Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்' பட தலைப்புக்கு பின்னணியில் என்ன நடந்தது?

விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்' பட தலைப்புக்கு பின்னணியில் என்ன நடந்தது?
, வியாழன், 24 ஜூன் 2021 (07:12 IST)
நடிகர் விஜய்யின் 65வது படம் 'பீஸ்ட்' என தலைப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு விஜய்யின் 47வது பிறந்த நாளன்று வெளியானது. இதற்கு முன்பு 'மாஸ்டர்', 'சைகோ', 'தர்பார்', 'ஹீரோ', 'ஆக்‌ஷன்' என கடந்த சில வருடங்களில் மீண்டும் பல தமிழ்ப்படங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் அதிகம் பார்க்க முடிந்தது.
 
இதுமட்டுமில்லாமல், அடுத்தடுத்து வெளியாக இருக்கும் 'டான்', 'டாக்டர்' என பல படங்களின் தலைப்பும் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.
 
இப்படி தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது மீண்டும் அதிகரித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
வரி விலக்கு எதற்கு?
 
2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதலமைச்சர் கருணாநிதி தமிழில் தலைப்பு வைக்கப்பட்டிருந்தால் வரிவிலக்கு என்பதை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இதில் பல படங்கள் வெறும் தலைப்பு மட்டுமே வைத்து வரிவிலக்கு பெறுவதாகவும், கதைகள் குறித்த முக்கியத்துவம் இங்கு இல்லாமல் போவதும், 'பையா', 'சிவாஜி', 'போக்கிரி' போன்ற தமிழ் வார்த்தைகள் அல்லாத படங்களுக்கு விலக்கு கிடைத்து வந்ததும் விவாதத்திற்கு உள்ளானது.
 
இந்த அறிவிப்புகளை அடுத்து வரி விலக்கிற்காக ஆங்கிலத்தில் இருந்த பல தமிழ் படங்களின் தலைப்புகள் தமிழ்ப்படுத்தப்பட்டன. உதாரணமாக, 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' என்பது 'உனக்கும் எனக்கும்' என மாறியது. 'எம்டன் மகன்', 'பவர் பாண்டி' என வரிவிலக்குக்காக தமிழ்படுத்தப்பட்ட படத்தலைப்புகள் ஏராளம்.
 
ஆனால், இந்த வரிவிலக்கால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவது மட்டுமல்லாமல், வரிச்சலுகை வழங்கும் படங்களிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. மேலும், இந்த வரிவிலக்கால் முழுப்பயன் பெற்றவர்கள் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும்தான்.
 
முறைப்படி வரிப்பிடித்தம் செய்திருந்தால் அது உள்ளாட்சி அமைப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும். அது இல்லாமல் போகும் போது அந்த செலவையும் அரசே நேரடியாக ஏற்று கொள்ள வேண்டி இருந்தது. இப்படி பல விஷயங்கள் இதில் விவாதிக்கப்பட்டது.
 
மீண்டும் அதிகரித்திருக்கும் ஆங்கிலத் தலைப்புகள்:
 
இதன் பின்பு ஆட்சிப்பொறுப்பேற்ற ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பதோடு அதற்கு 'யூ' சான்றிதழும் இருந்தால் மட்டுமே வரிவிலக்கு என்பதோடு மேலும் சில நிபந்தனைகளை 2011ல் நடைமுறைக்கு கொண்டு வந்தது.
 
இந்த நிபந்தனைகளுக்கு பல தமிழ்ப்படங்கள் உட்படுவது சிரமமாக இருந்ததால் மீண்டும் ஆங்கில தலைப்புகள் அதிகரிக்கத் தொடங்கின.
webdunia
மேலும், கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இது திரைப்படங்களுக்கும் பொருந்தியது. இதில் டிக்கெட் கட்டணம் 100 ரூபாய்க்குள் வந்தால் 18% எனவும், அதற்கும் மேல் இருந்தால் 28% எனவும் அத்துடன் சேர்த்து படங்களுக்கான கேளிக்கை வரி 8% எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இதில் கேளிக்கை வரி நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் திரைத்துறையினர் நீண்டகாலமாக வைத்து வருகின்றனர்.
 
சர்ச்சையில் 'பீஸ்ட்'
 
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து கொண்டிருக்கும் 65-வது படத்தின் தலைப்பு 'பீஸ்ட்' என அறிவிக்கப்பட்டு இருந்தது. 'பிகில்', 'மாஸ்டர்' தற்போது 'பீஸ்ட்' என அடுத்தடுத்து தனது படங்களுக்கு நடிகர் விஜய் ஆங்கிலத்தில் பெயர் வைப்பது 'பேன் இந்தியா நடிகர்' என்ற அடையாளத்தை குறி வைத்துதான் என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியது.
 
"உள்நோக்கம் இல்லை"
தமிழ் சினிமாவில் மீண்டும் அதிகரித்திருக்கும் ஆங்கில பட தலைப்புகள் குறித்து பேச பிபிசி தமிழுக்காக இயக்குநரும், ஃபெஃப்சி தலைவருமான செல்வமணியை தொடர்பு கொண்டோம்.
 
"ஜி.எஸ்.டி., வரிவிலக்கு போன்ற எந்த விஷயங்களும் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் ஆங்கில தலைப்புகளுக்கு காரணம் இல்லை. தமிழ் படங்களுக்கு தமிழில்தான் தலைப்பு இருக்க வேண்டும் என அரசு எதிர்ப்பார்த்து அதை அறிவித்தது உண்மையிலேயே நல்ல விஷயம்தான். அதற்கு வரிச்சலுகையும் அறிவித்தது.
 
ஆனால், தற்போது ஓடிடி தளங்கள் வளர்ச்சி அடைந்திருப்பதால் படங்களின் தலைப்பு ஆங்கிலத்திலோ அல்லது பொதுவாகவோ வைக்கும் போது அது பலதரப்பட்ட பார்வையாளர்களிடமும் கொண்டு போய் சேர்க்க இன்னும் எளிதாக இருக்கும். அதுதான் முக்கிய நோக்கம்.
 
மற்றபடி ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால் கூடுதல் வரி என்ற பேச்சுகள் எழுவது சரியாக இருக்காது. அதற்கு பதில், தமிழில் வைத்தால் வரிவிலக்கு என்ற விஷயம்தான் சரி. ஆனால், இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.
 
தமிழில் பெயர் வைத்து வரி விலக்கு இருந்திருந்தால், கிடைக்கும் லாபத்தை விட, ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் போது இன்னும் அதிக அளவு பார்வையாளர்களை சென்று சேரவும், அந்த கதைக்கான களமும் விரிவடைவதால் இப்போது அதை பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை," என்றார்.
 
"'பீஸ்ட்' வருத்தமாக உள்ளது"
இது தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியனை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம். "முதலில் தமிழ்ப்படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு என்பதே வருத்தமாக உள்ளது. முன்பெல்லாம் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு தமிழில் பெயர் வைத்திருந்தார்கள். மக்களுக்கு எளிதில் புரியும் வகையிலும் நல்ல தமிழோடும் இருந்தது. ஆனால், இப்போது 'பீஸ்ட்' போல பல படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது மீண்டும் அதிகரித்திருப்பது வருத்தமாகவே உள்ளது.
 
இதற்கு ஓடிடியில் படங்கள் வெளியாகிறது என்பதை ஒரு காரணமாக சுட்டி காட்டுவதை எல்லாம் ஏற்று கொள்ள முடியாது. ஓடிடி வளர்ச்சி என்பது இப்போது வந்ததுதானே? அதேபோல, முன்பு தமிழில் தலைப்புகள் எனும் போது வரிவிலக்கு என்பது நடைமுறையில் இருந்தது. ஜிஎஸ்டி வந்த பிறகு தற்போது அதுவும் இல்லை.
 
மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசு இது குறித்து என்ன முடிவு எடுக்க போகிறது என்பது தெரியவில்லை. அரசு கொரோனா ஒழிப்பில் தீவிரமாக இருப்பதால் கொரோனா தீவிரம் குறைந்து முதல்வரை சந்திக்கும் போது இந்த கோரிக்கையை முன்வைக்க உள்ளோம்.
 
அதேபோல, முந்தைய அரசு கொண்டு வந்த கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற எங்களது நீண்ட கால கோரிக்கையும் இப்போது நிறைவேறும் என நம்புகிறோம். அதனால், தமிழில் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற உணர்வு இயக்குநர்களுக்கும் ஹீரோக்களுக்கும் இருக்க வேண்டும்" என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் 111ஆக குறைந்தது ஒருநாள் கொரோனா பாதிப்பு!