Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரிய நாடகங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுவது ஏன்?

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (23:43 IST)
தென் கொரியாவை சேர்ந்த பெண் ஒருவர் தவறுதலாக வட கொரியாவின் எல்லைக்குள் நுழைந்துவிடுகிறார். அவரை வட கொரியாவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் மீட்டு பத்திரமாக அவரது தாய்நாட்டுக்கே அனுப்பி வைக்கிறார்.
 
இரு நாட்டிலும் இருவரும் சேர்ந்து வாழ்வது கிட்டதட்ட சாத்தியமற்றது.
 
ஆனால் இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. அந்த காதலுக்கு இருநாட்டையும் பிரிக்கும் எல்லைக் கோடும் பல ஆண்டுகளாக இருந்து வரும் பகைமையும் பெரும் தடங்கலாக வந்து நிற்கிறது.
 
2019ஆம் ஆண்டு வெளியான ‘க்ராஷ் லேண்டிங் ஆன் யு’ என்ற கொரிய நாடகத்தின் கதைதான் இது.
 
சில சமயங்களில் சில தமிழ்ப் படங்களை காட்டிலும் இந்த கொரிய நாடகங்கள் இளம் தலைமுறையினரை அதிகம் சென்றடைகிறது.
 
சில கொரிய ட்ராமாக்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டதை அதற்கு உதாரணமாக சொல்லலாம். மென்னையான காதல், வண்ணமயமான காட்சிகள், சுவாரஸ்யமான கதைக்களம், உணர்ச்சிகரமான கதாபாத்திரம் என இந்த கொரிய படைப்புகள், இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.
 
இந்தியாவில் முதல்முறையாக இந்த கொரியன் ட்ராமாக்கள் மணிப்பூரில் கால் பதித்தன. 2000ஆம் ஆண்டில் பிரிவினைவாத போராளிகள் பாலிவுட் சினிமாவை அங்கு தடை செய்த பிறகு கொரிய ட்ராமாக்கள் மணிப்பூரின் வழியாக இந்தியாவில் நுழைந்தன. அதன் பிறகு இந்தியா முழுவதும் அது பெரும் புகழ்பெற்றது.
 
அதேபோல கொரிய நாடகங்களுக்கான வரவேற்பு, பெருந்தொற்று காலத்தில் மேலும் அதிகரித்தது.
 
2020ஆம் ஆண்டில் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது முந்தைய வருடத்தை விட, கொரிய நாடகங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை 370 சதவீதம் என்ற அளவில் அதிகரித்தது.
 
அதேபோல இந்த கொரிய நாடகங்கள் பல பெண்களை மையமாக வைத்து அவர்களுக்கான கதையாக எடுக்கப்படுவது பெண்கள் மத்தியில் இந்த நாடகங்கள் அதிக வரவேற்பை பெற்ற காரணங்களில் ஒன்று என்கிறார் ஃபிஃப்டி டூ என்ற வார இதழின் ஆசிரியரும் கொரிய நாடகங்களின் ரசிகையுமான சுப்ரியா நாயர்.
 
பாலிவுட் சினிமா என்று சொல்லக்கூடிய ஹிந்தி சினிமாக்களும் இந்த கொரிய நாடகங்களுடன் அதிகம் ஒத்துப்போவதாக கூறுகிறார் சுப்ரியா.
 
“பாலிவுட் மற்றும் கொரிய நாடகங்கள் இரண்டிலும் அதிகப்படியான உணர்ச்சிமிக்க காட்சிகள், காதல், அதிரடி என அனைத்தும் கலந்திருக்கும். பொதுவாக கொரிய நாடகங்களில் மகிழ்ச்சியான முடிவுகள் இருந்தாலும், அதற்குள் 'கதை' பல மேடு பள்ளங்களை சந்தித்து பார்வையாளர்களை தன் வசப்படுத்தி விடுகிறது” என்கிறார் சுப்ரியா.
 
தமிழில் நாடகங்களை விட, பல சமயங்களில் கொரிய படங்களை தழுவி திரைப்படங்கள் எடுக்கப்பட்டு அவை வெற்றியும் அடைந்துள்ளன. ஆனால் அதில் சில படங்கள் கொரிய படங்களின் தழுவல் என்று சொல்லப்படுவதே இல்லை என்பது ஒரு தனிக்கதை.
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழில் வெளியான பிரின்ஸ் படத்தில் கல்லூரியில் படிக்கும் தனது மகள் அதீதமாக கொரிய நாடகங்களை பார்க்கிறார் என்று தந்தை ஒருவர் புகார் சொல்வார்.
 
நிஜத்திலும் பல கல்லூரி பெண்கள் கொரிய நாடகங்களை விரும்பி பார்க்கின்றனர். ஒரு கட்டத்தில் அது தொடர்பான பொருட்களையும் விரும்பி வாங்குகின்றனர்.
 
இதற்கு சாட்சியாகத்தான் இயர் ஃபோன், விதவிதமான பைகள், மேக் அப் பொருட்கள் என கொரிய நாடகங்களில் வருவதை போன்றே இருக்கும் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அங்காங்கே முளைக்க தொடங்கியுள்ளன.
 
'ஹோம் டவுன் சா சா சா' என்கிற கொரிய நாடகம் போன்ற சில நாடகங்கள் தமிழ், மலையாளம் மற்றும் தெலுகு ரசிகர்களுக்கு அதிகம் பிடித்திருக்கலாம்.
 
“இதில் நகரத்தை சேர்ந்த ஒரு பெண் அழகான கிராமம் ஒன்றிற்கு செல்கிறார். அங்கு உள்ளூர் மக்களால் கவரப்பட்டு, அதிகப்படியான கவர்ச்சியற்ற ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்,” என்கிறார் சுப்ரியா.
 
"சில சமயங்களில் பாலிவுட், கோலிவுட் படங்களில் வருவதை போன்று ஒரு பெண்ணை துரத்தித் துரத்தி காதல் செய்வது, காதலில் எல்லாம் இயல்பு என்பது போல சித்தரிப்பது போன்ற தவறான கதை களம், கொரிய நாடகங்களிலும் இடம் பெறுகின்றன," என்கிறார் அவர்.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments