டிக் டாக் ரேட்டிங் குறைவதற்கு என்ன காரணம்? தடை செய்யப்படுமா செயலி?

வியாழன், 21 மே 2020 (10:05 IST)
கூகுள் ப்ளே ஸ்டோரில் டிக் டாக் செயலியின் ரேட்டிங் 1.3ஆக குறைந்துள்ளது. பல கோடி பயன்பாட்டாளர்களைக் கொண்ட டிக் டாக் செயலியின் ப்ளே ஸ்டோர் ரேட்டிங் திடீரென குறைய என்ன காரணம்?

யூட்யூப் மற்றும் டிக் டாக்

கடந்த சில தினங்களாக #bantiktok #tiktokdown #BanTikTokinIndia போன்ற டிக் டாக்கிற்கு எதிரான பல்வேறு ஹாஷ்டேகுகள் ட்விட்டரில் டிரண்டாகி வருகின்றன. மேலும் டிக் டாக் தளம் பல சமூக விரோத கருத்துகளை பகிர்வதற்கான தளமாக உள்ளது என கடும் விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கு தொடக்கமாக அமைந்தது டிக் டாக் பிரபலமான அமிர் சித்திக் என்பவர் பதிவிட்ட வீடியோ.

அமிர் சித்திக் யூட்யூபில் பிரபலமாக செயல்படக்கூடியவர்கள் டிக் டாக்கில் வருபவற்றை பயன்படுத்தி யூட்யூபில் நிகழ்ச்சி செய்கிறார்கள் என இண்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பதிந்துள்ளார்.

எனவே அவரை விமர்சித்து 18 மில்லியன் (ஒரு கோடியே 80 லட்சம் ) சப்ஸ்க்ரைபர்ஸை கொண்ட 'கேரி மினாட்டி' என அழைக்கப்படும் அஜெய் நகர் யூட்யூபில் வீடியோ ஒன்றை பதிந்துள்ளார். ஆனால் அவர் பதிந்த அந்த வீடியோ யூட்யூட் விதிமுறைகளை மீறியுள்ளதாக நீக்கப்பட்டுள்ளது.

YouTube

இதனால் யூட்யூப் மற்றும் டிக் டாக் பயனர்கள் இடையே இது ஒரு போட்டி போல உருவெடுத்தது.
பெண்களை தவறாக சித்தரிக்கும் வீடியோ

இந்நிலையில் டிக் டாக்கில் ஒரு கோடிக்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை கொண்ட வைசல் சித்திக் என்பவர் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசுவது போன்ற காணொளி ஒன்றை டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார். இது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது அதுமட்டுமல்லாமல் டிக் டாக்கில் பலர் இம்மாதிரியான பெண்களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதாக பல கண்டனங்கள் எழுந்தன.

இதில் இந்தியாவின் கலாசாரத்தை கெடுக்கும் விதமாக டிக் டாக்கில் பலர் வீடியோ பதிவிடுகிறார்கள் என்றும், இது சீன செயலி என்றும் எனவே அதைத் தடை செய்ய வேண்டும் என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

டிக் டாக் தடை:

அந்நிறுவனத்தின் வரலாறும், அது எதிர் கொள்ளும் சிக்கலும்

டிக் டாக் செயலிக்கு எதிராக தமிழக அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பு
வைசல் சித்திக் மீது நடவடிக்கை வேண்டும் என மும்பை டிஜிபி ஷுபோத்திற்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா கடிதம் ஒன்றை எழுதினார் மேலும் டிக் டாக் தளம் இளைஞர்களை ஒரு பயனற்ற வாழ்க்கைக்குத் தள்ளுகிறது என்றும் டிக் டாக் இந்தியாவில் முழுவதுமாக தடை செய்யப்பட வேண்டும் என இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுவிப்பதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

'இணையத்தில் வேண்டும் கவனம்'

டிக் டாக் குறித்துப் பல விமர்சனங்கள் எழும் நிலையில், டிக் டாக் மட்டுமல்ல எந்த ஒரு செயலியைப் பயன்படுத்துவதிலும் கவனம் தேவை என்கின்றனர் நிபுணர்கள்.

ஒரு செயலியைப் பயன்படுத்தும் போது அதன் ஆபத்தை உணர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றும், அந்த செயலியால் ஏதேனும் தவறு நேர்ந்தால் அதைச் சரியான முறையில் எதிர்கொள்வதற்கான மனப்பான்மையுடனே அதை நாம் பயன்படுத்த தொடங்கவேண்டும் என்கிறார் 'யூ டர்ன்' அயன் கார்த்திகேயன்.

சில சமயங்களில் கடைசி வரை நமது கவனத்திற்கே வராமல்கூட இந்த காணொளிகள் ஏதேனும் தளத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இணைய உலகத்திலிருந்து ஒரு காணொளியையோ அல்லது புகைப்படத்தையோ முற்றிலும் நீக்குவது என்பது ஒரு நெடிய மற்றும் கடினமான செயல்முறை எனவே நமது பாதுகாப்பு நமது கையில்," என்கிறார் கார்த்திகேயன்.

இதையேதான் தொழில்நுட்ப நிபுணர் விக்னேஷ்வரனும் கூறுகிறார். "டிக் டாக் மட்டுமல்ல எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் இந்த மாதிரியான ஆபத்துகள் இருக்கத்தான் செய்கிறது, முகநூல் மற்றும் வாட்சப் போன்றவற்றிலும் கூட போலி செய்திகள் பரவல், தனிநபர்களையோ அல்லது குறிப்பிட்ட பிரிவையோ இழிவுபடுத்துவது போன்ற தகவல்களைப் பரப்புதல் ஆகிய ஆபத்துகள் உள்ளன," என்கிறார் அவர்.

"தொடர்ந்து ஓர் இடத்திலிருந்து ஒரு வீடியோவை பதிவு செய்வதோ அல்லது ஒரு புகைப்படத்தைப் பதிவு செய்வதாலோ கூட ஆபத்துகள் உள்ளன. சில சமயங்களில் ஒரு செயலியை இன்ஸ்டால் செய்யும்போது அதற்கான செட்டிங்ஸ் குறித்தோ, அந்த செயலிக்கு எந்தமாதிரியான அனுமதிகளை நாம் கொடுக்கிறோம் என்பதிலேயோ நாம் பெரிதாக எந்த கவனமும் செலுத்துவதில்லை," என்கிறார் விக்னேஷ்வரன்.

"எனவே தற்போதைய சூழலில் ஒரு செயலி பயன்பாடு என்பது தனிமனிதர்களின் கட்டுப்பாட்டைப் பொறுத்ததே தவிர அதைத் தடை செய்வதால் பெரிதாக எந்த பலனும் இல்லை." என்கிறார் அவர்.

என்ன சொல்கிறது டிக் டாக்?

டிக் டாக் இந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "பாதுகாப்பான மற்றும் நேர்மறையான சூழலை உருவாக்குவதற்கே முதன்மைத்துவம் அளிக்கிறோம். எங்களின் தளத்தில் எது ஏற்றுக் கொள்ளப்படுகிறது, எது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என எங்களின் கொள்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே எங்களின் பயன்பாட்டாளர்கள் எல்லா நேரத்திலும் இந்த விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

கடந்த சில தினங்களாக எங்களின் விதிகளை மீறிய பல வீடியோக்களை நாங்கள் நீக்கியுள்ளோம். மேலும் விதிகளை மீறி நடந்தவர்களின் கணக்குகளை நீக்கியுள்ளோம்," எனத் தெரிவித்துள்ளது.

ரேட்டிங்கால் என்ன நடக்கும்?

இம்மாதிரியாக கூகுள் ப்ளே ஸ்டோரில் ரேட்டிங்கை குறைப்பதால் பெரிதாக ஒன்றும் நடக்கப்போவதில்லை. ஆனால் அதிக ரேட்டிங்கை பெற்ற செயலிகளின் பட்டியலில் இதை பார்க்க முடியாது. எதிர்காலத்தில் இதற்கான புதிய பயனர்கள் குறையலாம் அதாவது இதனை டவுன்லோட் செய்பவர்கள் குறையலாம். ஆனால் டிக் டாக்கிற்கு என இருக்கும் தனிப்பட்ட பயனர்கள் அதனைப் பயன்படுத்தாமல் நிறுத்துவார்களா என்றால் அதற்கு பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

கடந்த காலத் தடை

'பைட் டான்ஸ்' என்னும் சீன நிறுவனத்தால் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டிக் டாக்கிற்கு உலக முழுவதும் சுமார் நூறு கோடி பயனர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

டிக் டாக் தளம் சர்ச்சைகளை சந்திப்பது இது முதல் முறையல்ல. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், டிக் டாக் தளத்தில் ஆபாச வீடியோக்கள் பதியப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் டிக் டாக்கிற்கு மூன்று மாத தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் 1 லட்சத்து 12 ஆயிரம் பாதிப்புகளை தொட்ட இந்தியா! உச்சத்தில் மராட்டியம்!