Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக் டாக் ஹாங்காங்கில் இருந்து வெளியேறியது; சீனாவின் சட்டத்தால் திடீர் நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (22:52 IST)
சமீபத்தில் 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு விதித்த தடையால் இந்தியாவில் இயங்க முடியாத நிலையில் இருக்கும் டிக் டாக் செயலி, ஹாங்காங்கில் தாமாக முன்வந்து இயங்குவதை நிறுத்தியுள்ளது.

ஹாங்காங்கின் மீது அதிகாரத்தைச் செலுத்தும் வகையில் ஒரு புதிய பாதுகாப்பு சட்டத்தைச் சீனா இயற்றியுள்ள நிலையில், அந்த பிராந்தியத்திலிருந்து வெளியேறுவதாக டிக் டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

''சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, ஹாங்காங்கில் டிக் டாக் செயலியின் செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளோம்'' என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் ஹாங்காங்கில் இருந்து டிக் டாக் நிறுவனம் வெளியேறும் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

உலகளவில் பார்வையாளர்களைப் பெறுவதற்காகச் சிறு வீடியோக்களை பதிவிடும் செயலியான டிக் டாக்கை, சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம் துவங்கியது.

டிக் டாக்கை போலச் சீனாவுக்குள் டூயின் என்ற செயலியையும் பைட் டான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது.

முன்பு வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலிருந்த கெவின் மேயர் தற்போது டிக் டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.

''டிக் டாக் பயனாளர்களின் தரவுகள் சீனாவில் சேகரித்து வைக்கப்படுவதில்லை'' என கெவின் மேயர் முன்பு கூறியிருந்தார்.

உள்ளடக்கத்தைத் தணிக்கை செய்யவோ அல்லது தரவை அணுகவோ சீன அரசு கோரிக்கை வைத்தால் அதற்கு இணங்க மாட்டோம் என்றும், அவ்வாறு செய்யும்படி இதுவரை யாரும் கேட்கவில்லை என்றும் டிக் டாக் நிறுவனம் முன்பு கூறியிருந்தது.

இருந்தபோதிலும், தற்போது ஹாங்காங்கில் இயற்றப்பட்டுள்ள பாதுகாப்பு சட்டம் மூலம் சீனாவுக்கு புதிய அதிகாரங்கள் கிடைத்துள்ளன. இதனால் தரவுகளின் தனியுரிமை பற்றிய அச்சங்கள் எழுந்துள்ளன.

இந்த புதிய சட்டத்தின்படி, நாட்டிலிருந்து பிரிந்து செல்லுதல், மத்திய அரசின் அதிகாரத்தைக் குறைத்தல், பயங்கரவாதம் - வன்முறையைப் பிரயோகித்தல் அல்லது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல், வெளிநாட்டு அமைப்புகளுடன் சேருதல் ஆகியவை குற்றமாக கருதப்படும்.

இதனால் ஹாங்காங்கின் சுதந்திரமும், சுயேச்சை அதிகாரமும் பெரிதும் பாதிக்கும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர், கூகுள், டெலிகிராம் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களும், ஹாங்காங்கில் தங்கள் செயல்பாடுகளில் மாற்றங்களைச் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன.

இந்நகரில் தற்போது அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தரவுகள் கோரி ஹாங்காங் காவல்துறையினர் விடுக்கும் கோரிக்கைகளை ஏற்கப்போவதில்லை என இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments