Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை தமிழர் கட்சிகளுடன் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசியது என்ன?

இலங்கை தமிழர் கட்சிகளுடன் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசியது என்ன?
, வெள்ளி, 8 ஜனவரி 2021 (11:13 IST)
இலங்கைக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையின் பிரதான தமிழர் கட்சிகள் மற்றும் தமிழர்  பிரதிநிதிகளை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் (இந்திய தூதரகம்) இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,  தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய பிரதான தமிழர் கட்சிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
அத்துடன், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் டக்ளஸ் தேவானந்தா, எஸ்.வியாழேந்திரன் ஆகியோருடனும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடனான சந்திப்பு
 
இந்திய வம்சாவளி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், ராஜாங்க  அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள குறைபாடுகள் தொடர்பில்" தாம் இந்திய  வெளியுறவுத்துறை அமைச்சரிடம் விரிவாகப் பேசியதாகக் கூறினார்.
 
மலையகத்தில் பல்கலைக்கழகமொன்றை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம்  தெரிவித்தபோது அவர் தனது மகிழ்ச்சியை வெளியிட்டதாக ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.
 
இந்த சந்திப்பின்போது பல்கலைக்கழக நிர்மாணத்திற்கான மேலதிக நிதியுதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர். மலையகத்திற்கு அவசர ஊர்தி வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
 
இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீட்டுத் திட்டம் தொடர்பாக பேசியதாகவும் மலையக மக்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்ய இந்திய அரசாங்கம்  தயாராகவுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார் என்று ஜீவன் தொண்டமான் கூறினார்.
 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர், மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் அனைத்து தமிழ் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது மிக முக்கியமான  தருணம் ஆக கருதப்படுகிறது.
 
இதற்கு முன்னர் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரம் சந்திப்புக்களை மேற்கொள்வது வழக்கம். ஆனால்,  தற்போது மலையக கட்சிகளை இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்திருப்பது இங்குள்ள மக்களை இந்தியா கவனத்தில் கொண்டிருப்பதை வெளிக்காட்டுவதாக  பார்க்கப்படுகிறது.
 
இந்த முறை இந்தியா, மலையகத்திலுள்ள இந்திய வம்சாவளி தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜீவன்  தொண்டமான் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் சந்திப்பு
 
இந்தியா, இலங்கையின் உண்மையான நண்பன் என்பதை சிங்கள மக்களுக்கு விளக்கி எடுத்துக்காட்ட வேண்டும் என தாம் இந்திய வெளியுறவுத்துறை  அமைச்சரிடம் கோரியதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.
 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பு குறித்து மனோ கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும்  மாகாண சபை தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என தாம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் வெகு விரைவில் இனவாதம் இல்லாத இலங்கையை தமது கூட்டணி உருவாக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் உறுதியளித்தோம்.  இதேவேளை, இராமேஸ்வரம் - மன்னார் - தூத்துக்குடி - கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்தோம் என்று அறிக்கையில் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
மேலும், மலையகத்திலுள்ள நுவரெலியா மற்றும் நோர்வூட் கிளங்கன் ஆகிய மருத்துவமனைகளுக்கு பி.சி.ஆர் இயந்திரங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை  எடுக்குமாறு தாம் இந்தியாவிடம் கோரியதாக அவர் கூறுகின்றார்.
 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கைக்கான விஜயத்தின் முக்கியத்துவம் குறித்து மனோ கணேசன் பிபிசி தமிழிடம் பேசுகையில், இலங்கையின்  இன்றைய பொருளாதார நெருக்கடியின் மத்தியிலே, இலங்கை தொடர்ந்தும் சீன சார்பு நிலைப்பாட்டை எடுக்குமா என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே, இந்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தாம் கருதுவதாக மனோ கணேசன் தெரிவித்தார்.
 
அவ்வாறு சீன சார்பு நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் எடுக்கும் பட்சத்தில், அதை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதை அவர் ஆராய்ந்துள்ளதாக  மனோ கணேசன் கூறுகிறார்.
 
இதற்காகவே, இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளுடனும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக மனோ கணேசன்  தெரிவிக்கின்றார்.
 
இந்த விடயமே, எஸ்.ஜெய்சங்கரின் வருகைக்கான முதல் நோக்கம் என தான் எண்ணுவதாக மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு
 
இலங்கை தேசிய பிரச்னை தொடர்பில் தாம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கின்றார்.
 
இலங்கையின் அதிகார பகிர்வு விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற விடயத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  தம்மிடம் வலியுறுத்தியிருந்ததாகவும் அவர் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.
 
அத்துடன், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் 13வது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமக்கு சந்தேகம்  காணப்படுகின்றது என்பதையும் தாம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்ததாக அவர் கூறினார்.
 
மாகாண சபை முறைமையை, புதிய அரசியலமைப்பில் உள்வாங்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக காணப்படுகின்றது என உணர முடிந்ததாக அவர்  சுட்டிக்காட்டினார்.
 
மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்கான இந்தியாவின் உதவித் திட்டங்கள் குறித்தும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.
 
இதேவேளை, கிழக்கு மாகாண நிலைமைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனிடம் தான் கேட்டறிந்துக்கொண்டதாக வெளியுறவுத்துறை  அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் ஆய்வாளருமான மயில்வாகனம்  திலகராஜாவிடம் பிபிசி தமிழ் வினவியது.
 
இலங்கை தமிழர்கள் கடந்த தேர்தலில் எதிர்கட்சியினர் மாத்திரமன்றி, ஆளும் கட்சியிலுள்ள பிரதிநிதிகளையும் அங்கீகரித்தமையினாலேயே, இந்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் அனைத்து தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடனும் இந்த முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவிக்கின்றார்.
 
உள்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை இந்தியா முழுமையாக உள்வாங்கியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
அத்துடன், 13வது திருத்தச் சட்டம் தற்போது கேள்விக்குறியாகியுள்ள பின்னணியில், இலங்கை தமிழ் தரப்பு எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது  தொடர்பிலும் ஆராய்வதற்காகவே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இவ்வாறு அனைத்து தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என அவர்  சுட்டிக்காட்டுகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – ஊரடங்கு அமல்!