ஒரு பாலைவனத்தில் உள்ள பெரும்பள்ளத்தில் பல தசாப்தங்களாக எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க துர்க்மெனிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
"கேட்வே டு ஹெல்" அல்லது "நரகத்தின் வாயில்" என்று அழைக்கப்படும் இந்தத் தீ சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கிறது. மேலும் சுகாதாரக் காரணங்களுக்காகவும், நாட்டின் எரிவாயு ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கத்துடனும் தீயை அணைக்க அதிபர் குர்பாங்குலி பெர்டிமுகாமேதோவ் உத்தரவிட்டுள்ளார்.
காராகும் பாலைவனத்தில் இந்தப் பெரும்பள்ளம் எப்படி உருவானது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. 1971-ஆம் ஆண்டு சோவியத் அரசின் எண்ணெய் தோண்டும் பணியின்போது ஏற்பட்ட தவறால் இந்தப் பள்ளம் உருவாகி இருக்கலாம் எனப் பலர் நம்புகிறார்கள்.
ஆனால் கனடாவைச் சேர்ந்த ஆய்வாளர் ஜார்ஜ் குரூனிஸ் 2013 இல் இந்தப் பள்ளத்தை ஆய்வு செய்துவிட்டு, அது எப்படி உருவானது என்பதை யாருக்கும் தெரியாது என்று கூறிவிட்டார்.
இந்தப் பெரும்பள்ளம் 1960களில் உருவாகியிருக்கலாம் என்றும், 1980களில் இருந்து எரியத் தொடங்கியிருக்கலாம் என்றும் துர்க்மெனிஸ்தானைச் சேர்ந்த நிலவியலாளர்கள் கூறுகிறார்கள்.
சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவித்தாலும், இந்த பள்ளம் துர்க்மெனிஸ்தானின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
"கணிசமான லாபத்தைப் பெற்று மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தக்கூடிய பல மதிப்புமிக்க இயற்கை வளங்களை நாம் இழந்து வருகிறோம்," என்று தனது தொலைக்காட்சி உரையில் அதிபர் கூறினார். "தீயை அணைக்க தீர்வு காண" அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
"நகரத்தின் நுழைவாயில்" தீயை அணைக்க இதற்கு முன்பும் பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 2010-ஆம் ஆண்டிலும் தீயை அணைக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்குமாறு நிபுணர்களுக்கு அதிபர் பெர்டிமுகாமேதோவ் உத்தரவிட்டார். ஆனால் அந்த முயற்சிகள் பலன் தரவில்லை.
2018ஆம் ஆண்டில், அந்தப் பள்ளத்துக்கு "காராகும்மின் பிரகாசம்" என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிட்டார்.