Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலிபன்களிடம் சிக்கிய போர் விமானங்கள்: அதிநவீன ஆயுதங்களை இயக்க தெரியுமா?

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (11:03 IST)
கந்தஹார் விமான நிலையத்தில் அமெரிக்காவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறப்பதை தாலிபன்கள் பார்த்துக்கொண்டிருப்பதை சமூக ஊடகங்களில் வெளியான காணொளி ஒன்று காட்டுகிறது. அது நான்கு இறக்கைகளை உடைய ப்ளேக் ஹாக் ஹெலிகாப்டர்.
 
தாலிபன்கள் இனியும் வெறுமனே ஏகே ரக துப்பாக்கிகளை கையில் வைத்துக் கொண்டு டிரக்குகளில் வலம் வரும் ஒரு சாதாரண குழுவல்ல என்கிற செய்தியை, அது உலகுக்கு உணர்த்துகிறது.
 
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி காபூல் தாலிபன்களிடம் வீழ்ந்ததில் இருந்து தாலிபன்கள் அமெரிக்காவின் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை படமெடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சிலரை முழு கை உடைகளோடு சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. அவர்களையும், மற்ற உலக நாடுகளின் சிறப்பு ஆயுதப் படையினரையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.
 
அவர்களிடம் நீண்ட தாடியோ, பாரம்பரியமான சல்வார் கமீஸோ, துருப்பிடித்த ஆயுதங்களோ இல்லை. அவர்கள் தங்களின் பணிக்கும் பண்புகளுக்கும் ஏற்றார்போல் இருந்தனர்.
 
ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகள் தாலிபன்களிடம் ஒவ்வொரு நகரமாக சரணடைந்த பிறகு, தாலிபன்கள் இந்த ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
 
இந்த கைப்பற்றலால், தாலிபன் குழு மட்டுமே உலகில் வான்படை கொண்ட ஒரே பயங்கரவாத குழுவாக இருக்கிறது என ஒருவர் சமுக வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
 
தாலிபன்களிடம் எத்தனை விமானங்கள் இருக்கின்றன?
 
ஜூன் 2021 நிலவரப்படி ஆஃப்கன் விமானப் படையிடம் 167 விமானங்கள் இருந்தன. இதில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களும் இருந்தன என்று அமெரிக்காவில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் மறுகட்டுமானத்துக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அறிக்கை கூறுகிறது.
ஆனால் அதில் எத்தனை விமானங்களை தாலிபன்கள் கைப்பற்றி இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ப்ளேனெட் லேப்ஸ் என்கிற நிறுவனம் பிபிசியிடம் கொடுத்த காந்தஹார் விமான நிலைய செயற்கைக் கோள் படங்களில், பல ஆப்கானிஸ்தான் ராணுவ விமானங்கள், ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்ததைக் காண முடிகிறது.
 
தாலிபன்கள் ஆஃப்கனை கைப்பற்றி ஆறு நாட்களுக்குப் பிறகு, இரு எம்.ஐ -17 ஹெலிகாப்டர்கள், இரு ப்ளேக் ஹாக் (UH-60) ஹெலிகாப்டர்கள் மற்றும் ஐந்தாவது விமானமும் ப்ளேக் ஹாக் ஆக இருக்கலாம் என அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்கிற டெல்லி அமைப்பைச் சேர்ந்த ராணுவ விமான நிபுணர் அங்கத் நிங் கூறியுள்ளார்.
 
இதற்கு மாறாக, கடந்த ஜூலை 16ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படத்தில் 9 பிளாக் ஹாக், இரு எம்.ஐ- 17, நிரந்தரமாக இறக்கைகள் பொருத்தப்பட்ட ஐந்து விமானங்கள் என மொத்தம் 16 விமானங்களைப் பார்க்க முடிகிறது.
 
மீதமுள்ள விமானங்கள் நாட்டை விட்டு வெளியே பறந்துவிட்டன அல்லது மற்ற விமான தளங்களுக்குச் சென்று இருக்கின்றன என்று பொருள் கொள்ளலாம்.
ஹெராத், கோஸ்ட், குண்டுஸ், மஷர் இ ஷெரிப் என ஆப்கானிஸ்தானின் ஒன்பது விமானப் படை தளங்களையும் தாலிபன்கள் கைப்பற்றினர் என்பது நினைவுகூரத்தக்கது. எனவே அவ்விமான படைதளங்களிலிருந்து எத்தனை விமானங்களைக் கைப்பற்றினர் என தெளிவாகத் தெரியவில்லை. காரணம் அந்த விமானப் படைத்தளங்களிலிருந்து செயற்கைக் கோள் படங்கள் கிடைக்கவில்லை.
 
இந்த விமானப் படைத் தளங்களிலிருந்து கைப்பற்றிய விமானங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்களின் படங்களை தாலிபன் போராளிகள் மற்றும் உள்ளூர் ஊடகத்தினர் பதிவிட்டு வருகின்றனர்.
 
சில விமானங்கள், தாலிபன்களின் கைக்குக் கிடைப்பதற்கு முன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியே பறந்து சென்றன என்றும் கூறப்படுகிறது.
 
ஆகஸ்ட் 16ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் படங்களை ஆராய்ந்த போது உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருக்கும் டெர்மெஸ் விமான நிலையத்தில் எம்.ஐ- 17, எம்.ஐ- 25, ப்ளேக் ஹாக் உட்பட இரண்டு டஜன்களுக்கும் அதிகமான ஹெலிகாப்டர்கள், சில ஏ-29 இலகு வர தாக்குதல் நடத்தும் விமானங்கள், சி 208 விமானங்கள் காணப்பட்டதாக, டெல்லியைச் சேர்ந்த, பெயர் குறிப்பிட விரும்பாத விமான நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
 
இது ஆப்கானிஸ்தானில் இருந்து வந்திருக்கலாம் என்று சி.எஸ்.ஐ.எஸ் என்கிற பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.
 
வேறு எதையெல்லாம் கைப்பற்றியுள்ளனர்?
 
தாலிபன்களின் விமானப் படை குறித்து பல கேள்விகள் எழுந்தாலும், தாலிபன்கள் பல முன்னணி நவீன ரக துப்பாக்கிகள், ரைஃபிள்கள் மற்றும் வாகனங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். அவை ஆப்கானிஸ்தானில் எக்கச்சக்கமாக இருக்கின்றன.
2003 - 2016 காலகட்டத்தில் அமெரிக்கா ஏகப்பட்ட ராணுவ சாதனங்களை ஆப்கானிஸ்தான் படையில் கொண்டு வந்தது. பல நிறுவனத்தின் 3,58,530 ரைஃபிள்கள் 64,000 இயந்திரத் துப்பாக்கிகள், 25,327 க்ரெனைட் லாஞ்சர்கள், 22,174 ஹம்வீ (அனைத்து நிலபரப்பிலும் பயணிக்கும் வாகனம்) வாகனங்களை ஆஃப்கனில் கொண்டு வந்ததாக அமெரிக்கா அரசின் அறிக்கை கூறுகிறது.
 
2014ஆம் ஆண்டு நேட்டோ படைகள் தங்கள் போரை நிறுத்திய பிறகு, நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு ஆஃப்கன் ராணுவத்திடம் கொடுக்கப்பட்டது. அந்நாட்டு ராணுவம் தாலிபன்களை எதிர்கொள்ள திணறியதால், அமெரிக்கா பல நவீன ரக ராணுவ தளவாடங்களை வழங்கியது.
 
கிட்டத்தட்ட 20,000 எம்-16 ரைஃபிள்களை 2017ஆம் ஆண்டில் மட்டும் விநியோகித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் 3,598 எம் 4 ரைஃபிள்கள், 3,012 ஹம்வீ வாகனங்களுடன் இன்னும் பல ராணுவ தளவாடங்களையும் ஆஃப்கான் ராணுவத்துக்கு வழங்கியது என அமெரிக்காவில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் மறுகட்டுமானத்துக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அறிக்கை கூறுகிறது.
 
புதிய ஆயுதங்களைக் கொண்டு தாலிபன்களால் என்ன செய்ய முடியும்?
 
இந்தக் கேள்விக்கான பதில் தாலிபன்கள் கைகளில் கிடைத்துள்ள ஆயுதங்களைப் பொறுத்தது அது.
 
விமானங்களைக் கைப்பற்றுவது தாலிபன்களுக்கு எளிதாக இருந்திருக்கலாம், ஆனால் அவற்றை இயக்குவதும் பராமரிப்பதும் அவர்களுக்கு அத்தனை எளிதாக இருக்காது என சிஎன்ஏ ஆலோசனைக் குழுவின் இயக்குநரும் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகளின் முன்னாள் ஆலோசகருமான முனைவர் ஜோனதன் ஷ்ரோடன் கூறுகிறார்.
 
விமானத்தின் பாகங்கள் பெரும்பாலும் பழுது பார்க்கப்பட வேண்டும், சில நேரங்களில் மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு விமானமும் வானில் சரியாக இயங்க ஒரு பெரிய தொழில்நுட்ப வல்லுநர்களின் குழு பணியாற்றுவர்.
 
ஆகஸ்ட் மாதத்தில் ஆஃப்கானின் நகரங்கள் மற்றும் மாகாணங்கள் மீது தாலிபன் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே, ஆஃப்கான் படைகளின் விமானங்களை பராமரித்து வந்த தனியார் அமெரிக்க ஒப்பந்ததாரர்கள் வெளியேறிவிட்டனர்.
 
தாலிபன்கள் கைப்பற்றிய விமானங்களை இயக்குவதில் அவர்களுக்கு நிபுணத்துவம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு பேராசிரியரும், ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய முன்னாள் அமெரிக்க விமானப்படை வீரருமான ஜோடி விட்டோரி. எனவே இந்த விமானங்களைப் பயன்படுத்தி தாலிபன்களால் எந்த வித பிரச்னையும் இப்போதைக்கு ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.
 
ஆப்கானியப் படைகள் தாலிபன்களிடம் சரணடைவதற்கு முன்பு விமானத்தை ஓரளவுக்காவது பல்வேறு பாகங்களாக பிரித்திருக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டுகிறார் ஜோடி விட்டோரி.
 
இருப்பினும், இந்த விமானங்களை இயக்க தலிபான்கள் முன்னாள் ஆப்கானிஸ்தான் விமானிகளை கட்டாயப்படுத்த முயற்சிப்பார்கள் என ராண்ட் கார்ப்பரேஷனின் ஆராய்ச்சியாளர் ஜேசன் காம்ப்பெல் கூறுகிறார்.
 
"அவர்கள் விமானிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் அச்சுறுத்துவார்கள். எனவே, இந்த விமானங்களில் சிலவற்றை அவர்கள் பறக்க வைக்க முடியும், ஆனால் அவர்களின் நீண்டகால வாய்ப்புகள் தெளிவாகத் தெரியவில்லை" என்கிறார் ஜேசன்.
 
ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக ரஷ்யா இருந்ததால் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட எம்ஐ -17 விமானங்களை தாலிபன்களால் இயக்க முடியும். மீதமுள்ள விமானங்களின் பராமரிப்பு, பயிற்சிக்கு மற்ற அனுதாபி நாடுகளிடம் பேச வாய்ப்பு இருக்கிறது.
 
விமானங்கள் தவிர, மற்ற ஆயுதங்களை தாலிபன்கள் பயன்படுத்துவது எளிது. தாலிபன்கள் கைப்பற்றிய மற்ற சாதனங்களை அவர்கள் லாவகமாக கையாள்வது போலத் தெரிகிறது.
 
தாலிபன் போன்ற ஒரு குழுவினர் கையில் நவீன ஆயுதங்கள் கிடைப்பது "மிகப்பெரிய தோல்வி" என வாஷிங்டன்னில் உள்ள வில்சன் மையத்தின் துணை இயக்குநர் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார்.
 
இதன் விளைவுகள் ஆப்கானிஸ்தானில் மட்டும் இருக்காது. கறுப்புச் சந்தையில் சிறிய ஆயுதங்கள் வரத் தொடங்கும். உலகெங்கிலும் உள்ள மற்ற கிளர்ச்சியாளர்களுக்கு இது சாதகமாக அமையலாம்.
 
இது உடனடி ஆபத்தல்ல என்கிறார் விட்டோரி, ஆனால் வரவிருக்கும் மாதங்களில் ஆயுதங்கள் தொடர்பான ஒரு விநியோகச் சங்கிலி தோன்றக்கூடும். இதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யாவுக்கு உள்ளது.
 
இந்த ஆயுதங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதில் தாலிபன்களுக்கிடையே உள்ள ஒற்றுமை என்கிற காரணி தீர்மானிக்கும்.
 
தாலிபன் கூட்டணியிலிருந்து, அதன் கூட்டணி குழுக்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வெளியேற முடிவு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகான ஆரம்பகால உற்சாகம் தீரும்போது, தாலிபனின் தலைமை எவ்வாறு குழுவை ஒன்றாக வைத்திருக்கிறது என்பதை பொருத்து இருக்கிறது என்கிறார் விட்டோரி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்