அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உள்ளடக்கிய, சீனாவுக்கு எதிரான ஒரு கூட்டுத் திட்டத்தை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வகுத்திருக்கின்றன.
இது சீனாவுக்கு எதிரானது அல்ல என்று அந்த நாடுகள் கூறினாலும் பாதுகாப்பு வல்லுநர்கள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உத்திசார்ந்த நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று கூறுகின்றனர்.
இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்திருக்கிறது. "சற்றும் பொறுப்பில்லாதது" என்று சீனா விமர்சித்துள்ளது. இந்தக் கூட்டுத் திட்டத்தின் பெயர் ஆக்கஸ் (AUKUS) ஆஸ்திரேலியா(AUS), பிரிட்டன் (UK) அமெரிக்கா (US) ஆகிய பெயர்களின் சுருக்கம்.
அணுசக்தி நீர்மூழ்கித் தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியாவுக்கு வழங்கி அதன் மூலலாக ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை நிலை நிறுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் புதிய கூட்டு உருவாகியிருக்கும் காலமும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய சில வாரங்களில் மூன்று நாடுகளும் இணைந்து புதிய உடன்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றன.
இந்த உடன்பாட்டில் கூறப்பட்டது என்ன?
உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, குவாண்டம் தொழில்நுட்பம், க்ரூஸ் ரக ஏவுகணைகளை வழங்குவது என பல்வேறு அம்சங்கள் இந்த உடன்பாட்டில் கூறப்பட்டிருக்கின்றன.
ஆனால் அவற்றுக்கெல்லாம் மேலாக நீர்மூழ்க்கிக் கப்பல்கள்தான் முக்கியமானவை. அவை தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் கட்டப்பட உள்ளன. அவற்றைக் கட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனையை அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்க இருக்கின்றன.
"ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் பிரமாண்டமான பாதுகாப்புத் திறன்களைக் கொண்டுள்ளது. எனவே பிராந்தியச் சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தம். உலகில் 6 நாடுகள் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளன. அவை அணு ஆயுதங்கள் அற்ற மிகவும் சக்திவாய்ந்த தடுப்பு ஆயுதம்" என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் மைக்கேல் ஷூபிரிட்ஜ்.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் வழக்கமான எரிபொருளில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை விட கண்டுபிடிக்க இயலாதவை. எதிரிகளின் பரப்புக்கு உள்ளேயே ஊடுருவிச் செல்லக்கூடியவை.
இவற்றில் அணு ஆயுதங்கள் இருக்காது. மாறாக இவை அணுசக்தி எரிபொருள் மூலம் இயங்குகின்றன. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் இருபது ஆண்டுகள் வரைகூட இவை தொடர்ந்து செயல்படும்.
ஆயினும் ஆஸ்திரேலியா அணு ஆயுதங்களைப் பெறப் போவதில்லை என்பதை அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஆக்கஸ் உடன்பாட்டின்படி குறைந்தது 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. எனினும் ஆஸ்திரேலியாவில் கட்டுமான வசதிகள் குறைவாக இருப்பதால் இந்தத் திட்டம் தாதமாகவே செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிகிறது.
சீனாவின் எதிர்வினை என்ன?
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்திருக்கிறது. "சற்றும் பொறுப்பில்லாதது" என்றும், "குறுகிய மனப்பாங்கு" கொண்டது என்றும் சீனா விமர்சித்துள்ளது.
"பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். ஆயுதப் போட்டியை உருவாக்கும்" என்று சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியான் கூறியுள்ளார்.
"இது காலாவதியான பனிப்போர் மனநிலை" என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்த மூன்று நாடுகள் தங்களது சொந்த நலன்களையே கெடுத்துக் கொள்ளப் போகின்றன என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சீனாவின அரசு ஊடகமும் இதுபோன்ற ஒரு தலையங்கத்தை வெளியிட்டிருக்கிறது. "ஆஸ்திரேலியா தன்னைத்தானே சீனாவின் எதிரியாக மாற்றிக் கொண்டிருக்கிறது" என்று "குளோபல் டைம்ஸ்" செய்தித்தாள் குறிப்பிட்டிருக்கிறது.
மூன்று நாடுகள் கூட்டின் முக்கியத்துவம் என்ன?
கடந்த 50 ஆண்டுகளில் முதன் முறையாக தனது நீர்மூழ்கித் தொழில்நுட்பத்தை பிற நாடுகளுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்ளப் போகிறது. இதற்கு முன் பிரிட்டனுக்கு மட்டுமே அந்தத் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த மூன்று நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் மிக உடன்பாடு இது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த உடன்பாட்டின் மூலம் அணுசக்தி நீர்மூழ்கியைப் பெறும் ஏழாவது நாடு என்ற பெயர் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்க இருக்கிறது.
கடலுக்கு அடியில் ஆய்வு செய்யும் தொழில்நுட்பம், சைபர் திறன்கள், உளவுத் தகவல்கள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வதும் இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக தெற்கு சீனக் கடலில் சீனா பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. பதிலுக்கு அமெரிக்காவும் அந்தப் பிராந்தியத்தில் தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவை ஒட்டி நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்துவது அமெரிக்காவின் செல்வாக்கை அதிகரிப்பதில் முக்கியமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் என்ன பிரச்னை?
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி சீனா. கடந்த காலத்தில் இரு நாடுகளும் நெருக்கமான உறவைக்கொண்டிருந்தன.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உறவில் கசப்பு ஏற்பட்டது. சீனாவில் இருக்கும் வீகர் இஸ்லாமியர்களின் மனித உரிமை குறித்து ஆஸ்திரேலியா விமர்சனம் செய்தது. சீனாவின் சில தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தடை விதித்தது. கொரோனா வைரஸின் மூலம் எது என்று விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இப்படியாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும்பிளவு ஏற்பட்டது.
பசிபிக் தீவுகளில் சீனா செய்துவரும் பரவலான முதலீடுகள் மேற்கத்திய நாடுகளையும் அதிருப்தியடைச் செய்திருக்கின்றன. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கும் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றன.
சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் துணையாக இருப்போம் என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கென் கூறியுள்ளார்.
"முதுகில் குத்தி விட்டார்கள்"
கசப்பான உறவைக் கொண்டிருக்கும் சீனா மாத்திரமல்ல, நெருங்கிய நட்பு நாடான பிரான்ஸும் ஆக்கஸ் உடன்பாடு குறித்து கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்காக நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைப்பதற்கு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான உடன்பாட்டை பிரான்ஸ் செய்து கொண்டிருந்தது. இப்போது கையெழுத்தாகி இருக்கும் புதிய உடன்பாட்டால் பிரான்ஸின் உடன்பாடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
"இது முதுகில் குத்தும் செயல்" என்று பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் லே ட்ரியன் கூறியுள்ளார்.
"நாங்கள் நம்பிக்கை கொண்ட உறவை ஆஸ்திரேலியாவுடன் வைத்திருந்தோம். அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது".