Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாயின் சடலத்தை குப்பையில் வீசிய தூத்துக்குடி இளைஞர்: 'வேறு வழியில்லாமல் செய்தேன்'

Advertiesment
தாயின் சடலத்தை குப்பையில் வீசிய தூத்துக்குடி இளைஞர்: 'வேறு வழியில்லாமல் செய்தேன்'
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (17:53 IST)
தூத்துக்குடியில் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த தனது தாயின் சடலத்தை அடக்கம் செய்யாமல் அவரது மகனே அப்பெண்ணின் சடலத்தை குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.


 
சடலத்தை அடக்கம் செய்யத் தம்மிடம் போதிய பணம் இல்லாததால் தாம் இவ்வாறு செய்ததாக 29 வயதாகும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
 
சாலையில் சென்றவர்கள் வசந்தி எனும் அந்தப் பெண்ணின் சடலத்தைக் கண்டபின் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்த இளைஞர் அதன்பின் காவல்நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டபோது, வறுமையால் தாம் இவ்வாறு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
 
தகவல் கிடைத்தபின் அந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாகவும், பின்னர் இறந்தவரின் சகோதரர் ஒருவரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டதாகவும் தூத்துக்குடியில் உள்ள சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

webdunia

 
அந்தப் பெண் வசித்த பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன் உயிரிழந்த 58 வயதாகும் பெண்ணின் உடல் எரியூட்டப்பட்டது.
 
இறந்தவர் யார்? அவர்களின் பின்னணி என்ன?
மதுரையைச் சேர்ந்த வசந்தி - நாராயணசாமி தம்பதி சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடியில் குடியேறினர். புரோகிதம் செய்து பொருளீட்டுவது அவர்களின் குடும்பத்திற்கு முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்துள்ளது.
 
 
சில ஆண்டுகளுக்கு முன்னர் நாராயணசாமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே , அவர் சென்னையில் உள்ள காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவித்தார் அந்த இளைஞர்.

webdunia

 
அதன்பின் வசந்தி தனது மகனுடன் தூத்துக்குடியில் உள்ள தனசேகரன் நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
 
சமீப மாதங்களாகத் தமது தாய் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் உயிரிழந்த அவரது உடலுக்கு சடங்குகள் செய்து, அடக்கம் செய்வதற்கான வசதி இல்லாததால், திங்களன்று அதிகாலை, குளிப்பாட்டி, உடை மாற்றி போர்வையில் சுற்றி குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் வைத்துவிட்டதாகவும் அந்த இளைஞர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
"நான்தான் இதைச் செய்தானா என்று எனக்கே தோன்றுகிறது; இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது," என்று அவர் கூறினார்.
 
அந்தரங்க உரிமை கருதி தமது பெயரை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். தாமும் அவ்வப்போது புரோகிதம் செய்து வருவாய் ஈட்டி வருவதாகத் தெரிவித்த அவர், உடலைப் போட்டுவிட்டு தாம் வெளியூருக்கு வேலைக்குச் சென்று விட்டதாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகளையும் மறுத்தார்.
 
இவ்வாறு செய்யக் காரணம் என்ன?
 
தாய் இறந்த துக்கத்தில் வெறுப்பு, விரக்தி போன்ற உணர்வுகள் ஏற்பட்டு தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கூட அந்த இளைஞர் அவ்வாறு செய்திருக்கலாம் என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய மனநல மருத்துவர் அசோகன். ஒருவேளை அப்போது உண்டான மறதியால்கூட அந்த இளைஞர் அவ்வாறு செய்திருக்கவும் வாய்ப்புண்டு என்கிறார் அசோகன்.
 
துக்கம் என்பது அமீபாவைப் ( 'அமீபா' என்பது உடல் உருவம் மாறிக்கொண்டே இருக்கும் தன்மை உடைய ஓரணு உயிரி.) போன்றது. அது எத்தகைய உருவத்தையும் பெறலாம். சிலர் அதை அழுகையாக வெளிப்படுத்துவார்கள்; சிலர் அதை மனதுக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்வார்கள்; ஆனால், அவ்வாறு செய்வது நீண்ட கால அடிப்படையில் மனநலம் மற்றும் உடல்நலத்தைப் பாதிக்கலாம் என்கிறார் அசோகன்.
 
தாய் இறந்த சமயம் போன்று ஆழ்ந்த துயரில் இருப்பவர்கள் அழாமல், அடக்கிக்கொண்டு தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக்கொள்ளும்போது யாருடனும் பேசாமல் இருப்பார்கள். ஆனால், காலம் ஆக ஆக இறந்தவரின் நினைவுகள், அவர்கள் நம்முடன் பேசுவதுபோல் தோன்றுவது ஆகியவை உண்டாகும்போது உள்ளே இருக்கும் துயரம் வெளிப்படும் என விவரிக்கிறார் அசோகன்.
 
துக்கம் உண்டாகும்போது அழுவது என்பது அந்தத் துயரில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரு வழி; சில மாதங்கள் வரையிலும், இறந்தவரின் முதல் நினைவுநாளை அனுசரிக்கும்போதும் மீண்டும் துக்கம் வெளிப்படும் என்று கூறும் அவர், துக்க உணர்வை அடக்க முயலாமல் வெளிப்படுத்தும்போது வெளியுலகம் குறித்த விழிப்புணர்வும், சுற்றி இருப்பவர்களுடன் இயல்பாகப் பழகுவதும் நிகழும் என அசோகன் தெரிவிக்கிறார்.
 
உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருந்ததால் இந்த இளைஞர் அவ்வாறு செய்திருக்கலாம்; அதனால் அவர் தாய் மீது அன்பு இல்லாமல் இருந்தார் என்றோ, அவரது மரணம் துக்கத்தை உணடாக்கவில்லை என்றோ கூற முடியாது, என்று அசோகன் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏறிக்கிட்டே போனா எப்படி?? ரூ.29,000 தாண்டிய தங்கத்தின் விலை!!