Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: "எப்படி என் மகனைக் காப்பாற்றப் போகிறேன் என்று நினைத்தேன்"

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (23:35 IST)
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இஸ்மாயிலும் அவருடைய மகன் முஸ்தஃபாவும்.
 
ஒவ்வொரு பெற்றோரையும் அச்சுறுத்தும் கனவு இது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உடனடியாக மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்க்கிறீர்கள்.
 
ஒரு சிறிய நிம்மதி பெருமூச்சுடன் ஒரு நிமிடத்திற்கு வெளியே செல்கிறீர்கள்.
 
அந்த தருணத்தில், வடக்கு சிரியாவில் உள்ள இட்லிப் மாகாணத்தை சேர்ந்த செய்தியாளர் இஸ்மாயிலின் வாழ்க்கையில் ஒரு கொடூரமான அனுபவம் ஏற்பட்டது.
 
உள்ளூர் நேரப்படி 04:18 மணிக்கு (01:18 GMT), ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப்பதிவான நிலநடுக்கம் அந்தப்பகுதியை உலுக்கியது. அவரைச் சுற்றியிருந்த எல்லாமே இரண்டு நிமிடங்களுக்கு பலமாக அதிர்ந்தன.
 
"பின்னர் நிலநடுக்கம் வலுப்பெற்றது," என்று அவர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
 
"மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் கண்ணாடியால் ஆன மருத்துவமனையின் நுழைவாயில் உடையத் தொடங்கியது."
 
சுமார் 150 மீட்டர் தொலைவில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுவதைக் கண்ட அவர், திடீர் இருளில் முற்றிலும் நிலைகுலைந்து போனார்.
 
ஒரு நிமிடத்தில் தனது மகன் முஸ்தஃபா அலறி அழுதபடி தன்னை நோக்கி ஓடிவருவதை அவர் பார்த்தார். கையில் போடப்பட்டிருந்த IV ஐ தானே பிய்த்தெறிந்த காரணத்தால் அவன் கைகளில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
 
இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அருகே ஒரு மணி நேரம் வரை யாராலும் செல்ல முடியவில்லை. மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்பட்டதால் அவர்களால் சிவில் பாதுகாப்பு பிரிவுகளை அழைக்க முடியவில்லை.
 
அல்-தானா, துருக்கியின் எல்லைக்கு அருகில் எதிர் பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம்.
 
எந்தவொரு அரசு சேவைகளும் இல்லாத நிலையில் அவசரகாலங்களில் முதலில் வந்து சேர்பவர்கள் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் மட்டுமே. ஆனால் பாதிக்கப்பட்ட அனைவரையும் அவர்கள் சென்றடைய முடியாத அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவு மிகப் பெரியதாக இருக்கிறது.
 
சில மணிநேரங்களுக்குப் பிறகு நிலைமையை மதிப்பிடுவதற்காக இட்லிப் மாகாணம் முழுவதற்கும் இஸ்மாயில் சென்றார்.
 
"சேதங்கள் விவரிக்க முடியாதவை," என்று அவர் கூறுகிறார். "சிரியா அரசு அல்லது ரஷ்யப் படைகளால் முன்பு குண்டுவீசித் தாக்கப்பட்ட பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.
 
2011 இல் சிரியா எழுச்சி ஒரு கடுமையான உள்நாட்டுப் போராக மாறியது. அங்கு ரஷ்யாவின் ஆதரவுடன் சிரியா அரசு, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைத் தாக்கியது.
 
இது ஒரு தேக்க நிலையை அடைந்தது. இப்போது வடமேற்கு சிரியா, சிரியா எதிர்ப்புப் படைகள் அல்லது டமாஸ்கஸ்ஸை தளமாகக் கொண்ட அரசால் கட்டுப்படுத்தப்படும் மண்டலங்களாக பிரிந்துள்ளன.
 
அலெப்போவின் வடக்கே உள்ள அடரேப் நகரில் டஜன் கணக்கான குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதை இஸ்மாயில் கண்டார்.
 
"உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக மீட்புக் குழுக்களால் அடைய முடியாத பல கட்டிடங்கள் மற்றும் பகுதிகள் உள்ளன. எங்களுக்கு உண்மையில் சர்வதேச அமைப்புகளின் உதவி தேவை," என்று அவர் கூறினார்.
 
விலைமதிப்பற்ற வளங்கள்
 
மருத்துவர் ஒசாமா சல்லூம், சிரியன் அமெரிக்கன் மெடிக்கல் சொசைட்டி (SAMS) அறக்கட்டளைக்காகப் பணிபுரிகிறார். இது எதிர் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கில் உள்ள பல மருத்துவமனைகளை ஆதரிக்கிறது.
 
"நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு நான் அடாரெப்பில் உள்ள SAMS மருத்துவமனையில் இருந்தேன்," என்று அவர் கூறுகிறார்.
 
"நான் மருத்துவமனையை விட்டு வெளியேறியபோது சுமார் 53 பேர் இறந்திருந்தனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை என்னால் கணக்கிட முடியவில்லை."என்கிறார் அவர்.
 
அந்த மருத்துவமனையில் மட்டும் இப்போதுவரை 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
 
அல்-டானாவில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் படுக்கை மீது விழுந்துள்ள இடிபாடுகள்.
 
இத்தகைய பேரழிவை சமாளிப்பதற்கான வளங்கள் மருத்துவமனைகளில் இல்லை என்று டாக்டர் சல்லூம் கூறுகிறார்.
 
"இடிபாடுகளில் இருந்து காப்பாற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் மேம்பட்ட உபகரணங்கள் தேவை," என்று அவர் கூறுகிறார். அடரேப் மருத்துவமனையில் ஒரு பழைய CT ஸ்கேனர் இயந்திரம் மட்டுமே உள்ளது.
 
பெரும்பாலான உதவிகள் துருக்கி வழியாக வருகின்றன. அவை கடுமையான எல்லை சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
 
துருக்கியும் மிகப்பெரிய மானுட நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், சிரியாவில் எதிர்ப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு என்ன பொருட்கள் சென்றடையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 
" தற்போது எங்களிடம் உள்ள மருத்துவப் பொருட்கள் தீர்ந்துவிட்டால், நாங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவோம்," என்கிறார் டாக்டர் சல்லூம்.
 
அதிர்ச்சியில் செயலிழப்பு
 
வடக்கில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
தனது முதல் பெயரைப் பகிர்ந்து கொள்வதில் மட்டுமே வசதியாக உணரும் ஆயா, லதாகியா நகரில் உள்ள தனது குடும்பத்தை சந்திக்கச்சென்றிருந்தபோது நிலநடுக்கம் தாக்கியது.
 
26 வயது சமையல் கலைஞரான அவர், தனது அம்மா மற்றும் மூன்று உடன்பிறப்புகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
 
 
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லடாக்கியாவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
"நான் படுக்கையில் இருந்து எழுந்தேன். ஆனால் என்னை எழுப்பியது என்னவென்று எனக்குத்தெரியவில்லை," என்று அவர் என்னிடம் கூறினார்.
 
"என்ன நடக்கிறது என்று எனக்குப்புரியவில்லை. அதற்குள் என் குடும்பத்தின் மற்றவர்களும் எழுந்துவிட்டனர்."
 
அவரது வீடு ஒரு முக்கிய சாலையில் உள்ளது. வீடு முழுவதும் கண்ணாடி ஜன்னல்கள் உள்ளன.
 
"நிலநடுக்கம் மிக வலுவாக இருந்ததால் எங்களால் நகர முடியவில்லை. நாங்கள் அதே இடத்திலேயே இருந்தோம்."
 
ஆயாவின் தாய்க்கு பார்கின்சன்ஸ் நோய் உள்ளது. அவர் மிகவும் பயந்து போனார்.
 
" நான் அதிர்ச்சியில் இருந்தேன். என்னால் நகர முடியவில்லை," என்கிறார் ஆயா. "சுவர்கள் எப்படி அசைகின்றன, முன்னும்
 
பின்னுமாக எப்படி நகர்கின்றன என்பதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்."
 
"சூழ்நிலை எவ்வளவு பீதி அளிப்பதாக இருந்தது என்பதை என்னால் விவரிக்க முடியாது."
 
ஹனீன் என்ற 26 வயது கட்டடக் கலைஞரும் லதாகியாவில் வசிக்கிறார். சுற்றுப்புறத்தில் உள்ள இளைஞர்கள் மக்களை மழையிலிருந்து பாதுகாக்க கூடாரம் அமைத்தார்கள் என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.
 
பொதுவாக இறுதிச் சடங்கின் போது துக்கம் அனுசரிப்பவர்களுக்காக கூடாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
அவரது தாய் சொந்த கிராமத்தில் பாதுகாப்பாக இருக்கிறார். ஆனால் ஹனீன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
"வீட்டை விட்டு வெளியேற நான் என் சகோதரிக்கு முதலில் உதவி செய்தேனா அல்லது நானே முதலில் வெளியேறினானா என்று எனக்குத் தெரியவில்லை. அவளிடம் இதைக்கேட்க என்னால் முடியாது," என்று அவர் கூறுகிறார்.
 
வீடு திரும்புவதற்கு முன் அவர்கள் உள்ளூர் பேக்கரியின் முன்னால் தஞ்சம் அடைந்தனர்.
 
 
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியாவின் சில பகுதிகளில் உதவிகள் சென்று சேரவில்லை என அஞ்சப்படுகிறது.
 
புயல் அடித்துக்கொண்டிருந்த நள்ளிரவில் டாக்ஸி அல்லது தங்குமிடம் கிடைக்காததால் ஆயா மிகவும் சிரமப்பட்டார்.
 
ஆயாவும் அவரது குடும்பத்தினரும் இறுதியாக டமாஸ்கஸ் சென்றடைந்தனர். ஆனால் லதாகியாவில் உள்ள சொந்த வீட்டிற்குத் திரும்புவது பற்றி தன்னால் சிந்திக்கமுடியுமா என்று தெரியவில்லை என்கிறார் அவர்.
 
"நாங்கள் போரை சந்தித்தோம். 2012 இல் எங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டோம்," என்று அவர் கூறுகிறார்.
 
"பூகம்பத்தின் நடுவில் எனக்கு ஏற்பட்ட உணர்வு போரின் போது நான் உணர்ந்ததை விட மிகவும் வித்தியாசமானது." என்கிறார் அவர்.
 
"அந்த நேரத்தில் என்னைச் சுற்றியுள்ள எல்லாமே சரிந்துவிடும் என்று நான் நினைத்தேன்," என்று அவர் கூறுகிறார்.
 
"நான் என் தாயையோ அல்லது சகோதரியையோ இழக்க நேரிடும் என்று பயந்தேன். அது மனதை கனமாக்கிய, கடினமான உணர்வு."
 
பாதுகாப்பாக டமாஸ்கஸ்ஸை சென்றடைந்தது கூட முழுமையாக உதவவில்லை.
 
நிலநடுக்கம் இன்னும் தொடர்வது போன்ற உணர்வு காரணமாக ஆயாவுக்கு பல மணி நேரம் தலை சுற்றிக்கொண்டிருந்தது.
 
"ஒரு காயம் மீண்டும் திறப்பது போல் இருந்தது. குணமடைந்துவந்த ஒரு பெரிய காயம் மீண்டும் திறந்துவிட்டது," என்று ஒரு தசாப்தத்திற்கும் மேலான உள்நாட்டுப் போரை நினைத்துப்பார்த்தபடி அவர் தெரிவித்தார்.
 
" விதிவிலக்கு இல்லாமல் சிரியாவில் உள்ள அனைவருக்கும் மூடிவந்த காயம் மீண்டும் உடைந்ததுபோல இருக்கிறது."
 
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியாவின் சில பகுதிகள் யாராலும் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்ற அச்சம் உள்ளது.
 
நிலநடுக்கமானது, போரின் மோசமான நாட்களை டாக்டர் சல்லூமுக்கு நினைவூட்டியது. குண்டுவீச்சுக்கு உள்ளான எதிர்பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு அலெப்போவில் அப்போது அவர் வசித்து வந்தார்.
 
"மரணம் நெருங்கிவிட்டது போல உணர்ந்தேன்," என்று அவர் கூறுகிறார். "கட்டடங்கள் மற்றும் பாறைகள் விழும் சத்தத்தை நான் கேட்டுக் கொண்டே இருந்தேன்."
 
நிலநடுக்கத்தின் முதல் சில நிமிடங்களின் குழப்பத்தை அவர் விவரிக்கிறார். மக்கள் பீதியடைந்து உதவிக்காக கூக்குரலிட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
 
"என்ன நடக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை," என்று அவர் கூறினார்.
 
"அது ஒரு கடினமான நாள். அதன் முடிவு இன்னும் கண்களுக்கு புலப்படவில்லை," என்கிறார் டாக்டர் சல்லூம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments