Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகின் மிக ரகசியமான அமெரிக்க உளவுத் துறை அருங்காட்சியகத்தில் என்ன உள்ளது?

Museum of US Intelligence
, திங்கள், 26 செப்டம்பர் 2022 (11:21 IST)
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் அருங்காட்சியகம், உலகின் அசாதாரணமான மற்றும் பிரத்யேகமான அருங்காட்சியகங்களில் ஒன்று. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களால் நிரம்பியுள்ள இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.


சதாம் உசேனின் லெதர் ஜாக்கெட்டையும், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது அவரிடம் இருந்த துப்பாக்கியையும் இங்கு மட்டும்தான் பார்க்க முடியும்.

வர்ஜீனியாவின் லாங்லியில் உள்ள அமெரிக்க உளவுத்துறை அமைப்பின் தலைமையகத்திற்குள் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், அமெரிக்க உளவுத்துறையின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிபிசி உட்பட சிறிய செய்தியாளர்கள் குழுவினர் பார்வையிட பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டது,

இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த 600 பொருட்களில் ரகசிய தகவல்களைக் கடத்த பயன்படுத்தப்பட்ட எலி பொம்மைகள், கேமராவுடன் கூடிய சிகரெட் பாக்கெட் , உளவு கேமராவுடன் கூடிய புறா, வெடிக்கும் மது பாட்டில்கள் என பனிப்போரில் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் இருந்தன.

சி.ஐ.ஏ.வின் சமீபத்திய பிரபலமான செயல்பாடுகள் தொடர்பான பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேற்கண்ட படத்தில் காட்டப்பட்டிருப்பது, பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் இருந்த வீட்டின் வளாக மாதிரி. இந்த மாதிரியைக் காண்பித்துத்தான், அப்போதைய அதிபர் ஒபாமாவிடம் ஒப்புதல் பெற்று பின்லேடன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

முப்பரிமாணத்தில் விஷயங்களைப் பார்ப்பது கொள்கை வகுப்பாளர்களுக்கும், தங்கள் வீரர்களுக்கும் பணியைத் திட்டமிட உதவுவதாக அருங்காட்சியகத்தின் இயக்குநர் ராபர்ட் இசட் பையர் கூறுகிறார்.

கடந்த ஜூலை 30ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அல்-கய்தாவின் புதிய தலைவரான அய்மன் அல்-ஜவாஹிரி சி.ஐ.ஏ. தாக்குதலில் கொல்லப்பட்டார்.

கீழே உள்ள படமானது, கடந்த ஜூலை 1ஆம் தேதி அதிபர் ஜோ பைடனிடம் இந்தத் தாக்குதல் பற்றி விளக்க பயன்படுத்தப்பட்ட மாதிரியாகும். அய்மன் அல்-ஜவாஹிரியின் நகர்வுகளை அமெரிக்க உளவுத்துறை பல மாதங்கள் ஆய்வு செய்த பிறகு, தனது வீட்டின் பால்கனியில் நின்றுகொண்டிருந்த அவர் கொல்லப்பட்டார்.

பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் தாங்கள் தாக்க இலக்கு வைக்கும் நபரின் வாழ்க்கையை எப்படி கவனிக்கிறார்கள் என்பதை இந்த மாதிரிகள் காட்டுவதாக ராபர்ட் இசட் பையர் கூறுகிறார்.

அருங்காட்சியகத்தின் முதல் பாதியில் 1947இல் சி.ஐ.ஏ. தொடங்கப்பட்டதிலிருந்து, 2001 செப்டம்பர் தாக்குதல்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் கவனம் செலுத்துவதற்கான தெளிவான மையமாக மாறியதுவரை காலவரிசைப்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நன்கொடையாக வழங்கிய பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சி.ஐ.ஏ.வின் வெற்றியை குறிக்கும் விஷயங்கள் மட்டும் காட்சிப்படுத்தப்படவில்லை. கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவை அகற்றுவதற்கான சி.ஐ.ஏ. வேலைத்திட்டம் பேரழிவு தரும் வகையில் படுதோல்வியில் முடிந்தது மற்றும் இராக்கில் பேரழிவு ஆயுதங்களைக் கண்டுபிடிக்கத் தவறியது பற்றிய குறிப்புகளும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

"இந்த அருங்காட்சியகம் வரலாற்று அருங்காட்சியகம் மட்டுமல்ல. இது ஒரு செயல்பாட்டு அருங்காட்சியகம். நாங்கள் சி.ஐ.ஏ. அதிகாரிகளை அழைத்துவந்து எங்கள் வரலாற்றின் நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகளை அவர்களுக்குக் காட்டி, வரலாற்றை அவர்கள் புரிந்துகொள்வதை உறுதிசெய்கிறோம். இதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் சிறப்பாக வேலை செய்ய முடியும். எதிர்காலத்தில் சிறந்து விளங்க வெற்றி மற்றும் தோல்வியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்கிறார் ராபர்ட் இசட் பையர்.

எனினும், இரானில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க எம்.16 (பிரிட்டனின் அயல்நாடுகளுக்கான உளவு அமைப்பு) உடனான கூட்டு நடவடிக்கை மற்றும் 2001 சம்பவத்திற்குப் பிறகு சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதியை சித்ரவதை செய்தது போன்ற சி.ஐ.ஏ.வின் சர்சைக்குரிய பக்கங்கள் குறைவாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

'எங்களால் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது'

அருங்காட்சியகத்தின் இரண்டாம் பகுதி சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களுடன் இருந்தன.

'எங்களால் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது' என்ற சொற்றொடர் உளவுத்துறை நிறுவனங்களைப் பற்றி அறிந்த அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. அந்தச் சொற்றொடர் எப்படி உருவானது என்பது அருங்காட்சியகத்தில் விவரிக்கப்பட்ட இதுவரை கண்டிராத பொருட்களைப் பற்றிய கதையில் தெரிந்தது.

1960களின் பிற்பகுதியில், சோவியத் யூனியனின் K-129 நீர்மூழ்கிக் கப்பல் கடலின் அடிப்பகுதியில் தொலைந்து போனது. அதை அமெரிக்கா கண்டுபிடித்த பிறகு, கோடீஸ்வரரான ஹோவர்ட் ஹியூஸுடன் இணைந்து அதன் சிதைவை மீட்டெடுக்க சி.ஐ.ஏ. முயற்சித்தது. குளோமர் எக்ஸ்ப்ளோரர் என்ற கப்பலைப் பயன்படுத்தி ஹியூஸ், கடலின் அடிப்பகுதியைத் தோண்டவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த அருங்காட்சியகத்தில் சோவியத் நீர்மூழ்கிக் கப்பலின் மாதிரிகள் உள்ளன. குளோமர் கப்பலுக்குச் சென்றபோது மாறுவேடமிடுவதற்காக சி.ஐ.ஏ-வின் துணை இயக்குநர் அணிந்திருந்த செயற்கையான முடிகளும்கூட காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலே தூக்க முயற்சித்தபோது நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் உடைந்ததால் இந்த முயற்சியானது ஓரளவுதான் வெற்றிபெற்றது. எனினும், சில பாகங்கள் மீட்கப்பட்டன.

"நீர்மூழ்கிக் கப்பலில் அவர்கள் கண்டுபிடித்தவற்றில் பெரும்பாலானவை இன்றுவரை வகைப்படுத்தப்பட்டுள்ளன" என்கிறார் ராபர்ட் இசட் பையர்.

நீர்மூழ்கிக் கப்பலை மீட்பதற்கு முன்பாக 'ப்ராஜெக்ட் அசோரியன்' குறித்து செய்தி வெளியானபோது, என்ன நடந்தது என்பதை 'உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது' என்று கூறுமாறு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. 'குளோமர் பதில்' என அழைக்கப்படும் இந்தப் பதில் மற்றும் இன்றும் பழக்கத்தில் உள்ளது.

ஆர்கோ என்ற போலி திரைப்படத்திற்கு அட்டைப்படத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது 1979 புரட்சிக்குப் பிறகு இரானில் இருந்த அதிகாரிகளை மீட்க அனுமதிக்கும் கதை.

இது பின்னர் ஹாலிவுட் திரைப்படமாக எடுக்கப்பட்டது. மீட்புக் குழுவினர் உருவாக்கவுள்ளதாகக் கூறப்பட்ட போலிப் படத்திற்கான போஸ்டரும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது வேண்டுமென்றே புரிந்துகொள்வதற்கு கடினமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய அருங்காட்சியகத்தின் மேற்கூரையும் பல்வேறு வகையான குறியீடுகளால் மறைக்கப்பட்ட செய்திகளைக் கொண்டுள்ளது.

கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சில பொருட்களை ஆன்லைனில் பார்க்க முடியும் எனத் தெரிவித்த சி.ஐ.ஏ. அதிகாரிகள், அருங்காட்சியகம் குறித்து நிறைய விஷயங்களை மக்கள் தெரிந்துகொண்டதாக இந்தத் தருணம் இருக்கும் என்றும் கூறினர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிக்கிய ஓபிஎஸ் ஆள்! காணாமல் போன ஆவணங்கள் என்னவானது?