இந்த பிரசாரங்களின் மீது பொதுமக்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்த வழிவகுத்தன.
 
எய்ட்ஸ் குறித்த பயம்
1980 களின் பிற்பகுதியில் எச்ஐவி/எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் மேலை நாடுகளில் பெரும் அச்சுறுத்தலாக இருந்தன. அந்த அச்சமே, இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளில் கருத்தடை சாதனங்களின் சந்தை வளர்ச்சி பெறுவதற்கு துவக்கமாக இருந்தது என்கிறார் மித்ரா.
 
அதன் பின்னர், பாலியல் உறவு குறித்த உரையாடல்களும், ஆணுறை பற்றிய சமூகப் பிரசாரங்களும் பொதுவாகின.
 
“ஆணுறையை முற்றிலும் (360 டிகிரி) இயல்பாக்குதல்” பிரசாரத்தின் ஒரு பகுதியாக, 2008 இல் வந்த “ஆணுறை ரிங்டோன்” மிகவும் மறக்க முடியாதது என்கின்றனர் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்தில் ஈடுபட்ட நிபுணர்கள்.
 
இந்தியாவில் எச்ஐவி தடுப்பு மற்றும் பாதுகாப்பான உடலுறவு குறித்த பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ரிங்டோன் பிரசாரம் இருந்தது.
 
பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிதியுதவியுடன், பிபிசி மீடியா ஆக்ஷன் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்தது. அதில், மொபைல்ஃபோனில் ரிங்டோனாக ஒலிக்க செய்தபடி, “ஆணுறை” என்ற வார்த்தை ஒரு ரீங்காரம் போல் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்பட்டிருந்தது.
 
அத்துடன், திருமண விழாவில் பங்கேற்றிருக்கும்போது ஓர் ஆணின் மொபைல்ஃபோன் ‘ஆணுறை ரிங்டோனுடன்’ திடீரென ஒலிக்கும். அதை கேட்டு அவர் நொந்துப்போவது போல் நகைச்சுவையுடனான வீடியோவும் அந்த பிரசாரத்தில் இடம்பெற்றிருந்தது.
 
வைரலான ரிங்டோன்
இந்த ரிங்டோன் வைரலாகவே, அதனை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக மட்டும் 4.8 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன என்கிறார் மித்ரா. அமெரிக்காவின் NPR வானொலியிலும் ஆணுறை ரிங்டோன் ஒலித்தது. ஜப்பான் முதல் இந்தோனீசியா வரை, தென் அமெரிக்கா முதல் ஐரோப்பா வரையிலும் இந்த ரிங்டோன் பிரபலமடைந்தது.
 
“உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பேசப்பட்ட இந்த மொபைல் ரிங்டோன் விழிப்புணர்வு பிரசாரம், பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தது. இவற்றை எல்லாம் விட, குடும்பக் கட்டுப்பாடு விஷயத்தில் இந்த ரிங்டோன் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தான் மிகவும் முக்கியம்” என்கிறார் திருமதி மித்ரா.
 
சிறு சிறு காகிதத் துண்டுகளை இணைத்து ஓர் உருவத்தை உண்டாக்குவதைப் போன்று, இதுபோன்ற விழிப்புணர்வு உரையாடல்கள் ஒரு விஷயத்தில் பொதுமக்களுக்கு உள்ள அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த உதவலாம் என்கிறார் திருமதி பானர்ஜி.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மீண்டும் தொடங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்..!