Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? - மலேசிய பிரதமர் கேள்வி

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (14:57 IST)
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மலேசியப் பிரதமர் மகாதீர் மொகமது தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இந்தச் சட்டத்தால் ஏற்கெனவே மக்கள் பலியாகி வருவதாக அவர் கூறியுள்ளார்.
மலேசியப் பிரதமர் மீண்டும் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினர் இந்தியக் குடியுரிமை பெறுவதை துரிதப்படுத்தவே இந்தச் சட்டத்திருத்தம் உதவும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வு குறித்தும் விவாதிப்பதற்காக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இரண்டாம் நாளன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதே இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் பிரதமர் மகாதீர்.
 
"மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அதேபோன்றதொரு நடவடிக்கையை இங்கு (மலேசியா) மேற்கொண்டால் என்ன நடக்குமென்பது உங்களுக்குத் தெரியும். எங்கும் குழப்பம், ஸ்திரமின்மை நிலவும். அனைவரும் பாதிக்கப்படுவர்," என்றார் மகாதீர்.
 
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் அனைத்துக் குடிமக்களும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மலேசியாவில் பிற இனத்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"மலேசியாவுக்கு வந்த இந்தியர்களை நாம் ஏற்றுக் கொண்டோம். அதேபோல் சீனர்களையும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், உரிய வகையில் தகுதி பெறவில்லை என்றாலும் கூட அவர்களுக்குக் குடியுரிமை வழங்கி உள்ளோம். இப்போது அந்த இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் மலேசிய அரசிலும் இடம்பெற்றுள்ளனர்."
 
"சுமார் 70 ஆண்டுகளாக இந்தியக் குடிமக்கள் எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இவ்வாறு சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கான அவசியம் என்ன?" என்று மகாதீர் கேள்வி எழுப்பினார்.
 
இரண்டாவது முறை இந்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மகாதீர்:
அண்மைய சில மாதங்களில் இந்தியாவுடன் தொடர்புடைய பதற்றமான விவகாரங்கள் குறித்து இரண்டாவது முறையாக மகாதீர் தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
 
கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றியபோது இந்தியா வலுக்கட்டாயமாக காஷ்மீர் பகுதியை ஆக்கிரமித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார் மகாதீர்.
 
இதனால் இந்தியத் தரப்பு அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இந்திய வர்த்தகர்கள் மலேசிய பாமாயிலை இறக்குமதி செய்யாமல் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும் தனது அதிருப்தியை மகாதீர் வெளிப்படுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments