Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்கா தொடங்கும் போர்கள் சரியான முடிவை தருவதில்லை - ஏன் தெரியுமா?

அமெரிக்கா தொடங்கும் போர்கள் சரியான முடிவை தருவதில்லை - ஏன் தெரியுமா?
, புதன், 1 செப்டம்பர் 2021 (08:45 IST)
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், மிக நவீன ராணுவம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மிகவும் முன்னேறிய விமானப்படையை கொண்ட உலகின் மிக சக்தி வாய்ந்த நாடாக கருதப்படும் அந்த நாட்டால், தாலிபன்களை ஏன் தோற்கடிக்க முடியவில்லை என்ற கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
அமெரிக்காவால் ஏன் ஒரு நவீன போரை வெல்ல முடியவில்லை என்று அமெரிக்க அறிவுஜீவிகள் குழப்பமடைகிறார்கள்.
 
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) அமெரிக்கப் படைகளை திரும்பப்பெற்றவுடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஈடுபாடு முடிவுக்கு வந்துவிடுமா என்ற கேள்வியும் முக்கியமானது. குறிப்பாக சீனாவும் ரஷ்யாவும் முன்னே வந்து தாலிபன்களுடன் உறவுகளை உருவாக்கிக்கொண்டுள்ள இந்த நேரத்தில் இது முக்கியத்துவம் பெறுகிறது.
 
ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் அமெரிக்கா பல வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று அமெரிக்காவுக்கு ஆதரவாக சிலர் வாதிடுகின்றனர்.
 
"அமெரிக்க ராணுவம் ஒசாமா பின்லேடனைக் கண்டுபிடித்து கொன்றது. அல்-காய்தாவை அழித்தது. அதன் பல தலைவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் உள்கட்டமைப்பு மேம்பாடு ஏற்பட்டது. பெண் கல்விக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு படித்த நடுத்தர வர்க்கம் உருவானது. இராக்கில் ஐஎஸ் என்று அழைக்கப்படும் ஆபத்தான பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர். சதாம் உசேன் மற்றும் லிபியாவில் கர்னல் கதாஃபி போன்ற சர்வாதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த வெற்றிகள் குறைவானதா என்ன? "என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாம் கெய்சிடி வினவுகிறார்.
 
1945 க்குப் பிறகு அமெரிக்காவின் ஐந்து பெரிய போர்கள்
ஆனால் ஆப்கானிஸ்தான், சிரியா, இராக், யேமென் ஆகிய நாடுகளில் பயங்கரவாதிகளை வேரறுக்க அமெரிக்கா தவறிவிட்டது என்று அமெரிக்காவில் ஒருமித்த கருத்து உள்ளது. தாலிபனின் வெற்றியும், அது மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதும், அமெரிக்காவின் தோல்விக்கு மிகப்பெரிய சான்று.
 
வரலாற்றைப் பார்த்தால், அமெரிக்கா 1945 வரை கிட்டத்தட்ட அனைத்து பெரிய போர்களையும் வென்றுள்ளது. ஆனால் 1945 முதல் அமெரிக்கா மிகச் சில போர்களில் மட்டுமே அர்த்தமுள்ள வெற்றியை பெற்றுள்ளது.
 
அமெரிக்கா 1945 முதல் ஐந்து பெரிய போர்களை நடத்தியுள்ளது.- கொரியா, வியட்நாம், வளைகுடா போர், இராக் மற்றும் ஆப்கானிஸ்தான். கூடவே சோமாலியா, யேமென், லிபியா உள்ளிட்ட நாடுகளில் சில சிறிய போர்களையும் அமெரிக்கா தொடுத்துள்ளது. வெற்றியாகக் கருதப்படும் 1991 வளைகுடா போரைத் தவிர அமெரிக்கா மற்ற எல்லா போர்களையும் இழந்துள்ளது.
 
கார்ட்டர் மல்கெய்சன் பல வருடங்களாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நிர்வாகத்திற்காக பணியாற்றினார். அதன் அடிப்படையில் அவர் ;தி அமெரிக்கன் வார் இன் ஆப்கானிஸ்தான் - எ ஹிஸ்டரி ' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.அது ஜூலை 1 ஆம் தேதி வெளியானது.
 
அமெரிக்கா ஏன் போரை இழக்கிறது?
webdunia
இந்த சமீபத்திய புத்தகத்தில், அவர் ஒரு சுவாரசியமான அம்சத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். 1945 க்கு முன்பு நடந்த போர்கள் நாடுகளுக்கிடையே நடந்ததாகவும்,அமெரிக்கா எப்போதும் இந்த போர்களை வென்றது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
 
"போராளிகள் மற்றும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள், ராணுவ வலிமையில் பலவீனமானவர்கள். ஆனால் அதிக உந்துதல் மற்றும் உறுதிப்பாடு கொண்டவர்கள். இத்தகையவர்களுடனான போர்கள் அனைத்தையும் அமெரிக்கா இழந்துள்ளது."
 
அமெரிக்க வீரர்கள் பெங்காசி, சோமாலியா, சய்கோன் மற்றும் இப்போது காபூலில் இருந்து உதவியற்ற நிலையில் திரும்பிய விதமானது தோல்வியுடன் கூடவே அமெரிக்காவுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்கா ஏன் போரை இழக்கிறது? இதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும், உள்ளூர் கலாசாரத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் இதில் முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
webdunia
அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணரும், ஸ்வார்த்மோர் கல்லூரியின் பேராசிரியருமான டொமினிக் டியர்னி, பிபிசி ஹிந்திக்கு அளித்த மின்னஞ்சல் பேட்டியில், "ஆப்கானிஸ்தான், இராக், சிரியா மற்றும் லிபியா போன்ற போர்கள் மிகப்பெரிய உள்நாட்டுப் போர்கள். இந்த போர்களில் வலிமை வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்காது. குறிப்பாக அமெரிக்கா போன்ற ஒரு நாட்டுக்கு உள்ளூர் கலாச்சாரம் பற்றி தெரியாது.அதிக செயல்அறிவு மற்றும் அதிக அர்ப்பணிப்புள்ள எதிரியுடன் அது சண்டையிடுகிறது என்பதை இங்கே புரிந்துகொள்ளவேண்டும்," என்று குறிப்பிட்டார்.
 
போர்க்களத்தில் அமெரிக்காவின் நிலை
 
டொமினிக் டயர்னி தனது 'The right to Loss a War, America in a Age of Unvinnable Conflicts' என்ற புத்தகத்தில், அமெரிக்கா சமீபத்திய போர்களை இழந்துவிட்டதை ஒப்புக் கொண்டார்.
 
இந்த சிந்தனையைத் தூண்டும் புத்தகத்தில், கொடிய கொரில்லாப் போரின் இந்த புதிய சகாப்தத்திற்கு ஏற்ப அமெரிக்கா எவ்வாறு கடுமையாக போராடியது என்பதை டொமினிக் டியர்னி விவரிக்கிறார்.
 
இதன் விளைவாக பெரும்பாலான பெரிய அமெரிக்கப் போர்கள், ராணுவத் தோல்வியை ஏற்படுத்தின. மேலும் போர்க்கள பேரழிவின் போது அமெரிக்கா அந்த புதைகுழியில் இருந்து வெளிவர முடியவில்லை, ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு மோசமான விளைவுகளை இது ஏற்படுத்துகிறது.
 
அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் உரைகளை எழுதும் எழுத்தாளர் டேவிட் ஃப்ரூம், முன்பு இராக்கில் நடந்த அமெரிக்க போரை ஆதரித்தார். ஆனால் இப்போது அவரது கருத்து மாறிவிட்டது.
 
"நாங்கள் இராக்கை மேலும் சிறப்பாக ஆக்கிட தயாராக இருப்பதாக நினைத்தோம். ஆனால் அப்படி இருக்கவில்லை. நாங்கள் அறியாமை மற்றும் ஆணவத்துடன் இருந்தோம். மனித துன்பங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்றோம், அமெரிக்கர்கள், இராக்கியர்கள் மற்றும் அந்தப்பிராந்தியம் என்று யாருக்குமே இது நல்லதாக இருக்கவில்லை,"என்று அவர் ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார்.
 
அமெரிக்க தோல்விக்கு முக்கிய காரணம்
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய விவகாரங்களில் நிபுணரான பேராசிரியர் அஃப்தாப் கமால் பாஷா, அமெரிக்க தோல்விக்கு உள்ளூர் கலாசாரம் பற்றிய வலுவான புரிதல் இல்லாதது ஒரு முக்கிய காரணம் என்று கருதுகிறார்.
 
"அமெரிக்கர்கள் மற்ற நாடுகளின் கலாசாரத்தை புரிந்து கொள்வதில்லை, நெருக்கமாக புரிந்து கொள்ள அவர்களுக்கு விருப்பமும் இல்லை. அமெரிக்க படைகள் பாக்தாத்துக்குள் நுழையும் போது, இராக்கின் ஷியா சமூகத்தினர் சதாம் ஹூசேனுக்கு எதிராக கலகம் செய்வார்கள் மற்றும் அமெரிக்க வீரர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பார்கள் என்று டிக் செனி (அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர்) மற்றும் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் (அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்) வெளிப்படையாக கூறினார்கள். ஆனால் வரவேற்பு எங்கே நடந்தது? கலகம் எங்கு நடந்தது? இது இராக்கின் உள் விவகாரங்கள் மற்றும் அதன் சமுதாயத்தைப் பற்றிய. மிகப்பெரிய தவறான புரிதலாக இருந்தது," என்று பிபிசி ஹிந்தியுடனான உரையாடலில் அவர் கூறுகிறார்,
 
பேராசிரியர் பாஷா ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தோல்விக்கு மற்றொரு உதாரணத்தைக் கூறுகிறார். "ஆப்கானிஸ்தானில் அவர்கள் கடினமான நிலப்பரப்பை எதிர்கொண்டனர். பல பள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் குகைகள் ஆகியவை தாலிபன்களுக்கு நெருக்கமாக தெரிந்திருந்தன ஆனால் அமெரிக்க வீரர்களுக்கு அவை தெரியாது. தங்களுக்கு ஆபத்து என்று நினைக்கும்போது அவர்கள் தங்கள் முழுவலுவையும் பயன்படுத்தி அந்தப்பகுதியில் குண்டுமழைபொழிந்து அந்தப்பகுதி முழுவதையும் அழித்தனர்." என்கிறார் அவர்.
 
தேசியவாதம், கருத்தியல் மற்றும் சமய போர்
வியட்நாம் போரில், வட வியட்நாமிய அரசு, வியட்-காங் என்ற கம்யூனிஸ்ட் கொரில்லா படையை நிறுவியது. அதன் கம்யூனிச சித்தாந்தம் மற்றும் தேசியவாதத்திற்கான அர்ப்பணிப்பு அமெரிக்க வீரர்களை பெரிதும் பாதித்தது. ஏனெனில் சிலநேரம் அமெரிக்க வீரர்கள் தங்கள் நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் யாருக்காக யுத்தம் செய்கிறோம் என்ற நினைப்புடன் போரிட்டனர்.
 
மரணத்தைப் பொருட்படுத்தாத மற்றும் தன் சித்தாந்தத்திற்காக போராடும் கொடிய கொரில்லா படை, இறுதியாக அமெரிக்கர்களை விரட்டியடித்தது.
 
தாலிபன்களிடமும் இதே நிலைதான். தாலிபன்கள் இதை உள்நாட்டுப்போராக இல்லாமல் சமயப்போராக மாற்றுவதில் வெற்றி பெற்றனர் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர்.
 
"தாலிபன்களிடம் ஒரு இலக்கு இருந்தது. இன சமய மற்றும் தேசியவாத முறையீடுகளின் கலவையாக இருந்தனர். மாறாக, ஆப்கானிஸ்தான் அரசு, ஜனநாயகம், மனித உரிமைகள் அல்லது தேசியவாத முறையீட்டின் அடிப்படையில் ஒரு நேர்மறையான செய்தியை கோடிட்டுக் காட்டுவதில் வெற்றிபெற முடியவில்லை," என்று பேராசிரியர் டொமினிக் டியர்னி கூறுகிறார்.
 
"சமய மார்கத்தால் ஈர்க்கப்பட்ட தாலிபன்கள் போரில் சக்திவாய்ந்தவர்களாக மாறினர். அவர்கள் தங்களை இஸ்லாத்தின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொண்டனர். வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பினர். இந்த கருத்துக்கள் சாதாரண ஆப்கானியர்களுக்கு உத்வேகம் அளித்தன. சாதாரண ஆப்கானியர்கள் அடிப்படைவாதிகள் அல்ல. ஆனால் இஸ்லாமியர்களாக இருப்பதில் பெருமை கொள்கிறார்கள். அரசு வீரர்களுக்கு அத்தகைய உந்துதல் இல்லை. அவர்கள் எந்த இலக்கும் இல்லாமல் சண்டையிட்டனர்," என்று கூறுகிறார் ஆசிரியர் கார்ட்டர் மல்கெய்சன்.
 
ஜிகாத்துக்கு தாலிபனின் அர்ப்பணிப்பு
 
தாலிபன்களுக்காக இறக்க மற்றும் கொல்ல தயாராக இருந்த ஆப்கானியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்று. கார்ட்டர் மல்கெய்சன் தெரிவிக்கிறார். தாலிபன்கள் இதனால் போர்க்களத்தில் பயனடைந்தனர். கார்ட்டர் ஆப்கானிஸ்தானில் அதிககாலம் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அவர் தாலிபன் போராளிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும் சந்தித்துள்ளார்.
 
அவர் தனது புத்தகத்தில் ஒரு தாலிபன் தலைவரின் கூற்றை பதிவு செய்துள்ளார், "காவல்துறையோ ராணுவ வீரர்களோ கொல்லப்படும் சம்பவங்களை நான் தினமும் கேட்கிறேன். அவர்கள் தாலிபன்களை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக உள்ளார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. பல போலீஸ்காரர்களும் வீரர்களும் டாலர்களுக்காக மட்டுமே சண்டையிடுகிறார்கள். அவர்கள் நல்ல ஊதியம் பெறுகிறார்கள். ஆனால் அரசை பாதுகாக்க அவர்களிடம் உந்துதல் இல்லை. ஆனால் தாலிபன் ஜிஹாத்தில் (புனிதப்போர்) உறுதியாக உள்ளனர்."
 
தாலிபன்கள் களத்தில் சண்டைக்கு வரும்போது, இறக்கத்தயாராக வருகின்றனர். ஆனால் மறுபுறம், போரில் உயிர்களைக் காப்பாற்றுவது அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளுக்கு முன்னுரிமையாக இருந்தது என்கிறார் பேராசிரியர் பாஷா.
 
"அமெரிக்க வீரர்கள் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிற்காக போராடினர். அவர்களின் அர்ப்பணிப்பு தாலிபன்களுக்கு நிகராக இல்லை. தாலிபன்கள் தங்கள் நாட்டிற்காக போராடினர். அவர்கள் இதை ஒரு சமயப்போராக மாற்றினர். இது சாதாரண ஆப்கானியர்களிடையே அவர்கள் மீதான அனுதாபத்தை உருவாக்கியது"
 
தோல்விகளிலிருந்து அமெரிக்கா என்ன பாடம் கற்றுக்கொண்டது?
வியட்நாமின் சய்கோனில் இருந்து அமெரிக்க தலைமை எந்தப்பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. 1993 இல் சோமாலியாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு,அளவில் சிறியதாக இருந்தாலும் அதே பழைய தவறை அமெரிக்கா மீண்டும் செய்தது.
 
இறந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் மொகடிஷு வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்ட காட்சி உலகம் முழுவதும் கண்டிக்கப்பட்டது. இந்த காட்சியைப் பார்த்து அமெரிக்கர்கள் கோபமடைந்தனர். பலர் உணர்ச்சிவசப்பட்டனர். இது ஆப்பிரிக்காவில் அமெரிக்காவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
 
1993 அக்டோபரில், அமெரிக்கப் படைகள் சோமாலியத் தலைநகர் மொகடிஷுவில் ஒரு பேரழிவுத் தாக்குதலை நடத்தின. அவர்களின் நோக்கம் வலிமையான சோமாலிய கிளர்ச்சிக்குழுத்தலைவர், ஜெனரல் முகமது ஃபாரா எயிட் மற்றும் அவரது முக்கிய கூட்டாளிகளை பிடிப்பதாகும். ஆனால் அமெரிக்கப் படைகள் எய்ட்டின் போராளிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்தன.
 
இரண்டு அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 18 அமெரிக்கர்கள் மற்றும் இரண்டு ஐ.நா. வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் சோமாலியாவில் உள்நாட்டுப் போர் மற்றும் பஞ்சத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐ.நா இயக்கத்திற்கு அமெரிக்கா தலைமைதாங்கியிருந்தது..
 
ஆறு மாதங்களுக்குள், சோமாலியாவிலிருந்து அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற்றது. ஆப்பிரிக்க நெருக்கடிகளில் தலையிடுவதில் எச்சரிக்கை மணியாக இந்த பணியின் தோல்வி அமைந்தது.
 
பாடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன என்று பேராசிரியர் டொமினிக் டியர்னி கூறுகிறார். மிக முக்கியமான பாடம் "முதல் போர் முடிவதற்குள் இரண்டாவது போரைத் தொடங்காதீர்கள். அறநெறி மற்றும் மத ஆர்வத்தின் காரணமாக ஒரு போரைத் தொடங்காதீர்கள். பேசுவதற்கு வாய்ப்பு இருந்தால் மறுக்காதீர்கள். நீங்கள் சாதிக்க முடியும் இலக்குகளை அமையுங்கள். போர்களைத் தொடங்குவதை விட முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் கடினம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்."
 
'படைகள் திரும்பிவிட்டன, ஆனால் ஆர்வம் தொடரும்'
"ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது, ரஷ்யா மற்றும் சீனாவின் நட்பு, ஆப்கானிஸ்தானில் அவர்களின் வளர்ந்து வரும் ஆர்வம் ஆகியவை இப்பகுதியில் அமெரிக்காவை மும்முரமாக வைத்திருக்கும்," என்று பேராசிரியர் பாஷா கூறுகிறார்.
 
"ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் தேசத்தை கட்டியெழுப்புதல், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பெண்களின் கல்வி ஆகியவை ஒரு சாக்குபோக்கு மட்டுமே. சீனா மற்றும் ரஷ்யாவை விலக்கிவைப்பது,, மத்திய ஆசியாவில் ரஷ்யாவின் செல்வாக்கை குறைப்பது ஆகியவையே இதன் உண்மையான நோக்கம்," என்கிறார் அவர்.
 
"ஆனால் இந்தப்பின்னடைவு காரணமாக அமெரிக்க உத்தி தோல்வியடைந்தது. இப்போது அமெரிக்காவின் செயல்திட்டம், சீனா மற்றும் ரஷ்யாவை ஆப்கானிஸ்தானில் இருந்து எப்படி விலக்கி வைப்பது என்பதுதான். அமெரிக்காவிற்கு மீண்டும் பாகிஸ்தான் தேவைப்படலாம். ஏனெனில் அது தாலிபன்கள் மீது பெரும் செல்வாக்கு செலுத்துகிறது."
 
தாலிபன்களுடன் அமெரிக்கா நேரடி உறவைப் பேண வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். சமீபத்தில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு இந்தக்கருத்து வலுப்பெற்றுள்ளது.
 
ரஷ்யாவும் சீனாவும் ஒன்றிணைந்துள்ளன, அமெரிக்கா இதைப் பற்றி கவலைப்படுகிறது. கூடவே, அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு தாலிபன்களின் ஆப்கானிஸ்தான் மீண்டும் ஒரு புகலிடமாக மாறி, அவை அமெரிக்காவுக்குள்ளே அல்லது வெளியே அமெரிக்க தூதரகங்கள் அல்லது அதன் ராணுவ தளங்கள் மீது தீவிரவாத தாக்குதல்களை நடத்தக்கூடும் என்றும் அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. .
 
அமெரிக்கா மீண்டும் தனது ராணுவத்தை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புமா?
 
அத்தகைய சூழ்நிலையில் அமெரிக்கா நேரடியாக தலையிடாது என்று பேராசிரியர் பாஷா கருதுகிறார். "கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்கா பாகிஸ்தானை விட்டு விலகியது. அமெரிக்கா பாகிஸ்தான் குறித்து மகிழ்ச்சியாக இல்லை. தாலிபன் ஒப்பந்தத்தில் அமெரிக்கா பாகிஸ்தானின் உதவியை நாடியது. வீரர்களை திரும்பப் பெறும் நேரத்தில் தாலிபன்கள் தாக்க மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை பாகிஸ்தானிடமிருந்து பெற்றது. ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் செயல்திட்டம் தோல்வியடைந்ததால், இனி வரும் நாட்களில் அதற்கு பாகிஸ்தான் தேவைப்படக்கூடும். அமெரிக்காவிற்கு இப்போது முன்னாள் பாகிஸ்தான் அதிபர், ஜெனரல் பர்வேஸ் முஷாரப் போன்ற தலைவர் தேவை. 2001 அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது, அதிபர் புஷ்ஷின் வேண்டுகோளின் பேரில் அமெரிக்காவுக்கு முஷரப் ஆதரவளித்தார்,"என்று அவர் குறிப்பிட்டார்.
 
"பிரதமர் இம்ரான் கான் மீதான அழுத்தம் அதிகரிக்கும். அவரால் ஆட்சிக்காலத்தை முடிக்க முடியுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
 
"அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் மற்றொரு பெரிய போருக்கு எதிராக இருக்கிறார். ஆனால் அமெரிக்கா போரில் மீண்டும் ஈடுபடக்கூடிய சூழ்நிலைகள் உள்ளன. ஒன்று மனிதாபிமான நெருக்கடி, மற்றொன்று பயங்கரவாத அமைப்புகளின் எழுச்சி. மேலும் முன்னோக்கிப்பார்த்தால், சீனாவுடன் அதிகரிக்கும் பதற்றம் காரணமாக ஆப்கானிஸ்தான் பெரிய நாடுகளுக்கு இடையே மறைமுகப்போரின் தளமாக மாறக்கூடும்," என்று பேராசிரியர் டொமினிக் டைர்னி தெரிவிக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லடாக்கில் உலகிலேயே உயரமான சாலை திறப்பு!