Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் - 2: சினிமா விமர்சனம்

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் - 2: சினிமா விமர்சனம்
, சனி, 20 மே 2023 (08:20 IST)
விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்- 2’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்பையும் விஜய் ஆண்டனியே மேற்கொண்டிருக்கிறார். காவ்யா தாப்பர், தேவ் கில், ஹரீஷ் பேரடி, ஜான் விஜய் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
‘பிச்சைக்காரன்- 2’ படப்பிடிப்பில்தான் விஜய் ஆண்டனிக்கு பெரும் விபத்து ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்தார். அதன்பிறகு குணமடைந்து படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதுபோன்ற காரணங்களால், விஜய் ஆண்டனி தனது முதல் படத்தை எப்படி இயக்கியிருப்பார் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.
 
இந்நிலையில், இன்று வெளியாகியிருக்கும் படத்திற்கு தமிழ் ஊடகங்கள் கலவையான விமர்சனங்களை வழங்கியிருக்கின்றன. அந்தவகையில், ’ஆரம்பம் எல்லாம் அதகளம்தான்…. ஆனா?... எனும் தலைப்புடன் இந்து தமிழ் திசை ‘பிச்சைக்காரன்- 2’ படத்தின் விமர்சனத்தை வெளியிட்டு இருக்கிறது.
 
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவர் விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி). அவரது நெருங்கிய நண்பர் அரவிந்த் (தேவ் கில்). அரவிந்த் தன் கூட்டாளிகளான இளங்கோ (ஜான் விஜய்) மற்றும் சிவாவுடன் (ஹரீஷ் பேரடி) இணைந்து விஜய் குருமூர்த்தியின் உடலில் வேறொருவரின் மூளையை பொருத்தி அதன் மூலம் சொத்தை அபகரிக்க திட்டமிடுகிறார். இந்த சதித் திட்டத்தில் வந்து மாட்டிக்கொள்கிறார் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்தும் சத்யா. திட்டமிட்டப்படி சத்யாவின் மூளை, குருமூர்த்தியின் உடலுடன் பொருத்தப்பட, வஞ்சகர்களின் சதித் திட்டம் பலித்ததா? சத்யாவுக்கான பின்னணி என்ன? - இதுதான் ‘பிச்சைக்காரன்- 2’ படத்தின் திரைக்கதை எனக் குறிப்பிட்டு இந்து தமிழ் திசை விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறது.
webdunia
சமூகத்தில் நிலவும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளையும், அதற்கான மூலக் காரணத்தையும், பணத்தை ஆயுதமாக கொண்டு ஏழைகளின் சூழலை தனக்கு சாதகமாக்கி கொள்பவர்களையும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களின் அவல நிலையையும் படம்பிடித்துக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் விஜய் ஆண்டனி. அவரது இந்த நோக்கம் பாராட்டத்தக்கது.
 
இந்தக் கதையைச் சொல்ல அவர் உருவாக்கியிருக்கும் புனைவுலகில் மூளை மாற்று அறுவை சிகிச்சைகள் சாதாரணமாக நடக்கின்றன. தவிர, ஷாப்பிங் மால் ஒன்றை உருவாக்கி, குறைந்த விலையில் மளிகை பொருட்கள் தொடங்கி ரூ.25,000-க்கு வீடு வழங்குவது வரை கார்ப்பரேட் நிறுவனமே இப்படியான திட்டங்களை செயல்படுத்துவது என்ற புனைவுலக கட்டமைப்பு பார்வையாளர்களுக்கு நெருக்கத்தை தர மறுக்கிறது. அதுவும், பிச்சைக்காரர்களை கார்ப்பரேட் அலுலவகத்தின் போர்டு மீட்டிங் நடக்கும் அறையில் அழைத்துப் பேசுவது போன்ற காட்சிகள் என இந்த சிக்கல்களெல்லாம் இரண்டாம் பாதியில் உருவெடுக்கிறதே தவிர, முதல் பாதியில் முடிந்த வரை எங்கேஜிங்கான திரைக்கதை கொடுக்க முயன்றிருகிறார் இயக்குநர்.
 
மூளை மாற்று சிகிச்சை என்ற இன்ட்ரஸ்டிக் ஐடியா, அண்ணன் - தங்கை பாசம் பார்த்து பழகியதாக இருந்தாலும் அதை திரையில் காட்சிப்படுத்திய விதம், அமைதிப் பேர்வழியாக இருக்கும் விஜய் ஆண்டனி ஒரு கட்டத்தில் ஆக்ஷனுக்கு மாறுவது, விறுவிறுப்பாக கடக்கும் சில ‘மாஸ்’ தருணங்கள், இன்டர்வல் ப்ளாக் என முதல் பாதி நம்பிக்கை விதைக்கிறது.
 
இந்த நம்பிக்கையை இரண்டாம் பாதி மொத்தமாக சீர்குலைப்பது பெரும் சிக்கல். டி.ராஜேந்திரன் போல படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்பு செய்து தயாரிப்பு பணிகளையும் கவனித்துக்கொண்ட விஜய் ஆண்டனி இரண்டாம் பாதியையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
webdunia
குறிப்பாக, படம் முழுக்க அப்பட்டமாக திரையில் தெரியும் பலவீனமான கிராஃபிக்ஸ் காட்சிகள் நெருடல். அதேபோல தலைமைச் செயலகம் என கூறி சென்னை மாநகராட்சி கட்டிடத்தை காட்டுவது, துபாய் காட்சிகளுக்கான இடத்தேர்வுகள் சினிமாவுக்கான ஆக்கம் சேர்க்கவில்லை.
 
ஏழைகளுக்கான அவல நிலைக்கு பணக்கார முதலாளிகளின் ஆதிக்கம்தான் காரணம் என்பதை திரைமொழியில் கடத்தாமல் பிரசாரமாகவே பேசியிருப்பது, ‘கரோனா காலத்தில் உயிருக்கு போராடும் மக்களிடம் பணம் கேட்டு மருத்துவத்தை வியாபாரம் ஆக்கினார்கள்’ உள்ளிட்ட வசனங்கள் எடுபடுகின்றன. அதற்காக வசனங்களாகவே சொற்பொழிவாற்றுவது அயற்சி. ‘ஆன்டி பிகிலி’ என்ற வார்த்தையும் அதற்கான அர்த்தமும் புதுமை சேர்க்க, முதல் பாகத்திலிருந்த தாய்ப் பாசத்தை, இந்தப் பாகத்தில் தங்கைப் பாசமாக மாற்றிய ஐடியாவும் கைகொடுத்திருக்கிறது.
 
குறிப்பாக, படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் ‘ரமணா’, ‘நாயகன்’ தொடங்கி பல தமிழ் படங்களை நினைவுபடுத்துகின்றன. விஜய் ஆண்டனியை விடுவிக்க கோரி நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டியிருக்கும் கூட்டம், ‘இது முற்றிலும் வித்தியாசமான கேஸ்’ வழக்கறிஞரின் தேய்வழக்கு வார்த்தைகள் மற்றும் நீதிமன்ற காட்சிகள் க்ளீஷே.
 
‘நான்’ படம் தொடங்கி விஜய் ஆண்டனி தனது வழக்கமான ட்ரேட் மார்க் நடிப்பை கைவிடாமல் இப்படத்திலும் தொடர்ந்துள்ளார். இறுதியில் வரும் எமோஷனல் காட்சிகளில் நடிப்பில் அழுத்தம் கூட்டியிருக்கிறார். குறைந்த காட்சிகள் வந்தாலும் காவ்யா தாப்பர் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, யோகிபாபு நடிப்பு கதையோட்டத்துக்கு பலம். மன்சூர் அலிகான் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.
 
‘பிச்சைக்காரன்- 2’ படத்தின் மிகப் பெரிய பலம் அதன் பின்னணி இசை. விஜய் ஆண்டனி தனக்கான ஏரியாவில் இறங்கி அடித்திருக்கிறார். சில காட்சிகளில் அவரது இசை ரசிக்கும்படியாகவே இருந்தது. ஓம் நாராயண் ஒளிப்பதிவில் புதுமை தென்படவில்லை.
 
மொத்தமாக ‘பிச்சைக்காரன் 2’ காட்சிகளில் சுவாரஸ்யத்துகான பஞ்சம் மிகுந்து இருந்த வகையில் மட்டுமே படத் தலைப்புக்கு நியாயம் சேர்த்துள்ளது என இந்து தமிழ் திசை விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
‘பிச்சைக்காரன் 2’ பெரிய பணக்காரனாக இல்லாவிட்டாலும், புறக்கணிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் எழுதப்பட்டு இருக்கிறது.
 
பிச்சைக்காரன் படத்தைப் போலவே வெகுஜன ரசிகர்களை ஈர்க்கும் காட்சிகள் இருந்தாலும், அவை குறைந்த அளவில் இருப்பதே பிரச்னை எனவும், கதை ஆரம்பத்தில் இருந்தே யதார்த்தத்தில் இருந்து விலகி இருப்பதும் படத்தின் பலவீனமாக குறிப்பிட்டுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
 
‘பிச்சைக்காரன் 2’ கதையோட்டத்தில் பல்வேறு நெருடல்கள் இருந்தாலும், பாராட்டக்கூடிய அம்சமாக VFX காட்சிகள் இருப்பதாகவும், அவை முடிந்தளவு படத்திற்கு பிரமாண்டம் கூட்ட மெனக்கெட்டிருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அண்ணன்-தங்கை உணர்வுகளைக் கையாளும் ஃப்ளாஷ்பேக் பகுதிகள் பொதுவாக தமிழ் சினிமாவில் மிகையாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் சில இடங்களில் அது வேலை செய்கிறது. மேலும், இரண்டாம் பாதியில் வரும் பிகிலி எதிர்ப்பு தத்துவம், வறுமை, பசி மற்றும் சுகாதாரப் பற்றாக்குறை போன்ற சில உண்மையான பிரச்னைகளைப் பற்றி பேசுவது சுவாரஸ்யத்திற்கு உதவியிருக்கிறது.
 
விஜய் ஆண்டனி - இயக்குநராக சொதப்பியிருந்தாலும், எடிட்டராகவும், இசையமைப்பாளராகவும் நேர்த்தியான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். அதேபோல், ஒளிப்பதிவாளரின் பங்களிப்பும் படத்திற்கு பெரும் பலம் என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
 
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனத்தில், அழகிய பணக்காரர்கள் அனைவரும் தீயவர்கள், ஏழைகள் அனைவரும் நல்லவர்கள் எனும் பொதுவான கருத்தை போன்ற சில பொதுவான கருத்துக்களை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கிறது. மேலும், ஒரு விஷயத்தின் நுணுக்கம் குறித்து கவலைப்படாமல், மேலோட்டமாக கருப்பு, வெள்ளை நிற அளவிலேயே பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
 
மேலும் 'பணக்காரன் பணக்காரனாகிக் கொண்டே இருக்க, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான்' என்ற பழமொழி, ஒரு க்ளிஷே என்றாலும், அது உண்மைதான். ஏழைகளின் பேரழிவு நிலையைப் பற்றி படம் எடுக்கும் எண்ணம் உன்னதமானது, ஆனால் ’பிச்சைக்காரன்- 2’ படத்தின் பிரச்னை என்னவென்றால், படம் கூட ஒரு 'மாஸ் ஹீரோ'வை விற்க வறுமையின் தலைப்பைப் பயன்படுத்திக்கொள்வதைப் போலவே இருக்கிறது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
 
உல்டா பண்ணிய கதையா?
 
 
அதோடு, தற்போது விஜய், அஜித் கூட தனிமனிதனாக 'அனைத்தையும் செய்யும் படங்களில்' நடிப்பதை தவிர்த்து விட்டார்கள். அந்த இடத்தை தற்போது, ‘பிச்சைக்காரன்- 2’ பிடித்திருப்பதாக அந்த விமர்சனத்தில் தெரிவித்திருக்கிறது.
 
தினமலர், தமிழ் சினிமா எத்தனையோ ஆள்மாறாட்ட கதைகளை பார்த்துவிட்டது. தற்போது காலம் மாறிவிட்டதால், மூளை மாறாட்டக் கதைகளை பார்க்கும் அளவிற்கு கதாசிரியர்களின் கற்பனை வளர்ந்திருக்கிறது என ‘பிச்சைக்காரன்- 2’ விமர்சனம் எழுதியிருக்கிறது.
 
ரஜினிகாந்த் நடிப்பில் 1989-ல் வெளியான ‘ராஜாதி ராஜா’ படத்தின் கதையை கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்து மூளை மாற்று அறுவை சிகிச்சை எனும் மருத்துவத்தை சேர்த்து, பிச்சைக்காரன் முதல் பாகத்தின் அம்மா செண்டிமென்டை, தங்கை செண்டிமெண்டாக மாற்றி, அந்த பிச்சைக்காரர்களின் வலியைப் போக்க, பணக்காரனாக மாறிய பிச்சைக்காரன் என்ன செய்தார் என்பதுதான் ‘பிச்சைக்காரன்- 2’ படத்தின் கதை என பகடி செய்யும் வகையில் விமர்சனத்தை வெளியிட்டு இருக்கிறது.
 
மேலும், முதன்மைக் கதையில் இருந்து விலகிப் பயணிப்பதும் படத்திற்கு பெரும் பலவீனம் எனக் குறிப்பிட்டுள்ள தினமலர், ‘பிச்சைக்காரன்- 2’ பில்டப்காரன் எனவும் விமர்சனத்தில் பதிவு செய்திருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்கள் உணவு குழந்தை பெற்றுக்கொள்ளும் திறன்களை பாதிக்கிறதா?