Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை மனிதப் புதைகுழிகளில் இதுவரை கிடைத்தது என்ன?

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (11:35 IST)
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட 'மனித புதைக்குழிகள்' தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்பட்டதாக நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த ஜுன் மாதம் அறிக்கையொன்றின் ஊடாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில், மனித புதைக்குழிகள் தொடர்பிலான பேச்சுக்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
 
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ஓரிரு தினங்களிலேயே மற்றுமொரு மனித புதைக்குழி தொடர்பிலான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
 
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 29ம் தேதி குழாய் நீர் பொருத்தும் பணிகளுக்காக பிரதான வீதியோரத்தில் நீர்வழங்கல் அமைச்சினால் குழியொன்று தோண்டப்பட்டுள்ளது.
 
இதன்போது, பெண்களின் உள்ளாடைகள் மற்றும் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எச்சங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
இதையடுத்து, போலீஸார் இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவூட்டியதுடன், குறித்த பகுதியில் மனித புதைக்குழி உள்ளதா என்பது தொடர்பிலான பூர்வாங்க அகழ்வு பணி கடந்த 6-ஆம் தேதி இடம்பெற்றது.
 
இதன்போது, குறித்த இடத்திலிருந்து மனித எச்சங்கள் என அடையாளம் காணப்பட்ட சில எச்சங்களை அதிகாரிகள் அடையாளப்படுத்தியிருந்தனர்.
 
இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 13-ஆம் தேதி முல்லைத்தீவில் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
முல்லைத்தீவில் எங்கெங்கு 'மனித புதைக்குழி' அடையாளம் காணப்பட்டுள்ளது?
 
இலங்கையில் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் 'மனித புதைக்குழிகள்' அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் மூன்று இடங்களில் மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
இதன்படி, இலங்கையின் வடப் பகுதியிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியிலேயே கடந்த 29ம் தேதி மூன்றாவது 'மனித புதைக்குழி' அடையாளம் காணப்பட்டது.
 
ஏனைய இரண்டு புதைக்குழிகளும் முல்லைத்தீவு நகரிலிருந்து இருவேறு இடங்களில் அடையாளம் காணப்பட்டிருந்தன.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான இறுதி யுத்தம் முடிவடைந்த இடமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.
 
இலங்கையில் மூன்று தசாப்த காலங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி நிறைவுக்கு கொண்டு வந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
 
எனினும், மே 18ம் தேதி ஆயிரக்கணக்கான தமது உறவுகளை இலங்கை ராணுவம் கொலை செய்ததாக யுத்தத்தில் நேரடி பாதிப்புக்களை எதிர்கொண்ட குடும்பங்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
 
 
மனிதப் புதைக்குழிகள்' காணப்படும் இடம் எப்படிப்பட்டது?
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே இறுதி கட்ட யுத்தம் இடம்பெற்றது.
 
இதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட பலர் நந்திக்கடல் பகுதியில் வைத்தே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
அதேஇடத்தில் வைத்து, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் தமிழர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
 
இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை ராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.
 
இறுதிக் கட்ட யுத்தம் முடிவடைந்த நந்திக்கடல் பகுதியிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலேயே கொக்குத்தொடுவாய் பகுதி அமைந்துள்ளது.
கொக்குத்தொடுவாய் பகுதியானது 1984ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அங்குள்ள மக்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
 
காணாமல் ஆக்கப்பட்டோர் இங்கு புதைக்கப்பட்டனரா?
இந்த 'மனித புதைக்குழியில்' தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமானது என கருதப்படும் சீருடைகள் காணப்பட்டமையினால், இது விடுதலைப் புலி உறுப்பினர்களுடைய எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை தமிழர்கள் வெளியிடுகின்றனர்.
 
யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சுமார் 27 வருட காலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இடமொன்றில் இவ்வாறு மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது, காணாமல் ஆக்கப்பட்டவர்களை ராணுவத்தினர் கொலை செய்து புதைத்திருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
 
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் முல்லைத்தீவு பிரதேச மக்களினால் வெளியிடப்படும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ் இலங்கை ராணுவத்திடம் வினவியது.
 
''எம்மால் அப்படி கூற முடியாது. ஏனெனில், அதனை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் இல்லை. மக்கள் குற்றஞ்சுமத்துவதில் அர்த்தம் கிடையாது. யுத்தத்தின் போது உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மாத்திரம் அல்ல, ராணுவத்தினரின் உடல்களும் தற்போதும் கிடைக்கின்றன. சரியான விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின் பின்னரே இது எந்த காலப் பகுதிக்கு சொந்தமான எச்சங்கள் என்பதை கூற முடியும். அடுத்தது இது மனித எலும்பு எச்சங்களா என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். விசாரணைகளின் பின்னரே சரியான தீர்மானத்திற்கு வர முடியும்." என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவிக்கின்றார்.
 
இலங்கையில் வேறு எங்கெல்லாம் 'மனிதப் புதைக்குழிகள்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
 
இலங்கையில் சுமார் 20திற்கு மேற்பட்ட 'மனித புதைக்குழிகள்' அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜே.டீ.எஸ், எப்.ஓ.டீ, சி.எச்.ஆர்.டி மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் ஆகிய நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
இந்த புதைக்குழிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஏராளமான விசாரணை ஆணைக்குழுக்கள், தனது கடமையை சரிவர முன்னெடுக்கவில்லை என தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
''உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சிகள் தடைப்பட்டுள்ளன. நீதிபதிகளும், தடயவியல் நிபுணர்களும் திடீர் இடமாற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதை காவல்துறை தாமதப்படுத்தியுள்ளது. குடும்பங்களின் சட்டவாளர்கள் புதைக்குழிகள் உள்ள இடங்களுக்கு போவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது உயிருடன் உள்ள சாட்சிகளைக் கண்டறிவதற்கு எந்தவொரு தரவுகளும் சேகரிக்கப்படவில்லை. யாரேனும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்த ஒரு சில அரிதான வழக்குகளிலும் அந்த குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது." என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் சடலங்களை கொண்ட பாரிய மனிதப் புதைக்குழிகள் ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும், நூற்றுக்கணக்கிலாவது இலங்கையில் காணப்படுகின்றது என அந்த அறிக்கையில் கூறப்படுகின்றது.
 
'மனிதப் புதைக்குழியில்' இதுவரை என்ன கிடைத்திருக்கிறது?
இவ்வாறான மனிதப் புதைக்குழிகளில் 20 புதைக்குழிகளில் மாத்திரமே அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன.
 
1983 - 2009ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதலின் போது, பாதுகாப்பு படையினரால் திட்டமிட்டும், பரந்தளவிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களின் அப்பட்டமான நினைவுப்படுத்தலாக நாட்டின் வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட இதர மனிதப் புதைக்குழிகளின் அகழ்வுப் பணிகள் காணப்படுவதாக அதில் கூறப்படுகின்றது.
மன்னாரில் அடையாளம் காணப்பட்ட மனித புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களில் மாதிரிகள் ஆய்வுகளுக்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூடத்தில் பல வருடங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
 
எனினும், அந்த மனித எச்சங்கள் ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானவை என அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த மனித எச்சங்கள் 1477 - 1642 ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்டவை என அந்த அறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.
 
எனினும், குறித்த எச்சங்கள் மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என அந்த ஆய்வுகளில் இலங்கை சார்பாக கலந்துக்கொண்ட சட்டத்தரணி ஒருவர், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
மன்னார் மனித புதைக்குழியிலிருந்து பெற்றுக்கொண்ட மனித எலும்பு எச்சங்களின் மாதிரி தடயங்கள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அது மாற்றப்பட்டுள்ளதாக பின்னரே தெரியவந்தது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
இதன்படி, உண்மையாக பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளை மாற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
 
அதனால், தமிழர்களை கொண்டு இந்த ஆய்வுகள் நடத்தப்படுவது சிறந்ததாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிகின்றார்.
 
தமிழ் அமைப்புகளின் கோரிக்கை என்ன?
மனித புதைக்குழியொன்று தோண்டப்படுவது தொடர்பில் காணப்படும் சர்வதேச நியதிகளை மீறி, இந்த புதைக்குழி தோண்டப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
 
முல்லைத்தீவு அகழ்வு பணிகளின் போது எவ்வாறான சர்வதேச நியதிகள் மீறப்பட்டுள்ளன என்பது குறித்து, பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
 
''பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி இந்த அகழ்வுகள் முன்னெடுக்கப்படக்கூடாது. வெற்று கைகளில் தடயங்களை எடுக்கக்கூடாது. ஆனால் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விடயங்கள் தொடர்பில் நாம் முல்லைத்தீவு நீதவான் தலைமையில் 13ம் தேதி நடைபெறும் கலந்துரையாடலில் கருத்துக்களை முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம்," என பிரபல சட்டத்தரணியொருவர், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
அடுத்த கட்டமாக என்ன நடக்கும்?
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் அடையாளம் காணப்பட்டு, தற்போது கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ள மனித புதைக்குழி தொடர்பில் எதிர்வரும் நாட்களில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்த விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
 
முல்லைத்தீவில் எதிர்வரும் 13ம் தேதி இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
 
நீதிபதி, நீதவான்கள், சட்ட மருத்துவ அதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட விடயம் சார்ந்த அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
 
இந்த கலந்துரையாடலில் எட்டப்படும் முடிவுகளின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
 
பாதுகாப்பு அமைச்சின் பதில் என்ன?
 
'மனித புதைக்குழிகள்' தொடர்பில் 4 தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
''நாம் இதனை நிராகரிக்கின்றோம். மிகவும் தெளிவாக கூறுகின்றோம். பாதுகாப்பு அமைச்சு இதனை நிராகரிக்கின்றது" என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேணல் நலின் ஹேரத் குறிப்பிட்டார்.
 
கூட்டறிக்கை தயாரித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுவது என்ன?
அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள், வழக்குகளின் தரவுகள் உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கையை தாம் தயாரித்ததாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சங்கத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
 
'1994ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகள் மற்றும் தேடிக் கொள்ளக்கூடியதாக இருந்த வழக்கு விசாரணை அறிக்கைகள், சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
 
மாத்தளை எலும்பு எச்சங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் போது, சட்ட மருத்துவ அதிகாரியின் முத்திரை அதில் இருந்ததா என்பதை யார் அறிவார்கள்?. இதனுடன் தொடர்புடைய ஆவணங்களை அவர்களினால் காண்பிக்க முடியும். இந்தந்த இடங்களில் மனிதப் புதைக்குழிகள் இருந்தன என ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் உள்ளது. ஓகந்தர மனிதப் புதைக்குழியில் 24 மனித எலும்புக் கூடுகள் காணப்பட்டன. அந்த வழக்கிற்கு என்ன நடந்தது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் அந்தந்த பிரதேசங்களில் வாழும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது." என காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சங்கத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments