Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்கா - இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா

Advertiesment
அமெரிக்கா - இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா
, செவ்வாய், 18 ஜூன் 2019 (21:21 IST)
இரானுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1,000 படை வீரர்களை அனுப்ப உள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் செயலாளர் பாட்ரிக் ஷானஹான், இரானிய படைகளின் "விரோத நடத்தைக்கு" பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஓமன் வளைகுடாவில் அண்மையில் நடந்த எண்ணெய் டேங்கர் தாக்குதலுடன் இரானுக்கு தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டுக்கும் புதிய படங்களையும் அமெரிக்க கடற்படை பகிர்ந்துள்ளது.
 
இரான் தனது அணுசக்தி செயல்பாடுகளை மட்டுப்படுத்துவதற்காக 2015ஆம் ஆண்டு சர்வதேச நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதிக்கு இனி இணங்காது என்று நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தது.
 
ஜூன் 27க்குள் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகளின் பயன்பாட்டு அளவு கட்டுப்பாடு தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட வரம்பை மீறவுள்ளதாகவும் இரான் கூறியுள்ளது.
 
கூடுதல் படை
 
இரானின் அறிவிப்புக்கு பிறகே, மத்திய கிழக்கு நாடுகளில் தனது படையை அதிகரிக்கும் முடிவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
 
"அமெரிக்கா இரானுடன் மோதல் போக்கை கையாளவில்லை", ஆனால் "எங்கள் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், பிராந்தியமெங்கும் பணியாற்றும் எங்களது இராணுவ வீரர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்யவும்" இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அமெரிக்க பாதுகாப்புத்துறையின் செயலாளர் பாட்ரிக் ஷானஹான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
"இரானின் அரசுப் படையும், அதன் ஆதரவு படைகளும் மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள அமெரிக்க படை வீரர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து வருவதாக எங்களுக்கு கிடைத்துள்ள உளவு தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் இரானின் சமீபத்திய தாக்குதல் சம்பவம் அமைந்துள்ளது" என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த பதற்றமான சூழ்நிலை குறித்த நகர்வுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணிக்கும் என்றும், தேவைப்பட்டால் படை வீரர்களின் எண்ணிக்கையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எனினும், தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள படைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எந்த பகுதியில் நிலைநிறுத்தப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓம் பிர்லா: புதிய மக்களவை சபாநாயகரின் சொத்து மதிப்பு மற்றும் குற்ற வழக்குகள் என்ன?