Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்கள் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக பெறுவதில் என்ன சிக்கல்?

Advertiesment
BBC Tamil
, வெள்ளி, 28 மே 2021 (15:02 IST)
இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருகிறது. சர்வதேச அளவிலான ஒப்பந்தத்தை நம்பி மாநிலங்கள் இருந்தாலும், அந்த நம்பிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.

18 வயதிற்கு மேலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுடன், மாநில அரசுகள் தடுப்பூசிகளை தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மாநிலங்கள், உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு உற்பத்தியாளர்களையும் அணுக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் இத்தகைய ஒப்பந்தங்கள் குறித்து பேசியதோடு, அவற்றை உருவாக்கவும் செய்தன என்றாலும், எந்த மாநிலத்தாலும் இதுவரை அதை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியவில்லை.

பல சர்வதேச ஏலங்களுக்கு, மாநில அரசுகளுக்கு பதிலே கிடைக்கவில்லை. தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துகளை மாநில அரசிடம் விற்பனை செய்ய முடியாது என்றும், மத்திய அரசுடன் மட்டுமே இது குறித்துப் பேச முடியும் என்றும் நேரடியாக கூறிவிட்டன.

அதனால், தற்போது பல மாநிலங்களும், தடுப்பூசிகளுக்கான சர்வதேச ஏலத்தை மத்திய அரசு கொண்டுவந்து, மருந்துகளை வாங்கி, மாநிலங்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கேட்கின்றன. இந்த முயற்சியை மத்திய அரசு எடுக்குமா, எடுக்காதா என்பது தெளிவாக தெரியவில்லை. அதே நேரத்தில், மற்ற நாடுகளின் தேவையையும், தடுப்பூசி நிறுவனங்கள் பூர்த்தி செய்தாக வேண்டும். அப்படியென்றால், இந்த ஆண்டின் இறுதிக்குள் 218 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறிய திட்டத்தை நிறைவேற்றுவது எப்படி?

'நாங்கள் மத்திய அரசுடன் மட்டுமே பேசுவோம்'

இதுவரை 10க்கும் மேற்பட்ட மாநிலங்கள் சர்வதேச ஏலத்தை அறிவித்தன. இதில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, கேரளா, கர்நாடகம், டெல்லி மற்றூம் மேற்கு வங்கம் ஆகியவை அடங்கும். ஆனால், இதில் ஒரு மாநிலத்திற்குக் கூட, தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து நேர்மறையான பதில் கிடைக்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் அரசு, அவர்கள் பல்வேறு நிறுவனங்களை அணுகியதாகவும், அதில் மாடர்னா நிறுவனம் மட்டுமே பதில் அளித்தது என்றும், ஆனால், அவர்களும் பஞ்சாப் அரசுடன் மருந்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.
webdunia

பஞ்சாப் அரசின் தடுப்பூசிக்கான தொடர்பு அதிகாரியான விகாஸ் கார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் அமரீந்தர் சிங்கின் உத்தரவின்படி, நாங்கள், பஞ்சாப் மாநிலத்திற்கான தடுப்பூசிகளை வாங்குவதற்காக ஸ்புட்னிக், ஃபைசர், மாடர்னா மற்றும் ஜான்சன்&ஜான்சன் ஆகிய நிறுவனங்களை அணுகினோம். அதில், மாடர்னா மட்டுமே பதில் அளித்தது. ஆனால், மாநிலத்தின் கொள்கைகளை மேற்கோள்காட்டி அவர்களும் எங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விநியோகிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். அந்நிறுவனம், மத்திய அரசுடன் மட்டுமே ஏலம் வைத்துக்கொள்ளும் என்றும், எந்த மாநில அரசுடனோ தனியார் நிறுவனத்துடனோ மருந்து விநியோகம் குறித்து உடன்படிக்கை வைத்துக்கொள்ளாது என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

இதே மாதிரியான பதில்தான் டெல்லி அரசுக்கும் கிடைத்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, தடுப்புசிகள் குறித்து நிறுவனங்களை தொடர்பு கொண்டு பேசியபோது, இதுகுறித்த எந்த கலந்துரையாடலுக்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள் என்றார்.

மேலும் "நாங்கள் ஜான்சன்&ஜான்சன், மாடர்னா மற்றும் ஃபைசர் ஆகிய நிறுவனங்களை தொடர்புகொண்டோம். அவர்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விநியோகிக்க முடியாது என்றும் தெரிவித்துவிட்டன.

மாநிலங்கள் சர்வதேச ஒப்பந்தங்களை கோரலாம் என்று மத்திய அரசு கூறினாலும், உண்மையில் அவர்கள் இந்த மருந்து நிறுவனங்களுடன் தனியாக ஒரு உரையாடலும் மேற்கொள்கின்றனர். இந்திய தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை வாங்கிக்கொள்ளுங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அங்கும் எல்லாமே மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. நாம் தனியார் நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு மருந்துகள் வாங்கலாம் என்பதற்கு ஒரு வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களோ, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாக கூறுகிறார்கள். நாங்கள் மத்திய அரசிடம் கூற விரும்புவதெல்லாம், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, சூழலின் தீவிரத்தை புரிந்துகொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே." என்று தெரிவித்தார் சிசோடியா.

மகாராஷ்ர்டா அரசு, ஐந்து கோடி ரூபாய்க்கு ஏலம் தயாரித்து வைத்துள்ளதாகவும், ஆனால், மருந்து கொடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்றும் தெரிவிக்கிறது.

அதன் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே, "அரசு அறிவித்த இந்த சர்வதேச ஒப்பந்தத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. மருந்துகள் இறக்குமதி குறித்து மத்திய அரசு தேசிய அளவிலான கொள்கையை அறிவிக்க வேண்டும். மத்திய அரசு ஒரு சர்வதேச ஏலத்தை உருவாக்க வேண்டும். அதன்மூலம் எந்த மருந்து வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திகொள்வது மாநிலங்களின் பொறுப்பு என்றாலும், அதற்கான தொகையை நாங்கள் மத்திய அரசிற்கு அளித்துவிடுவோம். ஆனால், அதற்கு பொதுவான ஒரு கொள்கை வேண்டும். இதுகுறித்து பல்வேறு கூட்டங்களில் மத்திய அரசிடம் தெரிவித்துவிட்டோம், கடிதங்களும் எழுதியுள்ளோம்." என்றார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் இதே கோரிக்கையை முன்வைத்தனர்.

'மும்பைக்கு எட்டு நிறுவனங்களின் பதில் வந்தபோதும்…'

மாநில அரசுகளின் சர்வதேச ஏலம் குறித்து எந்த பதிலும் வரவில்லை என்றாலும், கடந்த மே மாதம் 12 ஆம் தேதி, மும்பை மாநகராட்சி ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு ஏலத்தை கொண்டு வந்தது. முதன்முதலில் ஒரு மாநில அரசு இவ்வாறு ஏலம் வெளியிட்டது இதுவே. இதற்கான கடைசி நாளைக்கூட 18 மே-விலிருந்து 25 மே மாதத்திற்கு மாற்றியது. எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் இந்த ஏலத்திற்கு பதிலளிக்கவில்லை என்றாலும், எட்டு விநியோகஸ்தர்கள் இந்த ஏலத்திற்கு பதிவு செய்திருந்தனர். இதில் ஏழு விநியோகிஸ்தர்கள் ஸ்புட்நிக் மருந்தை விநியோகிக்க விரும்புவதாக அணுகி இருந்தனர். ஒருவர் மட்டுமே ஆஸ்ட்ராசெனகா அல்லது ஃபைசர் மருந்தை விநியோகிக்க விரும்புவதாக கோரியிருந்தனர்.

இதுகுறித்து மும்பை மாநகராட்சி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், "ஆவணப்படுத்துதல் பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. இதில், தயாரிப்பு நிறுவனங்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஏதேனும் விருப்பம் உள்ளதா என்று பார்ப்பதும் முக்கியம். இதன்மூலம், பணிகள் சுலபமாக நடைபெறும். மருந்துக்கான விலை மற்றும் விநியோகிக்கும் வழிகள் குறித்து மாநகராட்சி ஆய்வு செய்யும்." என்றும் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், நான்கு வெவ்வேறு விநியோகஸ்தரகளிடமிருந்து மருந்தை பெறுவதற்கு பதிலாக ரஷ்ய அரசிடமிருந்து மருந்தை நேரடியாக பெற முடியுமா என்று மும்பை மாநகராட்சி முயன்று வருகிறது. தற்போது, ரஷ்யாவின் நேரடி முதலீட்டு முறையே தடுப்பூசியை தயாரித்து விநியோகித்து வருகிறது.

மாநகராட்சி ஆணையர், மருந்தை நேரடியாக அவர்களிடமிருந்து வாங்க முடியுமா என்று கேட்கிறது. அதே நேரத்தில் ரஷ்ய தூதரகத்துடனும் தொடர்பில் உள்ளது.

மும்பையைப்போலவே, புனே மாநகராட்சியும் ஒரு சர்வதேச ஏலத்தை வெளியிட உள்ளது, இதற்கான கடைசி கட்ட பணிகள் நடந்துவருகின்றன. மறுபுறம், புனே மாநகராட்சி, சீரம் நிறுவனத்திலிருந்து மருந்தை நேரடியாக வாங்கவும் முயன்று வருகிறது. ஆனால், அந்நிறுவனம் மாநகராட்சிக்கு அளிக்க மறுத்துவிட்டது. தற்போதுள்ள அரசின் கொள்கையின்படி, மருந்துகள் மத்திய அரசுக்கு, மாநில அரசுக்கு, தனியார் மருந்துவமனைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று புனே மாநகராட்சிக்கு பதிலளித்துள்ளது. சீரம் நிறுவனத்திடமிருந்து புனே மாநகராட்சி நேரடியாக மருந்தை வாங்குவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று புனே மேயர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு என்ன செய்யும்?

போதுமான அளவு தடுப்பு மருந்துகள் இல்லாமல் இருப்பதற்கு மத்திய அரசின் கடினமான கொள்கையே காரணம் என மாநில அரசுகள் கூறுகின்றன. இந்த சலுகையை மத்திய அரசு கொடுப்பதற்காக அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டின் இறுதியில், பல்வேறு நாடுகளிலிருந்து, இந்தியாவில் 218 கோடி தடுப்பூசிகள் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், எந்த கொள்கையை பயன்படுத்தி இந்த இலக்கு எட்டப்படும் என்று யாருக்குமே தெரியாது. தற்போது சர்வதேச அளவிலான ஏலத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று மாநிலங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன என்றாலும், மத்திய அரசின் இந்த இலக்கு இதன்மூலம் எட்டப்படுமா?
webdunia

கடந்த திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், அரசின் சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளரான லவ் ஆர்வல், "அது ஃபைசரோ, மார்டனாவோ, நாங்கள் மத்திய அளவு திட்டமிட்டு வருகிறோம். இரு நிறுவனங்களுமே அதன் கொள்ளளவை விட அதிகமாகவே ஆர்டர்களை சந்தித்து வருகின்றன. ஆகையால், இந்தியாவிற்கான விநியோகம் என்பது, அந்த நிறுவனங்களிடம் கூடுதலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் தடுப்பூசிகளின் அளவை பொருத்தே அமையும். அவர்கள் இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவிப்பார்கள், மாநிலங்களுக்கு இந்த மருந்துகளை எவ்வாறு அனுப்புவது என்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்." என்று கூறியுள்ளார்.

இந்த தடுப்பூசி நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா முயன்று வருகிறது. ஆனால், தங்களின் தடுப்பூசி பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்பே, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை இந்நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டு விட்டனர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தற்போது அமெரிக்க பயணத்தில் இருக்கிறார். இந்த பயணத்தின்போது அவர் அமெரிக்காவில் உள்ள தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய கூட்டங்களில்தான் நம்பிக்கை உள்ளது. இந்த கூட்டங்கள் பலனளிக்கவில்லை என்றால், மருந்துகளை வாங்க மாநில அரசுகள் விருப்பம் காட்டினாலும், சர்வதேச ஏலம் மூலம் அவற்றை வாங்க தயாராக இருந்தாலும், கோவிட் தடுப்பு மருந்துகளை வாங்க இந்தியா காத்திருக்கதான் வேண்டும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெகுல் சோக்சியை நாடு கடத்த முடியாது: டொமினிக்கன் நீதிமன்றம் மறுப்பு!