தாய்லாந்து தடுப்பு மையத்தில் உள்ள 13 தமிழர்கள் எப்போது தாயகம் திரும்புவர்? கவலையில் குடும்பங்கள்
, செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (22:29 IST)
துபாயில் இருந்து மியான்மர் நாட்டுக்கு சட்டவிரோத வேலைக்காக கடத்தப்பட்டு மீண்டும் தாய்லாந்து திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உள்பட 16 இந்தியர்களை, அங்கிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து தாமதம் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்
. அவர்களை மீட்கும் நடவடிக்கை தற்போது எந்த அளவில் உள்ளது?
மியான்மரில் சட்டவிரோத வேலைக்காக பணியமர்த்தப்பட்ட 13 தமிழர்கள் உள்ளிட்ட 16 இந்தியர்கள் அந்த நாட்டில் இருந்து தப்பித்து, தாய்லாந்து எல்லைக்குள் நுழைந்தபோது அதன் ராணுவத்தால் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு உள்ளூர் காவல்துறை மூலம் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து பிடிபட்ட இளைஞர்களிடம் துபாயில் இருந்து தாய்லாந்துக்கு வந்ததற்கான பயணச்சீட்டு மற்றும் விசா இருந்ததால், அவர்களை 'தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக மியான்மர் எல்லைக்கு சென்று திரும்பியவர்கள்' என அடையாளப்படுத்தி வழக்கு தொடர்ந்தது தாய்லாந்து காவல்துறை.
இதுபோன்ற வழக்கில் வெளிநாட்டினர் சிக்கினால், அவர்களிடம் உரிய அபராதத்தை வசூலிக்கும் தாய்லாந்து அரசு அதன் பிறகு அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கும். இந்த அபராதத் தொகையை 'பிடிபட்ட நபர்கள்' அவர்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் செலுத்தலாம் அல்லது அவர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்காட உரிமை பெற்ற வழக்கறிஞர்கள் மூலமாகவும் செலுத்தலாம். பெரும்பாலும் இந்த தொகையை இளைஞர்களை வேலைக்கு பணியமர்த்தும் முகவர்களே செலுத்தி விட்டு அவர்களை வெளியே கொண்டு வர முயற்சி எடுப்பர்.
இந்த நிலையில், சமீபத்தில் பிடிபட்ட 16 இந்தியர்களிடமும் அபராதத் தொகையை செலுத்த ரொக்கம் இல்லாததால் அதற்கு ஏற்பாடு செய்யும்வரை அவர்களை தடுப்பு மையத்தில் வைக்கும்படி தாய்லாந்து குடிவரவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அபராதத் தொகையை செலுத்த போதிய பணம் கைவசம் இல்லாததால் இந்திய இளைஞர்கள் குடிவரவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்தத் துறையினர் அந்த இளைஞர்களை தனித்தனியாக விசாரித்தனர். அதைத்தொடர்ந்து முதலில் இந்திய இளைஞர்களை சிறையில் வைத்தும் பிறகு சட்டவிரோத குடியேறிகள் தடுத்து வைக்கப்படும் மையத்துக்கும் தாய்லாந்து அதிகாரிகள் மாற்றினர்.