Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் நெருக்கடி: அணு ஆயுதத்தை எடுக்குமா ரஷ்யா?

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (15:44 IST)
ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். பலமுறை, புதின் இதைச் செய்ய மாட்டார் என்று நான் நினைத்தது பொய்த்துப்போயுள்ளது.

"நிச்சயம் அவர் கிரைமியாவை ஆக்கிரமிக்கமாட்டார்" - ஆக்கிரமித்தார்.

"டான்பாஸில் போரைத் துவங்கமாட்டார்" - துவங்கினார்.

"யுக்ரேன் மீதான முழு ஆக்கிரமிப்பைச் செய்யமாட்டார்" - செய்தார்.

"செய்யவே மாட்டார் என்ற சொல் விளாதிமிர் புதினுக்குப் பொருந்தாது என்ற முடிவுக்கு நான் வந்தேன்.

இப்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.

"அணு ஆயுதப் போரை அவர் தொடங்குவாரா?" என்பது தான் அது.

இது ஒரு பேச்சுக்காக எழுப்பப்படும் கேள்வி இல்லை. நேட்டோ தலைவர்கள் யுக்ரேன் விவகாரத்தில் கடும் கருத்துகளை வெளியிடுவதைக் குறிப்பிட்டு, தனது நாட்டு அணு ஆயுதப் படைகளைத் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளார்.

அதிபர் புதின் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். கடந்த வியாழன் அன்று அவர் தொலைக்காட்சியில் தனது "சிறப்பு ராணுவ நடவடிக்கை" (யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பு) பற்றி அறிவித்தபோது, அவர் அச்சுறுத்தும் எச்சரிக்கையொன்றை விடுத்தார் -

"வெளியில் இருந்து இதில் தலையிட நினைக்கும் எவருக்கும் - அவ்வாறு செய்தால், வரலாற்றில் நீங்கள் இது வரை சந்தித்திராத பெரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்பதே அது.

"புதினின் வார்த்தைகள் அணு ஆயுதப் போரின் நேரடி அச்சுறுத்தலாகவே ஒலிக்கின்றன" என்று நோபல் அமைதிப் பரிசு நோவயா கெஸெட்டா நாளிதழின் முதன்மை ஆசிரியர் பெற்ற டிமிட்ரி முரடோஃப் கூறுகிறார்.

"அந்த தொலைக்காட்சி உரையில், புதின் ரஷ்ய அதிபராக மட்டுமல்லாமல், உலகுக்கே தலைவர் போலவே தம்மைக் கருதிக்கொண்டிருந்தார். ஒரு காரின் உரிமையாளர் தனது சாவிக் கொத்தை விரலில் சுழற்றிக் காட்டுவது போல், புதின் அணு ஆயுத விசையைத் தம் கையில் கொண்டு சுழற்றிவருகிறார். ரஷ்யா இல்லை என்றால், உலகம் எதற்காக இருக்க வேண்டும்? என்று பல முறை கேட்டிருக்கிறார். யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இது ரஷ்யாவை அவர் விரும்பியபடி பிறர் நடத்தாவிட்டால், அனைத்தும் அழிக்கப்படும் என்ற அச்சுறுத்தலாகவே ஒலிக்கிறது."

2018 ஆவணப்படத்தில், அதிபர் புதின், "...ரஷ்யாவை யாரேனும் அழித்தொழிக்க முடிவு செய்தால், அதற்குத் தக்க பதிலடி கொடுப்பதற்கான சட்டபூர்வ உரிமை எங்களுக்கு உள்ளது. ஆம், அது மனித குலத்திற்கும் உலகிற்கும் பேரழிவாக இருக்கும். ஆனால் நான் ரஷ்யாவின் குடிமகன் மட்டுமல்ல. அதன் தலைவரும் கூட. ரஷ்யா இல்லாத உலகம் நமக்கு எதற்குத் தேவை?"

2022இல் வேகமாக முன்னேறிய புதின், யுக்ரேனுக்கு எதிராக ஒரு முழு அளவிலான போரைத் தொடங்கியுள்ளார், ஆனால் யுக்ரேனிய ஆயுதப் படைகள் கடுமையான எதிர்ப்பைக் காட்டுகின்றன; மேற்கத்திய நாடுகள் - ரஷ்யாவைத் திகைக்க வைக்கும் வகையில் - அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில், பொருளாதாரத் தடைகளை விதிக்க ஒரு மனதாக முடிவெடுத்துள்ளன. புதின் ஆட்சியை நிலைகுலையச் செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

"புதின் நெருக்கடியில் சிக்கியுள்ளார்" என்று மாஸ்கோவைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் பாவெல் ஃபெல்கன்ஹவுர் கருத்து தெரிவிக்கிறார். "ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துக்களை மேற்கு நாடுகள் முடக்கியதும், ரஷ்யாவின் நிதி அமைப்பு சீர்குலையும் நிலையில், அவருக்கு வேறு வழியில்லாமல் போகும். ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தைக் குறைப்பது என்ற வழியை அவர் தேர்ந்தெடுக்கலாம். அது ஐரோப்பிய நாடுகளை கீழே இறங்கி வர வைக்கும் என்று அவர் எதிர்பார்க்கலாம். மற்றொரு வழி, பிரிட்டனுக்கும் டென்மார்க்கிற்கும் இடையே உள்ள வட கடலில் எங்காவது ஒரு அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்து என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது."

விளாதிமிர் புதின் ஒரு அணு ஆயுதத்தைப் பிரயோகிக்க முடிவெடுத்தால், அவருடைய நெருங்கிய வட்டத்தில் உள்ள யாராவது அவரைத் தடுக்க முயற்சிப்பார்களா?

"ரஷ்யாவின் அரசியல் பெருந்தலைகள் யாரும் பொது மக்களுடன் இணக்கமாக இல்லை. அவர்கள் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவே எப்போதும் செயல்படுகிறார்கள்" என்கிறார் நோபல் பரிசு பெற்ற டிமிட்ரி முரடோஃப்.

மேலும் விளாதிமிர் புதினின் ரஷ்யாவில் ஆட்சியாளர் சர்வ வல்லமை படைத்தவர். கட்டுப்படுத்தும் எந்த எதிர் அமைப்பும் இல்லாமல் அதிபர் மாளிகை தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடிய நாடு ரஷ்யா.

"புதினை எதிர்த்து நிற்க யாரும் தயாராக இல்லை. நாங்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோம்" என்கிறார் பாவெல் ஃபெல்கன்ஹவுர்.

யுக்ரேனில் நடக்கும் போர் விளாதிமிர் புதினின் போர். கிரெம்ளின் தலைவரான ரஷ்ய அதிபர், தனது இராணுவ நோக்கங்களை எட்டிவிட்டால், இறையாண்மை கொண்ட நாடாக யுக்ரேனின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஆனால், ரஷ்யா பின்னடைவைச் சந்தித்தால், பல விபரீதமான முடிவுகளை எடுக்க அந்நாடு நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகும்.
குறிப்பாக "செய்யவே மாட்டார்" என்பது இனி பொருந்தாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments