Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது ஏன்?

Advertiesment
ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது ஏன்?
, புதன், 20 ஜூலை 2022 (14:02 IST)
கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது.

புதிய ஜனாதிபதி தேர்வுக்காக, இலங்கையின் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தலையீடுகளை செய்து வருவதாக சில தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு சார்பாக செயற்படுகின்றமை, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை ஜனாதிபதி வாக்கெடுப்புக்கு தலையீடு செய்கின்றமைக்கு காரணம் என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.

இலங்கையில் உரப் பிரச்சினை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இந்தியாவிடம் உதவிகளை நாடிய போது, டளஸ் அழகபெரும, விமல் வீரவங்க, உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பினர் ரஷ்யா மற்றும் சீனாவிடம் செல்ல வேண்டும் என வலியுறுத்தியிருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.இதனால், ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவதற்கு இந்தியா விரும்பி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

'இந்தியா ரணிலையே விரும்புகின்றனது. ஏனென்றால், டளஸ் அழகபெரும பக்கத்தில் உள்ள விமல் மற்றும் கம்மன்பில ஆகியோர் சீனா, ரஷ்யா சார்பானவர்கள் என்பதை பகிரங்கமாகவே அறிவித்தவர்கள். வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்களும் சீனா, ரஷ்யா சார்ந்தவர்கள்.

இதனால், அவர்களின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து விடும் என இந்தியா பயப்படுகின்றது. இந்தியா அரசியல் ரீதியிலான அழுத்தங்களை கொடுக்கா விட்டாலும், அழுத்தங்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது" என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த தருணத்தில், இந்தியா இலங்கைக்கு உடனடி கடனுதவிகளை வழங்கியிருந்தது. இதனால், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட இலங்கை, சற்றேனும் தலை நிமிர இந்தியா பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில், இந்தியாவிடம் தொடர்ந்தும் கடனை பெற்றுக்கொள்ளாது, எரிபொருளுக்கான ரஷ்யாவிடம் செல்வோம் என டளஸ் அழகபெரும, சார்ந்தவர்கள் தெரிவித்திருந்ததாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா கூறுகின்றார்.

''இந்தியாவிடம் தொடர்ந்தும் கடனை வாங்காமல், நாங்கள் எரிபொருளுக்காக ரஷ்யாவிடம் போவோம். ரஷ்யா இருக்கும் போது, ஏன் நீங்கள் இந்தியாவிடம் செல்ல வேண்டும் என அவர்கள் கூறினார்கள். உர பிரச்சினை வரும் போது, சீனாவிடம் போவோம். ரஷ்யாவிடமிருந்து எடுப்போம். சீனா, ரஷ்யா எங்களுடன் நல்ல நாடுகள் என சொன்னார்கள். ஆனாலும், கோட்டாபய ராஜபக்ஸ அந்த சந்தர்ப்பத்தில் யாரையும் ரஷ்யாவிற்கு அனுப்பவில்லை.

அப்படி அனுப்பினால், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கோபித்துக்கொள்ளும் என கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரியும். சீனாவுடன் நெருக்கமாக பழகுபவர் தான் டளஸ் அழகபெரும. அதனால், விரும்பியோ விரும்பாமலோ, இலங்கைக்கு ராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களை கொடுக்க வேண்டிய இடத்தில் இந்தியா உள்ளது. விரும்பியோ விரும்பாமலோ ரணிலை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டமைக்கு காரணம் இதுவே." என அவர் குறிப்பிடுகின்றார்.

டளஸ் அழகபெருமவின் அரசியல் வாழ்க்கைக்கு பின்னால், ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கம் இருப்பதாவே பலரும் கூறி வருவதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பு குறித்து, ராஜதந்திர ரீதியில் பல நாடுகள் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தி, பல தரப்பிற்கு அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையின் புதிய அதிபரானார் ரணில் விக்ரமசிங்க!