இந்துக்கள் வழிபடும் விநாயகர் படம் அச்சிடப்பட்டிருப்பதைப் போன்ற ஆஸ்திரேலிய `பியர் விளம்பரம்' ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.
தென்னிந்தியாவில் பல வாட்ஸாப் குழுக்களில் இந்த விளம்பரம் வைரலாகப் பரவி வருகிறது. மது பாட்டில் மீது இந்துக் கடவுள்களின் படங்களைப் பயன்படுத்தி இருப்பது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி உள்ளது என்ற கமெண்ட்டுடன் இவை பகிரப்படுகின்றன.
இந்தப் படத்தை ட்விட்டரில் சேர்த்து, பிரதமர் நரேந்திர மோதி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்கள் பலருக்கு பயனாளர்கள் சிலர் புகார் அனுப்பியுள்ளனர். பாட்டில் லேபிளில் இருந்து விநாயகர் படத்தை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த விளம்பரத்தை ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் டர்ன்புல்-க்கு பலரும் டேக் செய்து, இந்த விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலிய புரூக்வில்லெ யூனியன் என்ற பியர் கம்பெனி விரைவில் ஒரு புதிய பானத்தை விநாயகர் படத்தை லேபிளில் அச்சிட்டு அறிமுகப்படுத்தப் போவதாக, வைரலாகி வரும் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் (Pirates of the Caribbean) என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் வரிகளை மாற்றி இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தை நம்பத் தயாராக இல்லாத பலர் சமூக ஊடகங்களில் இருக்கின்றனர். இந்த விளம்பரத்தில் யாரோ தில்லுமுல்லு செய்திருக்கிறார்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
ஆனால் நாங்கள் புலனாய்வு செய்ததில், அந்த விளம்பரம் சரியானது தான் என்று தெரிய வந்துள்ளது. புரூக்வில்லெ யூனியன் என்ற ஆஸ்திரேலிய பியர் கம்பெனி, விரைவில் புதிய பானம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது, அதன் லேபிளில் விநாயகர் படம் பயன்படுத்தப்பட உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் (சிட்னி) பகுதியில் அமைந்துள்ள இந்தக் கம்பெனி விநாயகர் மற்றும் லட்சுமி படங்களை பியர் பாட்டில்களில் பயன்படுத்தியதாக 2013-லும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அப்போது பெண் தெய்வமான லட்சுமி உடலும், விநாயகர் தலையும் பொருத்திய படத்தை பியர் பாட்டிலில் பசு மற்றும் `அன்னையின் சிங்கம்' படமும் பாட்டில் மீது இடம் பெற்றிருந்தன.
செய்தியை விரிவாக வாசிக்க: டெலிகிராஃப்
`தி டெலிகிராப்' பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியின்படி, சர்வதேச இந்து அமைப்பு என்று சொல்லப்படும் ஓர் அமைப்பு 2013 ஆம் ஆண்டில், இந்த விளம்பரம் குறித்துப் பிரச்சினை எழுப்பி, பணம் சம்பாதிப்பதற்காக இந்துக்களின் உணர்வுகளை கேலி செய்வது தரம் தாழ்ந்த செயல் என்றும், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியது.
இந்தச் செய்தியின்படி, புரூக்ளின் யூனியனுக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அந்த அமைப்பு பேசியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் வாழும் இந்துக்கள், அந்தக் கம்பெனி லட்சுமியின் படத்தைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், எதிர்ப்பு வருவதைப் பார்த்து, இந்து மக்களிடம் அந்த பீர் கம்பெனி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டதாகவும் `பி.டி.ஐ.' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தக் கம்பெனியின் அறிக்கையை `டெய்லி டெலிகிராப்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. ``நாங்கள் மக்களுடன் சண்டையிடவில்லை, அவர்களை நேசிக்கிறோம். நாங்கள் விரும்பாமல் நடந்துள்ளது என்றாலும், இந்து நண்பர்களை நாங்கள் காயப்படுத்தி இருக்கிறோம். இதுபற்றிய கருத்தூட்டங்களை ஏற்றுக் கொள்கிறோம். புதிய வடிவமைப்புகளுக்காக காத்திருக்கிறோம். கூடிய சீக்கிரத்தில் புதிய விளம்பரத்தையும், பாட்டில்களின் புதிய வடிவத்தையும் பெறுவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியர் கம்பெனி இணையதளத்தில் விநாயகரின் படம் பறப்பதைப்போல உள்ளது என்றும், சில நேரங்களில் அதில் உள்ள முகம் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முகம் போல மாறுகிறது என்றும் சில செய்திகளில் எழுதப்பட்டிருக்கிறது.
பியர் பாட்டில்கள் மீதிருந்து கடவுள்களின் படங்களை அகற்ற வேண்டும் என்று கோரி நிறைய ஆன்லைன் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.புரூக்ளின் யூனியனுக்கு' எதிராக ஆஸ்திரேலியாவின் விளம்பர கண்காணிப்பு அமைப்பிடம் சில மத அமைப்புகள் புகார் கொடுத்துள்ளதாக 2015ல் தெரிவிக்கப் பட்டது.``புகார் கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் பியர் கம்பெனி ஆட்சேபகரமான லேபிள்களை பாட்டில்களில் பயன்படுத்துகிறது. அதன் பாட்டில்கள் மீதும், இணையதளத்திலும் இந்துக் கடவுள்களின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதை உடனடியாக நிறுத்த வேண்டும்'' என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.இருந்தபோதிலும், புரூக்ளின் யூனியன் தனது பியர் பாட்டில்கள் மீதுள்ள லேபிளில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அதன் இணையதளத்தில் புகைப்படங்களிலும் எந்த மாற்றமும் செய்யவில்லை.
பாட்டில்களின் மீது உள்ள படங்களை சீக்கிரத்தில் மாற்றப் போகிறீர்களா என்று அந்தக் கம்பெனியிடம் மின்னஞ்சல் மூலமாக நாங்கள் கேட்டோம். அந்த நிறுவனம் பதில் அளிக்கவில்லை.