டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இரு சீன வீராங்கனைகள் தங்கள் ஆடையில் மாவோ சேதுங்கின் படத்தை பொருத்தியிருந்தது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. சீன ஒலிம்பிக் கமிட்டியிடம் இது தொடர்பாக விளக்கம் கோரியிருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பாவோ சான்ஜு, ஷோங் தியான்ஷி இணை திங்கள்கிழமை நடந்த சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது.
ஒலிம்பிக் விதிகளின்படி போட்டி நடக்கும் இடங்களில், பதக்க மேடையில் அரசியல் ரீதியிலான கருத்துகளை வெளிப்படுத்துவது, போராட்டம் நடத்துவது, முழக்கங்களை எழுப்புவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டிருக்கின்றன.
"எந்தவிதமான போராட்டம், அரசியல், மத, இன பரப்புரைகளுக்கு அனுமதியில்லை" என்று ஒலிம்பிக் சாசனத்தின் 50-ஆவது பிரிவு கூறுகிறது.
எனினும் கடந்த மாதம் இதில் சிறிய தளர்வு அளிக்கப்பட்டது. அதன் படி இனப் பாகுபாட்டைக் குறிக்கும் வகையில் ஒருகால் முட்டிபோட்டு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
போட்டிக்கு முன்னும் பின்னும் வீரர்கள் இதைச் செய்யலாம். ஆனால் வேறு எந்தக் குறியீட்டுக்கும், அறிக்கைக்கும் அனுமதி கிடையாது.
ஏற்கெனவே அமெரிக்காவின் குண்டு எறிதல் வீராங்கனை ரேவன் சாண்டர்ஸ் எக்ஸ் வடிவத்தில் கைகளை உயர்த்திக் காட்டியது தொடர்பாக ஒலிம்பிக் கமிட்டி விசாரித்து வருகிறது.
இப்போது சீன வீராங்கனைகள் மாவோவின் படத்தை சட்டையில் பொருத்தியது சர்ச்சையாகி இருக்கிறது.
1949 முதல் 1976 வரை சீனாவை ஆட்சி செய்த மாவோ, அந்த நாட்டின் முக்கியமான அடையாளம். 1960-களில் அவரது படம் பொறிக்கப்பட்ட பேட்ஜ்கள் கோடிக்கணக்கில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன. தற்போதைய அதிபர் ஸீ ஜின்பிங்கும் மாவோவின் பெயரை முன்னிலைப்படுத்தி வருகிறார்.