Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவில் வரும் நவம்பர் 8ஆம் தேதி இடைக்காலத் தேர்தல்

Advertiesment
Joe Biden
, செவ்வாய், 1 நவம்பர் 2022 (22:16 IST)
அமெரிக்காவில் நவம்பர் 8ஆம் தேதி இடைக்காலத் தேர்தல்
 
அமெரிக்காவில் வரும் நவம்பர் 8ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த இடைக்காலத் தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது, இந்தத் தேர்தல் மூலம் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதைப் பார்க்கலாம்.

 
இடைக்காலத் தேர்தல்
 
அமெரிக்க நாடாளுமன்றம், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டு அவைகளைக் கொண்டது. இந்த இரு அவைகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அமெரிக்க அதிபரின் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு மத்தியில் இந்த தேர்தல்கள் நடைபெறுவதால், இது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது.

 
அமெரிக்க நாடாளுமன்றம் நாடு தழுவிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் கொண்டது. பிரதிநிதிகள் சபை ஆதரித்து வாக்களிக்கும் ஒரு சட்டத்தை செனட் சபையால் தடுக்கவும், அங்கீகரிக்கவும் முடியும். அதேபோல, அதிபரால் மேற்கொள்ளப்படும் நியமனங்களை இவர்களால் உறுதி செய்ய முடியும். தேவைப்பட்டால் அதிபருக்கு எதிராக விசாரணையும் நடத்த முடியும். ஆனால், அது அரிதாகவே நடக்கும்.

 
ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு செனட் சபை உறுப்பினர்கள் உண்டு. அவர்களது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். சிறிய மாவட்டங்களின் பிரதிநிதிகளாக இருக்கும் பிரதிநிதி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள்.

 
பிரதிநிதிகள் சபைக்கான அனைத்து உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக நவம்பரில் நடைபெறும் இந்தத் தேர்தலோடு, மூன்றில் ஒரு பங்கு செனட் உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறும்.

 
பல பெரிய மாகாணங்களில் ஆளுநர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கான தேர்தலும் நடைபெறும்.

 
யார் வெல்வார்?
கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு அவைகளிலுமே ஜனநாயக கட்சிக்கு இருந்த பெரும்பான்மை, தான் விரும்பிய சட்டங்களை நிறைவேற்ற ஜோ பைடனுக்கு உதவியாக இருந்தது.
 
பிரதிநிதிகள் சபையை குடியரசு கட்சிகள் கைப்பற்றலாம் என்றும் செனட் சபையில் ஜனநாயக கட்சியின் ஆதிக்கம் தொடரும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

 
பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 இடங்களில் பெரும்பாலான இடங்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு சாதகமாக இருக்கும் நிலையில், 30 இடங்களில் மட்டுமே கடும் போட்டி நிலவுகிறது. பென்சில்வேனியா, கலிஃபோர்னியா, ஓஹியோ மற்றும் வட கரோலினா ஆகிய மாநிலங்களில் உள்ள நகரங்களைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும்.

 
பிரேசில் அதிபர் தேர்தல்: வலதுசாரி போல்சனாரோவை தோற்கடித்த இடதுசாரி லூலு
கழிவறையில் டிரம்ப் அழித்த ஆவணங்கள்: புத்தகம் சொல்லும் ரகசியங்கள்
ரிஷி சூனக், கமலா ஹாரிஸ் மட்டுமல்ல.. மற்ற முக்கிய நாடுகளின் தலைமை பதவியிலும் இந்திய வம்சாவளி தலைவர்கள்
 
செனட் சபையின் 35 இடங்களுக்கான தேர்தலில் 4 இடங்கள் எந்தக் கட்சிக்கும் செல்லலாம். நெவாடா, அரிசோனா, ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய பகுதிகளில் கடும் போட்டிகள் இருக்கும்.

 
எது பெரிய பிரச்னை?
இந்தாண்டின் தொடக்கத்தில் வெளிநாட்டினர் குடியேற்றம், குற்றங்கள், வாழ்வாதார செலவினங்கள் ஆகியவை இந்தத் தேர்தலில் முக்கிய பிரச்னையாக எதிரொலிக்கும் என்றும் அவை பழமைவாத குடியரசு கட்சியினர் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

 
ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றம் தேசிய கருக்கலைப்பு பாதுகாப்புகளை ரத்து செய்தது அந்தச் சூழலை மாற்றிவிட்டது. கருக்கலைப்பு செய்வதற்கான உரிமை பெண்களுக்கு உள்ளது என்ற கருத்தை ஆதரித்துவரும் ஜனநாயக் கட்சியினர் அதை பல இடங்களில் தங்களுடைய பிரசாரத்தின் மையமாக்கியுள்ளனர்.

 
தற்போது அந்தத் தீர்ப்பின் தாக்கம் மக்கள் மத்தியில் குறைந்து வருவதால், பணவீக்கம், வெளிநாட்டினர் குடியேற்றம் மற்றும் வன்முறைக் குற்றங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி குடியரசு கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர்.
 
தேர்தல் முடிவுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
 
பொதுவாக இடைக்கால தேர்தல் முடிவுகள் என்பது அதிபர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதற்கான மக்கள் தரும் இடைக்கால தீர்ப்பாக இருக்கும்.

 
அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் முதல் வாக்காளர்கள் மத்தியில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான செல்வாக்கு கொண்ட அதிபர் ஜோ பைடனுக்கு இது கவலை தரக்கூடிய விஷயம் ஆக இருக்கிறது.

 
'ஜனநாயக கட்சி' ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்தால், காலநிலை மாற்றம், அரசின் சுகாதார திட்டங்களை விரிவுபடுத்துதல், கருக்கலைப்பு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான தனது திட்டங்களை அதிபர் பைடனால் தொடர முடியும்.

 
வெள்ளை மாளிகை
ஏதேனும் ஓர் அவையை குடியரசு கட்சியினர் கைப்பற்றினால் ஆளும் கட்சியின் முயற்சியை அவர்கள் தடுத்து நிறுத்தக்கூடும்.

 
அவர்களால் விசாரணைக் குழுக்களையும் கட்டுப்படுத்த முடியும் என்பதால் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களால் கடந்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி தலைநகரில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையையும் முடிவுக்கு கொண்டு வர முடியும். எவ்வாறாயினும், அந்த விசாரணைக் குழுவின் பணி இந்தாண்டு இறுதிக்குள் நிறைவடையும்.
 
 
ஜோ பைடன் மகனின் சீன வணிக நடவடிக்கைகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் திடீரென திரும்பப் பெற்றது ஆகிய விவகாரங்கள் தொடர்பாக புதிய விசாரணைகளையும் அவர்கள் தொடங்கலாம்.
 
 
 
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் உட்பட புதிய நியமனங்கள் ஜோ பைடனுக்கு இனி கடினமாக இருக்கலாம். மேலும், குடியரசுக் கட்சியினரின் ஆதிக்கம் பைடனின் வெளியுறவுக் கொள்கைகளையும் பாதிக்கும். குறிப்பாக, ரஷ்ய படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள யுக்ரேனுக்கு அமெரிக்கா உதவி வழங்குவதை பாதிக்கும்.

 
இதற்குப் பதிலடியாக, தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி கருக்கலைப்பு, குடியேற்றம் மற்றும் வரிகள் மீதான பழமைவாத சட்டங்களை ஜோ பைடன் நீக்கலாம்.

 
2024 அதிபர் தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
 
2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக யார் போட்டியிடலாம் என்பதற்கான குறிப்பை இந்த இடைக்காலத் தேர்தல் வழங்கலாம்.

 
டொனால்ட் டிரம்ப் ஆதரவு பெற்ற வேட்பாளர் மோசமாக செயல்பட்டால், குடியரசு கட்சி சார்பாக அதிபர் பதவியில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. குடியரசு கட்சியைச் சேர்ந்த ஃபுளோரிடா மற்றும் டெக்சாஸின் ஆளுநர்களான ரான் டிசாண்டிஸ் மற்றும் கிரெக் அபோட், அதிபர் பதவிக்கான போட்டியில் இந்த இடைக்கால தேர்தல் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.

 
மிஷிகன், விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியாவில் ஆளும் ஜனநாயக கட்சியினர் மாகாண ஆளுகையை பிடிக்க முடிந்தால், 2024ஆம் ஆண்டு தேர்தலில் அதிபர் பைடன் மீண்டும் போட்டியிடுவார் என்ற பிரசாரத்தை கட்டமைத்துவரும் அக்கட்சியினருக்கு அது நம்பிக்கையை அளிக்கும்.

Edited by Sinoj

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.100 கோடி கேட்டு தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடரும் இம்ராகான் !