Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி அரசின் 3 ஆண்டு ஆட்சி: பத்து ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பு வீழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 28 மே 2017 (13:56 IST)
முப்பத்தி ஐந்து வயதான வினோத்குமார் யாதவ் வேலையில்லாதவர். கல்லூரி பேராசிரியராக விரும்பிய வினோத் முனைவர் பட்டம் (பி.எச்.டி) பெற்ற பிறகும் வேலை கிடைக்கவில்லை. உயர்கல்வியை முடித்தபிறகு, இரண்டு-மூன்று மாதங்களுக்கு மட்டுமே அவருக்கு தற்காலிக பேராசிரியர் வேலை கிடைத்தது.


 

 
தான் தேர்ந்தெடுத்த பாடப்பிரிவு சரியில்லை என்று கருதும் வினோத்குமார், அதனால்தான் கல்லூரிகளில் தமக்கு வேலை கிடைக்கவில்லை என்கிறார். பல ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருந்தாலும், அதற்கு ஆட்சேர்ப்பு நடக்கவில்லை என்கிறார் வினோத்.
 
31 வயதில் முனைவர் பட்டம் பெற்ற அவர், நிரந்தர வேலைக்காக அலைந்து-திரிந்து சோர்ந்து போய்விட்டார். 22 வயதில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, உத்தரப்பிரதேச மாநிலத்தின் அரசு பணியாளர் தேர்வை எழுதியிருந்தால், மாநில அரசு வேலையாவது கிடைத்திருக்கும், இப்போது அதற்கான வயதும் கடந்துவிட்டது என்று கூறி வருத்தப்படுகிறார் வினோத் குமார் யாதவ்.
 
இது வினோத்குமார் என்ற தனிநபரின் கதையல்ல, ஒவ்வோர் ஆண்டும் பட்டப் படிப்பை முடித்து, பட்டத்துடன், கனவுகளையும் சுமந்து கல்லூரியில் இருந்து வெளியேறும் கோடிக்கணக்கான இளைஞர்களின் கதை…. ஏனெனில் கடந்த ஏழாண்டுகளாக இந்தியாவில் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, புதிய வேலைகளுக்கான வாய்ப்புகள் இந்த ஆண்டு மிகக் குறைவாகவே இருக்கிறது.


 

 
2013 ஆம் ஆண்டு ஆக்ராவில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி பேரணியில், பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோதி, தான் வெற்றிபெற்று பிரதமரானால் ஆண்டுதோறும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
 
2017, மார்ச் ஐந்தாம் தேதியன்று பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் ஹேண்டிலில் வெளியிட்ட செய்தியின்படி, நாட்டில் வேலையின்மை குறைந்திருக்கிறது.
 
2016 ஆகஸ்ட் மாதத்தில் 9.5 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம், 2017 பிப்ரவரியில் 4.8 சதவிகிதமாக குறைந்திருக்கிறது என்று ஸ்டேட் பாங்கின் எக்கோ ஃபிளாஷ் கணக்கெடுப்பை மேற்கோள்காட்டி, டிவிட்டர் செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் தொழிலாளர் பிரிவின் புள்ளிவிவரங்களின்படி, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம் 84 சதவீதம் குறைந்திருக்கிறது. 2009-2010 ஆம் ஆண்டில் எட்டு லட்சத்து 70 ஆயிரம் புதிய வேலைகள் மக்களுக்கு கிடைத்தது, அதுவே, 2016 ஆம் ஆண்டில் புதிய வேலைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 35 ஆயிரமாக குறைந்துள்ளது.


 

 
அதாவது 2010 ஆம் ஆண்டில் இருந்த புதிய வேலைகளில் ஏழில் ஒரு பங்குதான் இப்போது கிடைக்கிறது. மக்கள் தொகையில், 60 சதவிகிதத்தினர் இளைஞர்களாக இருப்பதை இந்தியாவின் சக்தி என்று பிரதமர் வர்ணிக்கிறார். வேறு எந்த நாட்டிலும், இளைஞர்களின் எண்ணிக்கை இந்த அளவு அதிகமாக இல்லை.
 
"பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு' இந்த ஆண்டு வெளியிட்டிருக்கும் கணக்கெடுப்பின்படி, 15 முதல் 29 ஆண்டுகளாக 30 சதவிகித இளைஞர்களுக்கு எந்த வேலையும் இல்லை என்று கூறுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவர்களுக்கு பயிற்சியளித்து, வேலைக்கான வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.


 

 
2016 இல் 'இண்டியா ஸ்பெண்ட்' என்ற அமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 30 ஆண்டுகளில் இந்தியாவில் இரண்டரை கோடி புதிய வேலைகளுக்கான தேவை இருந்தபோதிலும், 70 லட்சம் பேருக்கு தான் வேலை கிடைத்துள்ளது.
 
தகவல் தொழில்நுட்பத்துறை பாதிப்பு
 
தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியமான ஐந்து-ஆறு நிறுவனங்கள், கடந்த சில மாதங்களில் 56 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கவலையளிப்பதாக, பொருளாதார துறையினரும், தொழிற்சங்கத்தினரும் கூறுகின்றனர். மிக அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கும் தகவல் தொழில்நுட்பத் துறை, பாதகமான சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்கள் தேசிய கூட்டமைப்பு நாஸ்காம் கூறுகிறது.
 
2016-17 ஆம் ஆண்டில், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு புதிய வேலைகள் கொடுக்கப்பட்டதாக நாஸ்காமின் தலைவர் ஆர்.சந்த்ரசேகர் தெரிவித்தார். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் அனைவரும் வேலைக்கு தகுதியானவர்களாக இருப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
 
மொத்த உற்பத்தி சரிவு
 
பொருளாதார விவகாரங்களில் அனுபவம் மிக்கவரும், மூத்த பத்திரிகையாளருமான எம்.கே. வேணு, பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பியில் பெருமளவு சரிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் ஜி.டி.பி 8.5 சதவிகிதமாக இருந்தபோதிலும், வேலைக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்ததாக கூறும் எம்.கே.வேணு, மோதி தலைமையிலான தற்போதைய ஆட்சியில் 7 சதவிகித ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் இருப்பதாக கூறப்பட்டாலும், உண்மையில் ஆறு சதவிகிதத்திற்கு கீழ்தான் வளர்ச்சி இருக்கும் என்று நினைப்பதாக குறிப்பிடுகிறார்.


 

 
தொழில்துறை உற்பத்தி ஒரு சதவீதம் குறைந்திருப்பதாக அவர் கருதுகிறார்.
 
உயர் மதிப்புக் கொண்ட நோட்டுக்களை விலக்கிக் கொண்ட அரசின் முடிவும் வேலையின்மைக்கு முக்கியமான காரணம். அரசு இதை ஒப்புக்கொள்ளாவிட்டாலும், இதுதான் நிதர்சனமான உண்மை என்று கூறும் வேணு, முந்தைய ஆட்சிக்காலத்தில் 3 முதல் 3.5 சதவிகிதமாக இருந்த தொழிற்துறை உற்பத்தி தற்போது 2 முதல் 2.5 சதவிகித அளவில் இருப்பதாக கூறுகிறார்.
 
தொழிற்சங்கங்கள் என்ன சொல்கின்றன?
 
"முதலாளித்துவ கொள்கை கொண்டவர்கள் இந்த மாதிரியை வடிவமைத்துள்ளனர். இத்தகைய தற்போதைய பொருளாதார அமைப்புதான் வேலையின்மைக்கான காரணம். இதனால் முதலாளிகளுக்கு நன்மை கிடைக்கிறது, சந்தையில் லாபம் கிடைக்கிறது, வேறு யாருக்கும் எந்தவித நன்மையும் இல்லை" என்று சங்க பரிவாருடன் தொடர்புடைய பாரதிய மஸ்தூர் சங்கத்தின் (பி.எம்.எஸ்) தலைவர், பிர்ஜேஷ் உபாத்யாய் கூறுகிறார்.
 
"இந்தியா வேளாண்மையை அடிப்படையாக கொண்ட நாடு, ஆனால் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஏற்றம் கண்ட தகவல் தொழில்நுட்பத்துறை தற்போது இறங்குமுகத்தில் உள்ளது, இந்தத் துறையை நம்பி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது" என்று அவர் மேலும் கூறுகிறார்.


 

 
தொழிலாளர்களின் தலைவரும், மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தை சேர்ந்தவருமான தபன் சென், "கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவுக்கு வந்திருக்கும் வெளிநாட்டு முதலீடுகள் இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கவே செலவிடப்பட்டுள்ளது" என்று கூறுகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் 'கிரீன்ஃபீல்டு திட்டம்' ஒன்று கூட இந்தியாவிற்கு வரவில்லை என்பதை குறிப்பிடும் அவர், தனியார் மயமாக்குவது பெரிய அளவில் நடைபெறுவதாலும் வேலையின்மை அதிகரிப்பதாக சொல்கிறார்.
 
உதாரணமாக, "பாதுகாப்பு துறையில் 273 பொருட்களின் உற்பத்தியில் 148 பொருட்கள் 'அவுட்சோர்ஸ்' அதாவது தனியார் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது., பாதுகாப்பு துறை உற்பத்தியில் அந்த நிறுவனங்களுக்கு முன் அனுபவம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இறுதியாக பாதுகாப்புத் துறை பொருட்களின் உற்பத்திக்காக நாம் வெளிநாட்டு நிறுவனங்களையே நம்பியிருக்கவேண்டும். இதன் விளைவு? நமது உற்பத்தித் திறமை முற்றிலுமாக முடிந்துபோய்விடும்".
 
வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், வேலைவாய்ப்புக்கான பரிந்துரைகளை அமைச்சகங்கள் அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளதாக பிரதமர் கூறியிருக்கிறார்., அவற்றின் மூலம் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கமுடியும் என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய ஒன்று.
 
முன்வைக்கப்படும் திட்டங்களில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோதி ஒவ்வொரு அமைச்சரவை கூட்டத்திலும் கேள்வி எழுப்புவார் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
 
இதைத் தவிர பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னர் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை.. நேரில் வரவழைத்து நிவாரணம் தந்த விஜய் மீது விமர்சனம்..!

இந்த ஆண்டு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா? நீதிமன்றம் கேள்வி..!

பள்ளி, கல்லூரி, விமான நிலையங்களை அடுத்து தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னைக்கு இனி வறண்ட வானிலை தான்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

வங்கதேசத்தில் இந்திய டி.வி., சேனல்களுக்கு தடையா? ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments