Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விராட் கோலி பிறந்தநாள்: வீழ்ச்சியில் இருந்து திமிறி எழுந்தவர் கதை

விராட் கோலி பிறந்தநாள்: வீழ்ச்சியில் இருந்து திமிறி எழுந்தவர் கதை
, வெள்ளி, 4 நவம்பர் 2022 (23:23 IST)
காலாவதியாகி விட்டார் என்று விமர்சிக்கப்பட்ட பலர் அப்படியே காணாமலேயே போயிருக்கிறார்கள். விராட் கோலியும் அப்படி விமர்சிக்கப்பட்டார். 360 டிகிரி மைதானத்தைச் சுற்றி அடிக்கும் புதியவகை கிரிக்கெட் உலகில் அவருக்கு இடமில்லை என்றார்கள். எதற்காக இந்த அணியில் இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்கள்.

 
இப்போதும் அவர் 360 டிகிரி சுழன்று அடிப்பதில்லை. ஆனால் அவர் காணாமலும் போகவில்லை. விமர்சனம் அவரைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. ஆனால் வீழ்த்தி விடவில்லை. ஏனென்றால் அவர் விராட் கோலி!

 
கிரிக்கெட்டில் அவருக்கு எதுவுமே போதுமானதாக இருந்ததில்லை என்று கூறுகிறார்கள் விமர்சகர்கள். களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அவரது உணர்ச்சிப் பெருக்கு பலரைக் காயப்படுத்தியிருக்கலாம். விமர்சனங்களுக்கும் காரணமாக அமைந்திருக்கலாம். அணித் தலைவர் என்ற பதவியையே பறித்திருக்கலாம். ஆனால் அவைதான் விராட் கோலியை கட்டமைத்திருக்கின்றன.
 
விராட் கோலிக்கு கடந்த சில மாதங்கள் மிகக் கடினமானவை. பாகிஸ்தான் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு பேசியபோது இதை அவரே கூறியிருக்கிறார். கடந்துபோன மாதங்கள் எந்த அளவுக்கு கடினமானவை என்றால் கிரிக்கெட் பந்தையோ பேட்டையோ தொடாமல் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாகக் கழிக்க வேண்டியிருந்தது.
 
சிவப்புக் கோடு
 
வேதனையை சாதனைகளாக மாற்றிய விராட் கோலி - மறுபிறவி எடுத்தது எப்படி?
இந்தியா சறுக்கியது எங்கே? அரையிறுதி வாய்ப்பு எப்படி?
இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டம் பற்றி சுந்தர் பிச்சை ட்விட்டர் பதிவு
"அறையில் கூட்டமாக மனிதர்கள் இருக்கும்போதும் தனிமையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது" என்று வெளிப்படையாகவே தனது உளவியல் சிக்கல் பற்றிக் கூறினார்.

 
அவர் மீதான அழுத்தம் அதிகம். சரியாக ஆடவில்லை, நூறு ரன்களைக் கடக்கவில்லை என்ற கருத்து அவரே நம்பும்படியாக திணிக்கப்பட்டிருந்தது. அதனால்தான் பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்குப் பிறகு அந்த அழுத்தத்தை அடித்து நொறுக்குவது போல கையை மடக்கி மைதானத்தை குத்த வேண்டியிருந்தது.

 
360 டிகிரி ஆட்டக்காரர் இல்லையா?
விராட் கோலி டி20 ஆட்டக்காரரோ, ஒருநாள் போட்டிக்கான ஆட்டக்காரரோ அல்ல. அவர் அனைத்து வகையான போட்டிகளிலும் ஆடக்கூட வீரர் என்பதை விமர்சகர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

 
விராட் கோலிக்கு 360 டிகிரியிலும் ஆட முடியும். ஆனால் அவர் அப்படி ஆடுவதில்லை. அது பற்றி ஒரு பேட்டியில் இயான் சாப்பல் கேட்டபோது, "அப்படி ஆடுவது டெஸ்ட் கிரிக்கெட் போன்ற மற்ற பார்மட்களை பாதிக்கும் " என்று கூறியிருக்கிறார் விராட் கோலி.

 
"கிரிக்கெட்டில் பாரம்பரிமாக உள்ள ஷாட்கள் மூலமாகவே அவருக்கு ரன்கள் கிடைத்துவிடுகின்றன. தேவையில்லா ஷாட்களை அவர் ஏன் அடிக்க வேண்டும்? அவருடைய ஆட்டத்தில் வழக்கத்துக்கு மாறான 'கன்னா பின்னா' ஷாட்களை பார்ப்பது மிகவும் அரிது" என்கிறார் விளையாட்டு விமர்சகரான சுமந்த் சி ராமன்.

 
விராட்
 
"டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 19-ஆவது ஓவரில் கடைசி இரு பந்துகளில் அவர் அடித்த சிக்சர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பேட்மேன்கள் அடித்ததிலேயே மிகவும் சிறப்பானவை" என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

 
வங்கதேசத்துடனான அவருடைய ஸ்ட்ரெய்ட் திசை சிக்சர் டெண்டுல்கரின் சார்ஜா சிக்சருடன் ஒப்பிடப்பட்டது.

 
ஃபார்மில் இல்லாமல் இருந்தாரா?
விராட் கோலி இதற்கு முன்னர் ஃபார்மில் இல்லை என்பதை ரவி சாஸ்திரி ஏற்கவில்லை. "அவருடையே இப்போதைய ஆட்டத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆஸ்திரேலியாவில் இது நடக்கும் என்று எனக்குத் தெரியும்" என்கிறார் ரவி சாஸ்திரி.
 
இதே கரு
த்தை சுமந்த் சி ராமனும் கூறுகிறார். "ஃபார்மில் இல்லை என்று கூறப்பட்ட காலத்தில்கூட அவர் சராசரியாக ஒரு கிரிக்கெட் வீரர் ஆட வேண்டிய ஆட்டத்தை ஆடிக்கொண்டுதான் இருந்தார். விராட் கோலி என்பதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது" என்கிறார்.

 
டி20 போட்டிகளில் அவருடைய சராசரி 53.13. ஒரு நாள் போட்டிகளில் 57.68. டெஸ்ட் போட்டிகளில் 49.53. இந்தப் புள்ளி விவரமே அவர் அனைத்து வகையான ஆட்டங்களுக்கும் பொருந்தக்கூடியவர் என்பதைச் சொல்லிவிடும். அதிலும் ஒப்பீட்டளவில் புதியவகை நுணுக்கங்களைக் கொண்டிருக்கும் டி20 கிரிக்கெட்டில் அவர்தான் அதிக ரன் எடுத்த, அதிக சராசரியைக் கொண்ட வீரர். அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் பிற முன்னணி வீரர்களுக்கு இணையானது.
 
விராட்
 
பட மூலாதாரம்,GETTY IMAGES
சதம் அடிக்கவில்லை, ஆனால்…?
உண்மையில் விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் 2019 நவம்பருக்கும் 2022 செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் டி20 போட்டிகளில் மட்டும் 145 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 846 ரன்களைக் குவித்து 56.4 சராசரி வைத்திருந்தார். 19 ஒருநாள் போட்டிகளில் 10 அரைச் சதங்களை அடித்திருந்தார். ஆனால் சதம் அடிக்க வேண்டும் என்ற அழுத்தமே அவருக்குத் தரப்பட்டிருந்தது. டெஸ்ட் போட்டிகளில் அவர் நீண்ட இன்னிங்ஸ்களை ஆடவில்லை என்பது மட்டுமே அவர் மீதான விமர்சனமாக இருக்கலாம்.
 
"ஆப் சைடில் அடித்து அவுட் ஆகும் பலவீனம் அவருக்கு இருந்தது. அதை சில பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் அதுவும் இப்போது இல்லை" என்கிறார் சுமந்த்.

 
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த சதமும், டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான 82 ரன்களும் அவர் ஃபார்மில்தான் இருக்கிறார் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டன.

 
ஆயினும் விராட் கோலி முன்புபோல் இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே கூறுகிறார். அவர் கூறுவது அவருடைய நிதானத்தைப் பற்றி. இதுபோன்ற நிதானமான விராட் கோலியை முன் எப்போதும் கண்டதில்லை என்கிறார் அவர்.

 
'விராட் கோலியின் ஃபிட்னெஸ்'
 
மைதானத்தில் விராட் கோலி எப்போது உற்சாகமாக இருப்பார். பந்தை நோக்கி பாய்ந்து செல்வார். பேட்டிங்கில் ஒரு ரன்னை இரண்டு ரன்னாக மாற்றுவதற்காக விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுவார். இவையெல்லாம் அவருக்குச் சாதாரணமாக வாய்த்துவிடவில்லை. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அவர் அதிகக் கவனம் செலுத்துகிறார்.

 
இந்தியாவிலேயே சிறப்பான ஃபிட்னெஸ் கொண்ட வீரர் விராட் கோலி என்று தேசிய கிரிக்கெட் அகாடெமியின் அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் உள்ள 23 வீரர்களில் விராட் கோலியைத் தவிர மற்ற அனைவரும் காயம் உள்ளிட்ட ஏதோ ஒரு காரணத்துக்காக ஃபிட்னெஸ் தொடர்பான பிரச்னைகளுக்காக தேசிய கிரிக்கெட் அகாடெமியை நாட வேண்டியிருந்தது என்று அந்த அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

 
"விராட் கோலியின் பலமே அவருடைய பிட்னெஸ்தான். அதைக் கொண்டுதான் அவர் தனது கிரிக்கெட்டை வடிவமைத்திருக்கிறார்" என்கிறார் சுமந்த் சி ராமன்.
 
 
 
2020-ஆம் ஆண்டில் கோவிட் தொற்றால் உலகமே போராடிக் கொண்டிருந்த காலத்தில்கூட விராட் கோலி தனது உடலைப் பராமரிப்பதில் சமரசம் செய்து கொண்டதில்லை என்பதை அவரது சமூக வலைத்தளப் பக்கங்களைப் பார்த்தாலே தெரியும்.
 
அசைவ உணவுகளால் தனது ஃபிட்னெஸுக்கு பிரச்னை வருகிறது என்பதால் கடந்த சில ஆண்டுகளாக தனது உணவுப் பழக்கத்தையும் அவர் மாற்றிக் கொண்டிருக்கிறார்.
 
'இந்தியாவின் ஆல்டைம் கிரேட்'
 
கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியக் கிரிக்கெட்டின் தற்கால முகம் அவர்தான் என்கிறார் சுமந்த் சி ராமன்.
 
"சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இணையான வீரர். இந்தியாவின் அனைத்துக் கால கட்டத்திலுமான சிறந்த வீரர் என்கிறார்" சுமந்த்.
 
 
டெண்டுல்கர், கவாஸ்கர் போன்றோரும் அவர்களுடைய கேப்டன்சிகளில் இருந்த காலத்தில் பின்னடைவுகளைச் சந்தித்தார்கள். அதே போன்றதொரு நிலைதான் விராட் கோலிக்கும் ஏற்பட்டது. அந்தப் பின்னடைவுகள் டெண்டுல்கரையோ, கவாஸ்கரையோ வீழ்த்திடவிடவில்லை. அவை கூடுதல் கிரிக்கெட்டை அவர்களுக்குள் கொண்டு வந்தன. ஆடுகளத்துக்குள் அவர்களை நிதானப்படுத்தின. 34-ஆவது வயதை எட்டும் விராட் கோலிக்கும் அப்படியே ஆகட்டும்!

Edited By Sinoj

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இமாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்