"இது தவறு. கொடுரமான தாக்குதல். தவறான தகவலின் அடிப்படையில் இது நடத்தப்பட்டுள்ளது" என்றார் உயிரிழந்தவர்களின் உறவினரான ரமீன் யூசுஃபி.
தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்த உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
தங்களது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியதில் அதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
ஆனால், இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐஎஸ் அமைப்பின் ஆப்கானிய கிளையுடன் தொடர்புடைய ஒருவர் இருந்த வாகனத்தை குறிவைத்து தாக்கியதாக அமெரிக்கா ராணுவம் கூறியுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சட்ட விரோதமானது என்று தாலிபன் அறிவித்துள்ளது.
தாக்குதலின்போது அருகேயிருந்த அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.