எச்சரிக்கை: இந்த கட்டுரையிலுள்ள தகவல்கள் சிலர் மனதை வருத்தமடைய வைக்கலாம்.
செழிப்பாக வளர்ந்துள்ள ஒரு புல்வெளி. தூரத்திலிருந்து பார்க்கும்போது, நடைபயிற்சி செய்ய ஏற்ற இடம் போல இது காட்சியளிக்கிறது. ஆனால், இந்த புல்வெளியின் சில பகுதிகளில் மட்டும், புற்கள் மிக செழிப்பாக வளர்ந்துள்ளதை காண முடிந்தது. இந்த குறிப்பிட்ட பகுதிகளெல்லாம், பல வாரங்களாக சிதைந்த மனித உடல்களை உரமாகக் கொண்டு செழிப்பாக வளர்ந்துள்ளன.
அந்தப் பகுதிக்குள் உள்ளிறங்கி நடக்கும்போது, மரணத்தின் வாசம் மிகவும் அதிகமாக தெரிவதால், நம்மை கண்ணீர் சிந்த வைக்கிறது.
தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்
ஒரு ஹெக்டருக்கும் அதிகமான இந்த நிலப்பரப்பில் 15 மனித உடல்கள் கிடத்தப்பட்டுள்ளன. ஆடைகளில்லாமல், சில இரும்பு கூண்டுக்குள்ளும், சில பிளாஸ்டிக் பைகளுக்குள்ளும் வைக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள பெரும்பாலான உடல்கள் அந்நிலப்பரப்பின் மீது படும்படியே கிடத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு உடலைச் சுற்றியும், காய்ந்த புற்கள் உள்ளன. இன்னும் சில நாட்களில், இந்த உடலின்மூலம் கிடைக்கும் கூடுதல் சத்தால், இந்த புற்கள் செழிப்பாக வேகமாக வளரவிருக்கின்றன.
அமெரிக்காவின் டாம்பா பகுதிக்கு புறநகரில், தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் ஒரு திறந்தவெளி தடயவியல் ஆய்வுக்கூடம் இது.
சிலர் இவற்றை 'பிரேதங்களின் வயல்வெளி' என குறிப்பிட்டாலும், விஞ்ஞானிகள் இதை 'தடயவியல் கல்லறை' என்றே அழைக்கின்றனர். காரணம், ஓர் உடலில் இருந்து உயிர் பிரிந்தபிறகு, அதன் உறுப்புகளுக்கு என்னவாகிறது என்பதை அவர்கள் இங்கு கற்கின்றனர்.
படத்தின் காப்புரிமைIFAAS/USF
பொதுவாக மரணம் குறித்து கூறக்கூடிய சட்டங்களுக்கெல்லாம் எதிராக இங்கு நடக்கும் விஷயங்கள் உள்ளன என்பதைத் தவிர இங்கு நடக்கும் அனைத்தும் அறிவியலே.
முதலில் இந்த ஆய்வுக்கூடம் ஹில்ஸ்போரா பகுதியில் அமைக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டு, பிறகு உள்ளூர் மக்களின் எதிர்ப்பு எழுந்ததால் இப்பகுதியில் 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
ஹில்ஸ்போரா பகுதி மக்கள், இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டால், இதன் அழுகும் வாசம் பிற மிருகங்களை கவர்வதோடு, துர்நாற்றத்தையும் உருவாக்கும் என்பதை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சில விஞ்ஞானிகளும் இதுகுறித்து தங்களின் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இதற்கான தேவை உள்ளதா என்ற கேள்வியை அவர்கள் முன்வைத்தனர்.
சிதையும் பிரேதங்கள்
இது மட்டுமின்றி, அமெரிக்காவில் இதுபோல மேலும் ஆறு இடங்கள் உள்ளன. அதேபோல, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இத்தகைய ஆய்வுக் கூடங்களை உருவாக்க கடந்த ஆண்டே திட்டம் போட்டன.
மரணத்துக்கு முன் மனதில் தோன்றும் கடைசி சிந்தனை என்ன?
இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனைத்து உடல்களும், அவற்றுக்கு உரியவர்கள் உயிரிழக்கும் முன்பு நன்கொடையாக அளித்தவை அல்லது அவர்களின் உறவினர்களால் நன்கொடையாக அளிக்கப்பட்டவையாகும்.
இந்த ஆய்வுக் கூடத்தின் முக்கிய நோக்கம் மனித உடல் எவ்வாறு அழுகுகிறது என்பதையும், அதன் சுற்றுச்சூழல் இந்த செயல்பாட்டில் எத்தகைய தாக்கத்தை கொண்டுள்ளது என்பது குறித்து கற்பதே ஆகும்.
இதை பயில்வதன் மூலமாக, சில முக்கிய குற்றவியல் வழக்குகளுக்கு விடை கண்டு பிடிக்கவும், தடயங்களை கண்டறியும் முறைகளில் மேம்பாடுகளையும் கொண்டுவர முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
"ஒருவர் இறக்கும்போது, இயற்கையான அழுகல், குறிப்பிட்ட சில பூச்சிகளின் வருகை, அந்த உடலை சுற்றியுள்ள சூழலில் ஏற்படும் மாற்றங்கள் என பல்வேறு விஷயங்கள் அதைச்சுற்றி ஒரே நேரத்தில் நடக்கின்றன," என்று கூறுகிறார் மருத்துவர் எரின் கிம்மர்லே.
தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் தடய மானுடவியல் பிரிவின் இயக்குநராக இருந்து வரும் இவர், அவரின் குழுவும், சுற்றுச்சூழலுக்கு நடுவில் ஒரு உடல் எவ்வாறு அழுகுகிறது என்பதை கற்பதும் முக்கியம் என்று நம்புகின்றனர்.
ஓர் உடல் சிதைவுறும்போது பல்வேறு நிலைகளை கடக்கும் என்று மருத்துவர் எரின் கூறுகிறார்.
1.இதயத்துடிப்பு நின்றவுடனே, உடலில் ரத்த ஓட்டம் நிற்பதோடு, ஆங்காங்கே அவை தேங்க ஆரம்பிக்கும்.
2.உடலின் மிருதுவான திசுக்களை பாக்டேரியா உட்கொள்ளத் தொடங்கியவுடன், கவனிக்கத்தக்க வகையில் உடலின் நிறம் மாறும். உடலில் வாயுக்கள் உருவாகத் தொடங்கி, உடல் பெருக்கத் தொடங்கும்.
3.மூன்றாவது கட்டத்தில்தான் மிகப்பெரிய எடைக்குறைவு நடைபெறும். உடலில் இருந்த மிருதுவான திசுக்கள் புழுக்களால் உட்கொள்ளப்பட்டோ, கரைந்தோ அது கிடத்தப்பட்டுள்ள சுற்றுச்சூழலோடு கலந்துவிடும்.
4.இந்த கட்டத்தில், மிருதுவான திசுக்களெல்லாம் முடிந்துபோனதால் புழுக்கள், பூச்சிகள் போன்றவை உடலை விட்டு சென்றுவிடும். இறந்தவரின் உடல் மண் மீது இருந்தால், அங்குள்ள பசுமையான விஷயங்கள் அழிவதோடு, அந்த மண்ணின் அமிலத்தன்மையில் மாற்றம் ஏற்படும்.
5.இந்த நிலையில் உடலில் மிஞ்சி இருப்பது எலும்பு மட்டுமே. இதன் முதல் அடையாளம் என்பது முகம், கை மற்றும் பாதத்தில் தெரியவரும். காற்றில் ஈரப்பதம் இருந்தால், அதனாலும் மாற்றம் தெரியும். மேலும், இந்த உடலின் மூலமாக கிடைத்த சத்துகளால், அப்பகுதியில் செடிகள் நன்றாக விளைந்திருக்கும்.
இருப்பினும், இவை மட்டுமே முடிவு செய்யப்பட்ட நிலைகள் இல்லை. இந்த செயல்பாடு என்பது சுற்றுச்சூழலால் அதிகமாக தாக்கம் செலுத்தப்படும் ஒன்றாகும். இதுவே எரின் மற்றும் அவரின் குழு, இந்த ஆய்வை நடத்த காரணமாக அமைந்துள்ளது.
பல்வேறு சூழல்களில் பிரேதங்கள் எத்தகைய சிதைவு அடைகின்றன என்பதை அறிவதற்காக, சில பிரேதங்கள் திறந்தவெளியிலும், சில இரும்பு கூண்டுக்குள்ளும் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து உடல்களும் எவ்வாறு சிதைவு அடைகின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டறிகின்றனர்.
ஆனால், பாதுகாப்பற்ற நிலையில், வைக்கப்பட்டுள்ள உடல்கள் சில பினந்திண்ணி மிருகங்களை ஈர்க்கத்தான் செய்கின்றன.
சில நேரங்களில் பெரிய குழுவாக வரும் இவ்வகை மிருகங்கள், உடல்களை கடித்து திண்கின்றன.
"ஒவ்வொரு உடலிலிருந்தும், முடிந்தவரை தரவுகளைப்பெற நாங்கள் முயல்கிறோம்," என்கிறார் மருத்துவர் எரின். இந்த செயல்முறையின்போது, ஆய்வாளர்கள் தினமும் இந்த பகுதிக்கு வந்து, உடல்கள் எவ்வாறு சிதைவடைகின்றன என்பதை புகைப்படம், காணொளி மற்றும் குறிப்புகள் மூலம் பதிவு செய்யப்படுகிறது.
உலகை அச்சுறுத்தும் 10 கொடிய நோய்கள் - அறிகுறிகள் என்ன?
உடல்கள் தண்ணீருக்கு அருகில், தண்ணீருக்கு வெளியே அல்லது தண்ணீருக்குள் இருக்கின்றனவா என்பது போன்ற விஷயங்களையும் இவர்கள் குறித்துக்கொள்கின்றனர்.
நில அமைப்பியல் வல்லுநர்கள் மற்றும் புவியீர்ப்பு வல்லுநர்களும் இவர்களோடு இணைந்து ஆய்வு நடத்துகின்றனர். இந்த உடல்களிலிருந்து வெளிவருபவை எவ்வாறு சுற்றுச்சூழலின்மீது தாக்கம் செய்கின்றன என்பதை அவர்கள் ஆய்வு செய்கின்றனர்.
ஓர் உடல், எலும்புக்கூடு ஆகியவுடன், `உலர்ந்த ஆய்வகத்திற்கு` எடுத்துச்செல்லப்படுகின்றன. அங்கு அவை சுத்தம் செய்ப்பட்டு, ஆய்வாளர்களும் , மாணவர்களும் பயன்படுத்த தயார் செய்யப்படுகின்றன.
விடைகிடைக்காத குற்ற வழக்குகள்:
உடல் சிதைவுருவது குறித்து படிக்கும் `டாஃபோனோமி` ஆய்வாளர்கள் மூலம் சேமிக்கப்படும் இத்தகைய தரவுகள், தடயவியல் மற்றும் சட்டப்பூர்வமான மருத்துவ விசாரணைகளின்போது பயனுள்ளதாக அமைகின்றன.
உடல் சிதைவுறும் முறை குறித்த அறிவின் மூலம், ஒரு உடல் எவ்வளவு காலமாக சிதைவுறு நிலையில் உள்ளது, ஒரு இடத்திலிருந்து நகர்த்தப்பட்டதா? எப்போதேனும் தகனம் செய்யப்பட்டதா என்ற கேள்விகளுக்கான சில விளக்கங்களை பெற முடியும். மேலும், குறிப்பிட்ட மனிதர் குறித்த கூடுதல் தகவல்கள், ஒருவரின் மரபியல் குறித்த தரவுகள், எலும்பு குறித்த ஆய்வுகள் ஆகியவை கிடைக்கும்போது, முக்கிய குற்றவியல் வழக்குகள் மற்றும் தீர்வுகாணப்படாத கொலைக்குற்றங்கள் குறித்த ஆய்வுக்கு பயன்படும்.
பிரேதங்களுடன் பணியாற்றுவதிலுள்ள சிக்கல்கள்
பிரேதங்களுக்கு நடுவில் பணியாற்றுவதை சிலர் அதிர்ச்சிகரமான விஷயமாக பார்க்கிறார்கள். ஆனால், இது தன்னை பாதிக்கவில்லை என்கிறார் மருத்துவர் எரின். தான் ஆய்வு நடத்தும் உடலுக்கு உரிமையானவர் குறித்து தெரிந்துகொள்வதுதான் மிகவும் கடினமான விஷயம் என்று அவர் கூறுகிறார்.
வட கொரியா கொலை களம்: பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதா?
"சில கொலை வழக்கு விசாரணையில் பணியாற்றும்போது, நாம் கடந்துவரும் வருத்தமான கதைகள் நமக்கு வருத்தமளிக்கும். மனிதன் சக மனிதனுக்கு எத்தகைய மோசமான செயல்களையெல்லாம் செய்ய முடியும் என்பதை நினைக்கும்போதுதான் வருத்தமாக உள்ளது," என்கிறார் அவர்.
20-30 வருடங்களுக்கு முன்பு தங்களின் குழந்தைகளை இழந்த சில பெற்றோரிடமும், எரின் மற்றும் அவரின் குழுவினர் பேசும் சூழல் பல நேரங்களில் ஏற்படுகிறது. 1980ஆம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்காவில் தீர்க்கப்படாமல் உள்ள 2,50,000 கொலை வழக்குகள் ஏதேனிலும் சில மேம்பாடு ஏற்பட தனது ஆய்வு உதவும் வரையில் இந்த ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை என்றே எரின் கருதுகிறார்.
2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது முதல், 50 பேரின் பிரேதங்களை இக்குழு பெற்றுள்ளது. இவை அனைத்தும் அந்தந்த நபரால் முன்வந்து அளிக்கப்பட்டவை. மேலும் 180 பேர் தங்களின் மறைவுக்குப் பிறகு, உடலை எடுத்துக்கொள்ளுமாறு பதிவு செய்துள்ளனர்.
இதில் பெரும்பான்மையானோர், வயது முதிர்ந்தவர்களாகவே உள்ளனர். நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களின் உடல்களை இவர்கள் பெறுவதில்லை.
அறிவியலுக்கு ஏற்ற தரவுகளை அளித்தாலும், இந்த ஆய்விற்கென சில வரைமுறைகளும் இருக்கின்றன.
பிரிட்டனில் உள்ள மத்திய லான்சென்ஷேர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தடயவியல் மானுடவியல் துறை நிபுணரான பாட்ரிக் ரட்லோஃப், "திறந்தவெளியில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதில் சில பிரச்னைகள் உள்ளன," என்று கூறுகிறார்.
அவர்கள் நடத்தும் ஆய்வை சற்று ஆதரித்தே பேசினாலும், "இந்த ஆய்வில் கூர்ந்து நோக்குவதால் மட்டும் கிடைக்கும் தரவுகளை சரியாக பிரித்துப்பார்க்க முடியாது" என்று அவர் தெரிவிக்கிறார்.
இந்த ஆய்வுகள் மூலம் பெறப்படும் உதிரியான தரவுகளை, வகைப்படுத்தி எவ்வாறு அறிவியல் சமூகத்திற்கு நிலயான சில தகவல்களை அளிக்க முடியும் என்பதில்தான் பெரிய சிக்கலே உள்ளது என்று அவர் தெரிவிக்கிறார்.
பிரிட்டனில் உள்ள லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை நிபுணரான சூ பிளாக், இத்தகைய ஆய்வுக் கூடங்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைப்பதோடு இந்த ஆய்வின் மதிப்பு, இத்தகைய சிறிய எண்ணிக்கையிலான மாதிரிகளிலிருந்து எடுக்கப்படும் தரவுகளின் நம்பகத்தன்மை ஆகியவை குறித்த கேள்விகளை எழுப்புகிறார்.
2018ஆம் ஆண்டு அவர் எழுதிய புத்தகத்தில், "இந்த ஆய்வு முறை மிகவும் கொடூரமானது. ஒரு சுற்றுலா பயணம்போல, அந்த இடத்தை பார்வையிட அவர்கள் என்னை அழைத்தபோது, எனக்கு அதிக அளவில் அசௌகரியம் ஏற்பட்டது," என்று எழுதியுள்ளார்.
"இத்தகைய ஆய்வு மற்றும் அதன் பயன்பாடு குறித்து புரிந்தவர்கள், இந்த திறந்தவெளி பிரேத ஆய்வுக் கூடங்களின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வார்கள்," என்பது மருத்துவர் எரினின் வாதமாக உள்ளது.