Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்பெயின் நாட்டுப் பிரதமர் டை கட்ட வேண்டாம் என்று வலியுறுத்தல்: காரணம் என்ன?

Advertiesment
ஸ்பெயின் நாட்டுப் பிரதமர் டை கட்ட வேண்டாம் என்று வலியுறுத்தல்: காரணம் என்ன?
, சனி, 30 ஜூலை 2022 (15:06 IST)
'டை' கட்டுவதை நிறுத்துங்கள் என்று நாட்டின் அனைத்து ஊழியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ். ஏன்? டை கட்டுவதை தவிர்ப்பதால் ஆற்றலை சேமிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 
புவி வெப்பமாதல் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், மனிதர்கள் தங்கள் ஆற்றலை சேமிக்கும் ஒரு வழிமுறையாக இதனை அவர் அறிவித்துள்ளார்.அதாவது, யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, எரி பொருள் தேவைகளுக்கு, ரஷ்யாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் முனைந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே இந்த திட்டத்தை அறிவித்துள்ளார் ஸ்பெயின் பிரதமர். ஏனெனில், ஸ்பெயின் ரஷ்ய எரிவாயுவை அதிகம் நம்பியுள்ளது.

இரண்டுக்கும் என்ன தொடர்பு?

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஸ்பெயின் நகரங்களில் வெப்பநிலை 36 முதல் 39 செல்சியஸை எட்டியது. ஐரோப்பிய நாடுகள் கடந்த சில வாரங்களில் உச்சகட்ட வெப்பநிலையை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் சான்ச்செஸ், தான் ஏன் டை அணியவில்லை என்பதைக் குறிப்பிட்டு, நாடு முழுக்க இருக்கும் அரசு, தனியார் ஊழியர்கள் அனைவரும் டை கட்டுவதைத் தவிர்க்கவேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

"இதன் மூலம் நாம் அனைவரும் ஆற்றலைச் சேமிக்க முடியும்" என்றார் அவர். மேலும், "இந்த நகர்வின் மூலம் நம் மக்கள் குறைந்த செலவில், குளிர்ச்சியாக இருப்பதை உறுதி செய்யமுடியும். காரணம், ஏசி குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், ஸ்பெயின் ஒன்றும் இந்த முன்னெடுப்பின் முன்னோடி அல்ல. 2011ஆம் ஆண்டே ஜப்பான் அதன் 'சூப்பர் கூல் பிஸ் (super cool biz)' பிரசாரத்தை தொடங்கியது. கோடையில் அனைவரும் குளிர்ச்சி தரும் உடையை அணிய ஊக்குவிப்பது இந்த பிரசாரத்தின் நோக்கம்.

அதேபோல, பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குள் இருக்கும்போது உறுப்பினர்கள் தங்கள் கோட்களை கழற்றி வைக்கலாம் என்றும் அண்மையில் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், சான்ச்செஸின் ஸ்பெயின் அரசாங்கம் ஒரு ஆற்றல் சேமிப்பு திட்டத்தை உருவாக்கி வருகிறது. எதிர்வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) இதற்கு ஒப்புதல் வழங்கப்படலாம்.

இந்த திட்டத்தின்படி, குளிர்காற்று வெளியேறாமல் இருக்கும்வண்ணம் கதவுகளை முடிவைக்க அறிவுறுத்தப்படும். இதேபோன்ற ஒரு விதி ஒரு வாரம் முன்புதான் பிரான்சிலும் பிறப்பிக்கப்பட்டது.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு, ரஷ்ய எரிவாயுக்காக அந்நாடைச் சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் உருவாக்கப்பட்ட, ஐரோப்பிய ஆணையத்தின் சுமார் 210 பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் கோடி ரூபாய் ) மதிப்புள்ள திட்டத்தின் பகுதிகள் தான் இந்த முன்னெடுப்புகள் எல்லாம்.

ஜெர்மனியும் இதைப் பின்பற்றுகிறது. அதன் நகரங்களில் ஒன்றான ஹானோவரில் பொதுக் குளங்கள், விளையாட்டு மையங்களில் மட்டுமே குளிர்ந்தநீர் குளியல் உண்டு என்று அறிவித்தது.

500+ மரணங்கள்

உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் வெப்பநிலையால், உலகெங்குமுள்ள அரசாங்கங்கள் தங்கள் ஆற்றல் சேமிப்பு மூலங்கள் குறித்து சூழலியல் ரிதியிலும் பொருளாதாரக் கோணத்திலும் மறுபரிசீலனை செய்து வருகின்றன. மனிதர்களால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தால் வெப்ப அலை உருவாகி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

தொழிற்புரட்சியின் தொடக்கத்தில் இருந்ததை ஒப்பிடும்போது உலகின் சராசரி வெப்பநிலை 1.1செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இந்த நேரத்திலும் நாடுகள் தங்கள் கார்பன் உமிழ்வை நிறுத்தாவிட்டால் வெப்பநிலை இன்னும் தொடர்ந்து அதிகரிக்கும்.

அதிகரிக்கும் செலவுகள், அண்மைக்கால வெப்ப அலைகள் ஆகியவற்றால் ஸ்பெயினில் இதுவரை 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடந்துள்ளன. ஐரோப்பாவில் மிகச்சமீபத்தில் வீசிய வெப்ப அலை காரணமாக "தேவையற்ற மரணங்கள்" நிகழ்ந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசி சென்ற வடமாநில இளைஞர்: பர்கூரில் பரபரப்பு